உழவுக்கு வந்தனம் செய்வோம்!| Dinamalar

உழவுக்கு வந்தனம் செய்வோம்!

Added : அக் 31, 2014 | கருத்துகள் (5)
Advertisement
உழவுக்கு வந்தனம் செய்வோம்!

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் அவசியம். இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. விவசாயி 'சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்'.'தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு' என விவசாயத்தின் மகத்துவத்தை திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு விவசாயத்தின் நிலை என்ன?

விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது விவசாயம்.


அரசுவேலை வேண்டாம் :

விவசாயத்தோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தவர்கள் நம் முந்தைய தலைமுறையினர். 50, 60ம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை கிடைத்தாலும் போகவிட மாட்டார்கள்.'சாமி சண்டைக்காரனாப் போனாலும், பூமி என்றுமே நம்மைக் கைவிடாது' என்ற நம்பிக்கையில் வாழ்ந்தனர். 'நம்ம வீட்டுல நாலு பேருக்கு வேலைக்கு இருக்கும்போது, நீ அரசாங்கத்துக்கு வேலை பார்க்கப் போறீயா? நம்ம வேலைய (விவசாயம்) பாருடா, நாலுகாசு சம்பாதிக்கலாம்,' என்று வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது என்றே சொல்லலாம்.பணத்தைவிட நல்ல மனதைச் சம்பாதித்தவர்கள் விவசாய பெருமக்கள். அதனால்தான் மாதம் மும்மாரி பெய்தது என்றுகூடச் சொல்லலாம்.இன்றைய பிள்ளைகளிடம் விவசாயம் பற்றிக் கேட்டால், 'அது எந்தக் கடையில் விற்கிறது?' என்று கேட்கும் சூழ்நிலையில் உள்ளனர். எங்கள் தாத்தாவிடம் விவசாயம் பற்றி கேட்டால் போதும், பேசத் துவங்கிவிடுவார். அதில் ஒரு சிறுதுளிதான் நான் சொல்லப்போவது.


ஐந்து மன்னனுக்குச் சமம்:

'அணில்தாவா ஆயிரம் தென்னை உடையோன் ஐந்து மன்னனுக்குச் சமம்'. அது எப்படி என்று கேட்டால் 'ஆயிரம் தென்னை மரம் வைத்திருக்கும் ஒரு விவசாயியின் சொத்து, ஐந்து மன்னர்கள் வைத்திருக்கும் சொத்திற்கு சமமானது'. 'ஒரு தென்னைக்கும் மற்றொரு தென்னைக்கும் அணில் தாவ முடியாத அளவிற்கு இடைவெளி விட்டு நட வேண்டும்' என்பது இதன் கருத்து.மேலும் 'நண்டு ஓட நெல் நடணும்; நரி ஓட கரும்பு நடணும்; வண்டி ஓட வாழை நடணும்; தேர் ஓட தென்னை நடணும்' என்பதும் அனுபவம் சார்ந்த விவசாயி சொன்னதுதான். அவர்களுக்கு சென்டி மீட்டர் கணக்கெல்லாம் தெரியாது. இரண்டு சென்டிமீட்டர் இடைவெளி விட்டு பயிர் நடவேண்டும் என்று சொல்வது விவசாயிகளுக்கு புரியாத ஒன்று.நண்டு ஓடி வருமளவிற்கு இடைவெளி விட்டு நெல் நட வேண்டும். நரி ஓடி வருமளவிற்கு இடைவெளி விட்டு கரும்பு நட வேண்டும். (மாட்டு) வண்டி போய் வருமளவிற்கு இடைவெளி விட்டு வாழை நட வேண்டும். தேர் போய் வருமளவு இடைவெளி விட்டு தென்னை நட வேண்டும். அப்படியெனில் ஆயிரம் தென்னை மரங்கள் நட எத்தனை ஏக்கர் நிலம் வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.'கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளர்ச்சி பெறாது' என்பர். நாற்றங்கால் பயிர் என்பது என்ன? நாற்றுப் பாவுதல், தொழி கலக்குதல், பரம்படித்தல், வரப்பு மெழுகுதல், சூடடித்தல், வைக்கோல் படப்பு, மாகாணி, வீசம்படி, மரக்கால், கமலை இறைத்தல், சால், வடக்கயிறு, மேக்கா, கடாணிக்குச்சி, கொழு, சால் போடுதல், நாத்து ஊத்துதல், இன்னும் இதுபோல் நிறைய சொற்களை விவசாய பெருமக்கள் பயன்படுத்துகின்றனர்.


மின்னிப் பயறு :

மின்னி(சிறு)ப்பயறு என ஒன்றுண்டு. வானம் பார்த்த பூமியில் மழைக்காலத்தில் தானாக முளைக்கும் கொடிவகை. வாய்க்கால் வரப்புகளிலும் வளரும். இது பாசிப்பயறு காய் போல அளவில் சிறியதாக இருக்கும். காய் நெற்றாகி தானாக வெடித்துச் சிதறும்.இப்பயறை எறும்புகள் சேகரித்து தன்புற்றுக்குள் சேமிக்கும். இந்த எறும்புப் புற்று இருக்கும் இடத்தை வெட்டினால் அங்கே நிறைய மின்னிப் பயறு இருக்கும். அதை அப்படியே மொத்தமாக அள்ளிக் கொண்டு வருவர்.குறைந்தது கால்படியாவது இருக்கும். இப்பயறை வறுத்து, துவையல் அரைத்தும் சாப்பிடுவர். அப்படியே சாப்பிடவும் செய்வர். இது உடலுக்கு நல்லது என்பர். இதெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும். வாய்ப்பே இல்லை. பீட்சா, பர்கர், சான்ட்விச், ஜூஸ், கூல்டிரிங்க்ஸ் போன்றவைதான் இப்போதைய குழந்தைகளின் உணவுப் பழக்கமாக உள்ளது.எருவும், இனத்தானும்:


விவசாய பெருமக்கள் நிலத்தோடு மல்லுக்கட்டினர். 'எரு (இயற்கை உரம்) செஞ்சது மாதிரி, இனத்தான்கூட செய்ய மாட்டான்' என்று அதன்மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால்தான், உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். நம் கண்முன்னே நுாறு வயது வரை நோய்நொடி இல்லாமல் வாழ்கின்றனர்.இதுவே அடுத்து வரும் தலைமுறைக்கு வரலாறாக மாறிப்போகும். இயற்கை, விவசாயம் பற்றிய விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினருக்கு நாம் உருவாக்க வேண்டும். அன்று இஷ்டப்பட்டு விவசாயம் செய்தனர். வளமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். இன்று கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, மனஅழுத்தத்துடன் வாழ்கின்றனர்.


நஞ்சை உண்டு :


கவிஞர் நெல்லை ஜெயந்தா தனது புதுக்கவிதையில் விவசாய பெருமக்களைப் பற்றி,
'அன்று
நஞ்சை உண்டு
சாகுபடி ஆனது.
இன்று
நஞ்சை உண்டு
சாகும்படி ஆனது' என, வேதனையுடன் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

'உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' இது பழமொழி. உழவன் கணக்குப் பார்த்தான் என்றால், உலகத்து உயிர்கள்(மனிதன்) ஒன்றுகூட மிஞ்சாது' என்பது புதுமொழி.'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்; வீண் உண்டு ஊழல் செய்வோரை நிந்தனை செய்வோம்'.
-பேராசிரியை கெ.செல்லத்தாய்,
தமிழ்த்துறைத் தலைவர்,
எஸ்.பி.கே., கல்லூரி,
அருப்புக்கோட்டை.
94420 61060வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Ramesh - goa,இந்தியா
04-நவ-201412:08:17 IST Report Abuse
K.Ramesh விவசாயத்தில் விஞ்ஞானம் புகுந்து பலவிதத்தில் குழறுபடி செய்து, நம் நாட்டிற்கும் சீதோஷ்ண நிலைக்கும் ஒத்து வராத விதைகள், புச்சி கொல்லி மருந்துகள் புகுத்தி, பெருகி வரும் மக்களுக்கு உணவு தேவையை பூர்த்தி செய்ய உணவு தானியத்தின் தரத்தினை பேணாமல் உற்பத்தி யை மட்டும் பெருகியதால் மண் தன இயல்பினை இழந்தது. உண்ணும் மக்கள் நோய் தாக்கத்திற்கு ஆட்படுகின்றனர். பெருகி வரும் நீரழிவு நோய்க்கு கரணம் செயற்கை உரம் மற்றும் பூச்சி கொல்லி உபயோகம் ஆகும். 1 acre நிலத்தில் அதிக பட்ச நெல் உற்பத்தி செய்கிறோம். ஆனால் அந்த நெல்லில் எதனை சதவிகிதம் பூச்சி கொல்லி ரசாயனம் இருக்கிறது( residual pesticide ) என இந்தியாவில் ஆராய்வது இல்லை. ஆனால் அமெரிக்க ஐரோப்பாவில் ஆராய்ந்து அந்த உணவில் பூச்சி கொல்லி இருந்தால் அப்படியே குப்பையில் கொட்டி விடுவர். பழங்காலத்தில் கால்நடை கழிவுகள் நல்ல உரமாக இருந்தது. இப்போது கால் நடைகளையே காண்பது அரிதாக உள்ளது. அதே போல் பால் உற்பத்தியில் சிறிதும் கவனம் செலுத்துவது இல்லை. கால்நடை எண்ணிக்கை பெருக்க வேண்டும். மேய்ச்சல் நிலங்கள், நீர் நிலைகள் அதிகரிக்க பட வேண்டும். நாட்டில் நிலா பரப்பில் 3 இல் 1 பங்காவது வனமாக இருக்க வேண்டும். வேற்று நிலங்களில் முடிந்த அழவு வேம்பு, அரசு, அழ மரங்களை நட வேண்டும். மண்ணில் இயற்கை யாக nitrogeon சத்தினை நிலை நிறுத்தும் செடிகொடிகளை நட்டு வைக்க வேண்டும். அப்போது தன மண் வழம் பெரும்
Rate this:
Share this comment
Cancel
vanathi - Mississauga,கனடா
03-நவ-201419:17:14 IST Report Abuse
vanathi வானம் பாத்து செஞ்ச வெவசாயம் போயி .. இன்று மானம் பாத்து செய்யலாச்சு.. வெத நெல்லு கூட மரபணுமாறி .. இப்ப வெதவயாச்சு.. பசுமை புரட்சி என்ற முயற்சி ஏனோ .. வெறும் வறச்சியாச்சு... அயல் நாட்டு மருந்தெல்லாம் மகதத்துவமாச்சு.. நஞ்சயெல்லாம் நஞ்சாச்சு.. சாகுபடி சாகும்படியாச்சு.. எங்கிருந்தோ முண்டாசு கவியின் முரசொலிமட்டும் தோயா எதிரொலியாச்சு ... "நெஞ்சு பொறுக்குதில்லையே "
Rate this:
Share this comment
Cancel
vanathi - Mississauga,கனடா
03-நவ-201419:13:49 IST Report Abuse
vanathi வானம் பாத்து செஞ்ச வெவசாயம் போயி .. இன்று மானம் பாத்து செய்யலாச்சு.. வெத நெல்லு கூட மரபணுமாறி .. இப்ப வெதவயாச்சு.. பசுமை புரட்சி என்ற முயற்சி ஏனோ .. வெறும் வறச்சியாச்சு... அயல் நாட்டு மருந்தெல்லாம் மகதத்துவமாச்சு.. நஞ்சயெல்லாம் நஞ்சாச்சு.. சாகுபடி சாகும்படியாச்சு.. எங்கிருந்தோ முண்டாசு கவியின் முரசொலிமட்டும் தோயா எதிரொலியாச்சு ... "நெஞ்சு பொறுக்குதில்லையே"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X