Uratha sindhanai | சாட்டையை கையில் எடுங்கள்!| Dinamalar

சாட்டையை கையில் எடுங்கள்!

Added : நவ 01, 2014 | கருத்துகள் (13)
சாட்டையை கையில் எடுங்கள்!

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட, 'டாஸ்மாக்'கிற்கு போகும் கலாசாரம் உருவாகியுள்ளது. டாஸ்மாக் பற்றிய கவலைகள் மட்டுமின்றி, சில ஆசிரியர்கள், மாணவியருக்கு தரும் பாலியல் தொல்லைகள், மாணவர்களுடன் ஓரினச் சேர்க்கை தொடர்பான குற்றங்கள், மாணவர்கள் பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் விதம், 'ராகிங்' என்ற பெயரில், சக மாணவர்களை துன்புறுத்தும் செயல்கள் என, பலவிதமான செய்திகளும், அடிக்கடி செய்தித் தாள்களில் இடம் பெறுகின்றன.

தமிழ் சினிமாவில் வலம் வரும், 'வீரதீர' கதாநாயகர்கள் செய்யும் சேட்டைகளை உண்மை என்று நம்பி, தாங்களும் கதாநாயகர்களாக மாறத்துடிக்கும் அப்பாவி மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் நவீன பைக்குகளையும், பெரிய சைஸ் மொபைல்களையும் வாங்கித் தர சொல்கின்றனர்.தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வேலைக்கு அனுப்பி, லட்சங்களை அள்ளுவது ஒன்றையே கொள்கையாக வைத்திருப்பவர்கள் தானே, தற்கால பெற்றோர்!அக்கால மாணவர்களின் படிப்பு என்பது, அவர்களுடைய தனிப்பட்ட விருப்பமாக இருந்தது. தங்கள் அறிவிற்கு ஏற்ற கல்வியை, விரும்பி படிக்கலாம் என்ற சுதந்திரமும் இருந்தது. ஆனால் தற்காலத்தில், தங்கள் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும்; எங்கே படிக்க வேண்டும் என்பதையே, பெற்றோர் தான்
தீர்மானிக்கின்றனர்?ஒரு மாணவனோ, மாணவியோ தாங்கள் விரும்பும் படிப்பை படிக்கும், தாங்கள் விரும்பும் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இங்கே பறிக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையில் வன்முறை செயலே.

இன்றைய பெற்றோர், தங்கள் குழந்தைகளை விளையாட கூட அனுமதிப்பதில்லை. அற்புதமான வீடு கூட, இந்த இடத்தில் குழந்தைகளுக்கு சிறைச்சாலையாகி போகிறது.நடுத்தர வர்க்க பெற்றோரிடையே தற்போது பரவியுள்ள இந்த கல்வி மனநோய் காரணமாக, குழந்தைகளும் மெல்ல மெல்ல மனநோய்க்கு ஆளாகிப் போகின்றனர். 10ம் வகுப்பிற்குப் பின், சிறைச்சாலைகள் போல நடத்தப்படும் குறுக்குவழி கல்வி சிறைச்சாலையிலிருந்து, இரண்டு ஆண்டு கல்வித் தண்டனையை அனுபவித்து விடுதலை பெற்று வரும் மாணவன், கல்லூரிகளின் சேரும் போது சுதந்திரப் பறவையாகி விடுகிறான்.இரண்டு ஆண்டு மனஅழுத்தத்தையும், கேவலமான கல்வியையும் பெற காரணமான தங்கள் பெற்றோரை பழி வாங்க வேண்டும் என்ற ஆத்திரத்தின் காரணமாக, தங்கமான மாணவர்கள், திசை மாறிப் போகின்றனர்.

தற்போது, சென்னையில் கல்லூரி மாணவர்கள், 'பஸ் டே' கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்தும் அராஜக செயல்களால், பொதுமக்கள் அடையும் துன்பங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. காவல் துறையினர், தங்கள் கைகளுக்கு தாங்களே விலங்கிட்டு வேடிக்கை பார்க்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. காரணம், இத்தகைய சமூக சீர்கேடுகளை கண்டிக்க வேண்டிய சீர்திருத்தவாதிகள் சிலர், சுயநலத்திற்காக, அராஜகம் செய்யும் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கவும், தண்டிக்க வேண்டிய நேரத்தில் தண்டிக்கவும் வேண்டும். இல்லையென்றால், அது தவறு செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.

ஒவ்வொரு மாணவனும், மாணவியும் ஒரு நாளில் அதிகபட்சமான நேரத்தை, அதாவது எட்டு மணி நேரத்தை செலவிடுவது ஆசிரியர்களுடன் மட்டுமே. அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெய்வமாக தெரிந்தனர். ஆனால், தற்போதைய நிலைமையே வேறு. மாணவர்கள், ஆசிரியர்களை பார்த்து பயந்து, ஒழுக்கமாக நடந்தது போய், ஆசிரியர்கள், மாணவர்களை பார்த்து பயந்து நடக்கும் காலம் வந்து விட்டது.தவறு செய்யும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தண்டனை தரக்கூடாது என்று, சில நவீன மனித உரிமை ஆர்வலர்கள் துணை நிற்கும் போது, மாணவர்களுக்கு தவறு செய்தால் நமக்குத் துணையாய் நிற்க சிலர் இருக்கின்றனர் என்ற எண்ணம் இயல்பாகவே உருவாகிவிடுகிறது.

தற்போதைய சூழ்நிலையில், ஆசிரியர்கள் தங்கள் கைகளுக்கு தாங்களே விலங்கிட்டு, தங்கள் மாணவனோ, மாணவியோ சீரழிவை நோக்கிப் போகும் போது, வேடிக்கை பார்க்க வேண்டிய துர்பாக்கியமான சூழ்நிலையில் சிக்கியுள்ளார். இந்தநிலை நீடித்தால் எதிர்காலத்தில் மாணவர்கள் துப்பாக்கியுடன் பள்ளிக்கு வரும் சூழ்நிலை கூட உருவாகலாம்.ஆசிரியர்கள், காவல் துறை நண்பர்கள் என, எல்லாருமே ஒரு வகையில் பெற்றோரே. எல்லாருக்கும் மனதில் ஈரமும், சமுதாயம், நாடு குறித்த அக்கறையும் இருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கத் தான் செய்கிறது. நாமெல்லாம் ஒன்றாய் சேர்ந்து வளர்த்து விட்ட இந்த தலையாய பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது. ஆனால் சில விஷயங்களை யோசித்து, உடனடியாக
நிறைவேற்றி எதிர்காலத்தில் சரி செய்துவிடலாம்.

முதலில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் மனதில் நாட்டுப் பற்றை விதைக்கப் பழக வேண்டும். நம் நாட்டைப் பற்றிய உயர்வான விஷயங்களை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். படித்து முடித்து நம் நாட்டிலேயே வேலை செய்ய வேண்டும் என்று அவர்களிடம் போதிக்க வேண்டும்.வெளிநாடுகளில் தரப்படும் கணிசமான சம்பளம், தற்போது நம் நாட்டிலேயே கிடைக்கிறது. மேலும் ஆசிரியரை தெய்வமாக மதிக்க வேண்டும் என்றும், தவறு செய்தால் அவர் தரும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.பெற்றோர் தங்கள் விருப்பத்தை குழந்தைகளின் மனதில் திணிக்காமல், அவர்கள் விரும்பும் படிப்பை படிக்க உறுதுணையாக இருக்க வேண்டும். இன்றைய மாணவ, மாணவியர் பெற்றோரை விட நன்றாகவே முடிவெடுக்கின்றனர். பெற்றோர் தங்களுக்கு எத்தகைய வேலை பளு இருந்தாலும், தினமும் அரை மணி நேரம், தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக செலவழிக்க பழக வேண்டும்.

நம் குறிக்கோளும் மகிழ்ச்சியும் நம் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலம் தானே. தாங்கள் வாழ்க்கையில் சமாளித்த சிக்கலான சூழ்நிலைகளை பெற்றோர், அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கை என்பது விளையாட்டல்ல என்பது அவர்களுக்குப் புரியும்.நம் மாணவர்கள் உருப்பட வேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது... பெற்றோர், ஆசிரியர், காவல் துறையினர் ஆகிய மூவரும் அன்பு என்னும் சாட்டையைக் கையிலெடுக்க வேண்டும். இந்த சாட்டை வேலை செய்யவில்லை என்றால், உடனடியாக உண்மையான சாட்டையை கையிலெடுத்து, தவறு செய்யும் மாணவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் அந்தந்த நிமிடமே தண்டித்து திருத்த வேண்டும். நம் நாட்டின் மீது அக்கறை உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனும் இதை உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
'இ-மெயில்': rvpathi@yahoo.com

- ஆர்.வி.பதி
- எழுத்தாளர்
- கவிஞர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X