இளம் இயக்குனர்களின் இயக்கங்களில் இயங்கி கொண்டிருக்கும் சமீபகால தமிழ் சினிமாவில் கதையை கதாநாயகனாக்கி, யதார்த்தமான இளைஞனின் காதலை 'அட்ட கத்தி' படத்தில் மென்மையாக பதிவு செய்தவர். ஹீரோவின் அதிரடிஅறிமுகம், டூயட் பாட்டில் மட்டும் வந்து போகும் ஹீரோயின், என்றிருந்தவழக்கமான காட்சிகளை ஓரம் கட்டிவிட்டு நிஜ மனிதர்களின் கதாபாத்திரங்களை தன் 'மெட்ராஸ்' படத்தில் பிரதிபலிக்க வைத்து, 'இது தான் என் ஸ்டைல்'என அழுத்தமாக பதிவு செய்தவர் இயக்குனர் ரஞ்சித். மாறும் யுகங்களில் மாறாதசமுதாயத்தை மாற்றும் கதையுடன் திரையுலகில் கால் பதித்துள்ளார். அவருடன்...
* அட்டகத்தி, மெட்ராஸ் இரண்டும் சென்னை கதையாக இருக்கிறதே?
இதுவரை தமிழ் சினிமாவில் சென்னையின் புறநகர் பகுதியை மையமாக கொண்ட படங்கள் அதிகம் எடுக்கப்படவில்லை. சில படங்களில் வட சென்னை மக்களை அழுக்கு மனிதர்களாக தான் காட்டியிருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் இன்னொரு முகம் எப்படியிருக்கும் என்பதை சரியான முறையில் சொல்ல வேண்டும். அதனால் தான் என் படங்களின் கதை சென்னையை சுற்றி வருகிறது.
* மெட்ராஸ் கதை எழுதும்போதே கார்த்தி தான் ஹீரோ என முடிவு செய்தீர்களா?
கதை எழுதும் போது யார் ஹீரோ என்பதை முடிவு செய்யவில்லை. எழுதிய பின் என் நண்பர் மூலம் கார்த்தியிடம் கதையை கொடுத்து கருத்து கேட்க சொன்னேன். கதை நன்றாக இருக்கிறது நானேசெய்கிறேன் என்று கார்த்தி சொன்னதும், மெட்ராஸ் கதையைஅவருக்கான கதையாக மாற்றினேன்.
* இசை சந்தோஷ் நாராயணன், பாட்டு கானா பாலா; சென்டிமெனட் காரணமா?
சென்டிமென்ட் என்று சொல்ல முடியாது. அட்டகத்தி படம் இயக்கும் போது நான், சந்தோஷ் நாராயணன் எல்லாம் புதுமுகம். இப்போது சந்தோஷ் நாரயணன் அதிக படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வரிசையில் என்படமும் அவர் இசையில் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். கானா பாலா என் அண்ணனை போல. அவர் என் இரண்டு படங்களிலும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
* யதார்த்தமான விஷயங்களை படமாக்கும் போது உங்கள் மனநிலை?
இடங்களை கள ஆய்வு செய்து அதை காட்சிகளாக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும். காட்சியின் பின்னணியில் வரும் விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மெட்ராஸ் படத்தின் கதையை, 7 முறை மாற்றி எழுதி, 7 மாதங்ளுக்கு பின் வடிவம் கொடுத்த பின் தான் படப்பிடிப்பை தொடங்கினேன்.
* திரைப்படங்களுக்கு ஏற்படும் சர்ச்சை பலமா; பலவீனமா?
முதலில் சர்ச்சை உண்மையா, பொய்யா என்பதை பார்க்க வேண்டும்.பல தடைகளை தாண்டி ஒரு படத்தை எடுத்து வெளியிடும் போதுயாரே ஒருவர் கிளப்பும் சர்ச்சையால் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிபோகிறதே என்ற வருத்தம் ஒரு புறம் இருக்கும். சர்ச்சை வந்த பின் தான் ஒரு படம்அனைவராலும் கவனிக்கப்படுகிறது; இதுவும் ஒரு விளம்பரம் தான்.
* வெங்கட் பிரபுவிடம் பணியாற்றிய அனுபவம்?
வெங்கட் பிரபு ஒரு நல்ல நண்பர். அவருடன் சென்னை 28, கோவா, சரோஜா படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். எளிமையாக எப்படி சினிமா எடுப்பது என்பதை இவரிடம் தான் கற்றுக் கொண்டேன்.
* வன்முறை இல்லாமல் படம் எடுக்க முடியாதா?
மெட்ராஸ் படத்தில் சில இடங்களில் வன்முறை காட்சிகள் வருகிறது. அதுவும் 'குளோஸ் அப் ஷாட்' வைக்காமல் மறைமுகமாகத்தான் காட்டியுள்ளேன்.
* உங்கள் கதாபாத்திரங்களில் சுய பாதிப்பு உள்ளதா ?
கண்டிப்பாக உள்ளது. மெட்ராஸ் படத்தில் 'அன்பு' கதாபாத்திரம் என் சகோதரர், 'காளி' கதாபாத்திரம் என் நண்பன் என என்னை சுற்றியுள்ளவர்களை என் படத்தில் பிரதிபலித்துள்ளேன்.
paranjith.beema@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE