பால் விலை உயர்வு: பாவம் யார் பக்கம்?| Dinamalar

பால் விலை உயர்வு: பாவம் யார் பக்கம்?

Added : நவ 02, 2014 | கருத்துகள் (12)
பால் விலை உயர்வு: பாவம் யார் பக்கம்?

ஆவின் பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.10 என உயர்த்தி தமிழக அரசால் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணை, தற்போது பலராலும் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வாழும் பால் உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருப்பதாலும், பால் உற்பத்திக்கு ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருவதை கருத்தில் கொண்டும், பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், சில அரசியல் கட்சிகள் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றன.

தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்திய போதெல்லாம், பார்த்து ரசித்த அரசியல் கட்சிகள், இப்போது மட்டும் ஏன் குரல் கொடுக்கிறார்கள் என்பது விசித்திரம். தமிழக ஏழை விவசாயிகளுக்கு வருமான உயர்வு ஏற்படுவதை இவர்கள் விரும்பவில்லையா? ஏழை விவசாயிகளின் முன்னேற்றத்தை இவர்கள் விரும்பவில்லையா? இப்படிப்பட்ட சர்ச்சைக்கு இடையில், தமிழக அரசின் பால் விலை உயர்வால் ஏற்படும் சாதக, பாதகங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.


விலை உயர்வு புதிதல்ல :

ஆவின் பால் விலை உயர்வை எதிர்ப்பவர்கள், முதலில் இந்த விலை உயர்வு, இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டின் மிகப்பெரிய பால் கூட்டுறவு சங்கங்களான அமுல், மதர் டெய்ரி போன்றவை பால் உற்பத்திக்கு ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சமீபத்தில் பால் பொருட்களின் விலையை உயர்த்தியதன் தொடர்ச்சியாகவே இதனை பார்க்க வேண்டும். உயர்த்தி அறிவித்துள்ள ஆவின் விலை, தனியார் பால் நிறுவனங்களின் விலையோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவானது என்பது அவர்களுக்கு தெரியாதா?


ஏன் இந்த விலை உயர்வு?

பால் அத்தியாவசியமான பொருள் என்பதில், இரு கருத்துக்கள் இருக்க முடியாது என்ற போதிலும், இதன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழை விவசாயிகளுக்கு, இதன் மூலம் கிடைக்கும் வருமானம், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும். ஆவின் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக, ஏறக்குறைய 23 லட்சம் விவசாயிகள் தமிழகத்தில் உள்ளனர். பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான விவசாயிகள், ஏழைகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் என்பதும், வறுமைக்கோட்டின் ஓரமாகவே, பல காலமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் நாம் அறிய வேண்டிய விஷயம்.12வது ஐந்தாண்டு திட்டத்துக்காக அமைக்கப்பட்ட 'கால்நடைகள் பால் உற்பத்தி சம்பந்தப்பட்ட செயல் குழு' ஏறக்குறைய ஏழு கோடி விவசாய குடும்பங்கள் பால் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இவற்றில் 75 சதவீத குடும்பங்கள் நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இந்த ஏழை குடும்பங்களால் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கு தகுதியான விலை கொடுப்பது அவசியமல்லவா?


மாடு விலை உயர்வு :

கறவை மாடுகளின் விலை, பால் உற்பத்திக்கு தேவைப்படும் பசும் புல், புண்ணாக்கு, தவிடு, வைக்கோல் போன்றவை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கறவை மாடு வளர்ப்பவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். முன் எப்போதும் இல்லாத அளவு மேய்ச்சல் நிலங்கள் வேகமாக குறைந்து வருகின்றன. குளம் மற்றும் ஏரிகளின் பராமரிப்பு இல்லாமையால், கறவை மாடுகளுக்கு தேவையான பசும்புல், தண்ணீர் எளிதாக கிடைப்பதில்லை. இது போன்ற காரணங்களால் தீவனங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது; கறவை மாடுகளின் பராமரிப்பு செலவு பன்மடங்காக அதிகரித்துள்ளது. சில சமயங்களில் விவசாயிகள், தங்களின் மாடுகளை இறைச்சிக்காக குறைந்த விலைக்கு விற்கும் அவலம் அதிகரித்து வருகிறது. பாலுக்கு சரியான விலை கொடுத்து, இது போன்ற அவலங்களை தடுப்பது நமது கடமையல்லவா?


பால் உற்பத்தியும் வறுமை ஒழிப்பும் :

பால் விலை உயர்வை எதிர்ப்பவர்கள், சற்று தொலை நோக்குடன் இதனை பார்க்க வேண்டியது அவசியம். ஏழைகளுக்கு இந்த உயர்வானது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவது சரியல்ல. யார் அந்த ஏழைகள்? ஒரு சினிமா பார்ப்பதற்கு ரூ.100 முதல் 300 வரை கொடுப்பவர்கள் ஏழைகளா? ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு ரூ.150 வரை செலவு செய்யும், நகர்புற மக்கள் ஏழைகளா? கேபிள் 'டிவி' பார்ப்பதற்கு ரூ.400 வரை செலவு செய்பவர்கள் ஏழைகளா? ஒரு வேளை சாப்பாட்டுக்கு ரூ.100 செலவு செய்பவர்கள் ஏழைகளா?இந்தியாவில் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான விவசாயிகள் ஏழைகள். உலக வங்கியால் 1999ல் இந்தியாவில் நடத்தப்பட்ட 'கால்நடைத்துறை வளர்ச்சி' சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி அறிக்கையில், 'விவசாய வீழ்ச்சி காலங்களில் பெரும்பாலான குறு மற்றும் சிறு விவசாயிகளை பொருளாதார சிக்கலில் இருந்து காப்பாற்றி, அவர்களை வாழ வைப்பது கறவை மாடுகளின் மூலமாக கிடைக்கும் வருமானம் தான்' என கோடிட்டுள்ளது.


ஏழை விவசாயிகளின் சாதனை :

பல ஆண்டுகளாக பால் பொருட்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியாவை, தற்போது உலகின் அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றி அமைத்தது, இந்த ஏழை விவசாயிகள் அல்லவா? இன்று உலகின் தரம் வாய்ந்த பால் பொருட்களை உற்பத்தி செய்யும் குஜராத் மாநில அமுல் கூட்டுறவு சங்கங்களை வளரச் செய்து 'வெண்மை புரட்சி' ஏற்படுத்துவதற்கு உதவியது இந்த ஏழை விவசாயிகள் அல்லவா? அமுல் நிறுவனம் பாலுக்கு கட்டுப்படியான விலை கொடுத்து, வறுமையின் பிடியில் பல ஆண்டுகளாக சிக்கி தவித்து வந்த விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளது.கறவை மாடுகள் வைத்திருப்பவர்களின் நிலைமை, தமிழகம் போன்ற மாநிலங்களில் இன்று மிக மோசம். பாலுக்கு கிடைக்கும் விலை அவற்றிற்காக ஆகும் செலவை விட குறைவாக உள்ளதாக விவசாயிகள் கதறுகிறார்கள். விவசாயத்தில் வருமானம் வேகமாக குறைந்து வருகின்ற இக்காலக்கட்டத்தில், கறவை மாடுகளை நம்பியிருந்த குடும்பங்கள் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றன என்பது பலரும் அறியாத உண்மை.பால் விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும் என்று இன்று கோஷமிடுபவர்கள், பெரும்பாலான பால் உற்பத்தியாளர்களும் ஏழைகள் தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பால் உற்பத்திக்கு முறையான விலை கொடுத்து ஆதரிக்கவில்லை எனில், நாட்டில் வறுமை பெருகி விடும். அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள நிறுவனங்களில் பால் உற்பத்தி குறைந்தால், துாய்மையான பால் கிடைக்காமல் போய்விடலாம். எனவே, ஏழைகளை காப்போம் என்று சொல்லி தயவு செய்து பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழைகளை கொன்று விடாதீர்கள்!
அ.நாராயணமூர்த்தி,
தலைவர், பொருளியல் மற்றும்
ஊரக வளர்ச்சித்துறை,
அழகப்பா பல்கலை, காரைக்குடி.
narayana64@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X