தமிழ்நாடு

மாவட்டத்திற்கு 3,190 மெட்ரிக் டன் யூரியா வந்தது:தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டுகோள்

Added : நவ 05, 2014
Advertisement

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் நிலவி வந்த யூரியா தட்டுப்பாட்டை போக்கிட முதல் கட்டமாக நேற்று 3,190 மெட்ரிக் டன் வரவழைத்து அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. யூரியாவை, தேவையான அளவு பயன்படுத்த வேளாண் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில், நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 2 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. நாற்று நட்ட சில தினங்களில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக நடவுப் பயிர்கள் சேதமடைந்தன.மழையில் சேதமடைந்த பயிர்களைக் காப்பாற்றிட யூரியா உரத்தை விவசாயிகள் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால் தேவை அதிகரித்துள்ளது. மேலும், தற்போது மழை பெய்து வருவதால் முந்திரி விவசாயிகளும் யூரியாவை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தின் தேவை:யூரியாவைத் தவிர்த்து பிற உரங்களுக்கு வழங்கி வந்த மானியங்களை மத்திய அரசு ரத்து செய்து விட்டதால், யூரியா மட்டுமே விலை குறைவாக (50 கிலோ மூட்டை 271 ரூபாய்) கிடைப்பதால் விவசாயிகள் யூரியாவை பயன்படுத்தவே விரும்புவதால் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.இதனைப் பயன்படுத்தி தனியார் உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்கத் துவங்கிதால், விவசாயிகள் பலர், நாற்று நட்டு 15 நாட்களுக்கு மேலாகியும், மேலுரமாக யூரியா போட முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மாவட்டத்திற்கு நவம்பர் மாதத்திற்கு 6,700 மெட்ரிக் டன் யூரியா தேவை ஏற்பட்டுள்ளது.யூரியா வந்ததுஅதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக முதல் கட்டமாக இப்கோ நிறுவனம் மூலம் ஆந்திரா மாநிலம், காக்கி நாடாவிலிருந்து 3,190 டன் யூரியா சரக்கு ரயிலில் விருத்தாசலத்திற்கு நேற்று முன்தினம் வந்திறங்கியது. அதனை நேற்று லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள 167 தொடக்க வேளாண் கூட்டுறவு மையங்களுக்கு அனுப்பப்பட்டது.எஞ்சிய யூரியா அடுத்த வாரம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை விவசாயிகள் யூரியாவை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திட வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
யூரியா அதிகரித்தால் பூச்சி தாக்கும் :பயிருக்கு தழைச்சத்து அதிகரிக்கவே யூரியா பயன்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு 22 கிலோ யூரியா மேலுரமாக போட்டால் போதுமானது. கூடுதலாக பயன்படுத்துவதால் பயிர் செழித்து வளரும். இதன் காரணமாக பயிரில் பூ பூக்கும் காலம் தள்ளிப்போவதோடு, நோய் தாக்குதல் அதிகரிக்கும். அதைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்க வேண்டும்.அதன் காரணமாக கூடுதல் செலவினம் ஏற்படும். அப்படியே செய்தாலும் உற்பத்தி பாதிக்கும்.யூரியாவைத் தவிர்க்க ஆலோசனை இதனைத் தவிர்க்க விவசாயிகள், தங்கள் பகுதி வேளாண் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று நாற்று நட்டபின் முதல் களையெடுப்பின் போது (30 நாளில்) முதல் முறையாகவும், இரண்டாம் முறை களை எடுத்த பின் (பூ வைக்கும் பருவத்தில்) இரண்டாம் முறையாக ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவை மேலுரமாக பயன்படுத்தினால் போதுமானது.
யூரியா பயன்பாட்டை குறைத்திட ஏக்கருக்கு 4 கிலோ யூரியா, ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத் தெளிப்பான் மூலம் பயிர் நன்கு நனையும் படி தெளித்தால் போதுமானது. அல்லது 800 கிராம் அசோஸ் பைரில்லத்தை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து தெளித்தால், காற்றில் உள்ள தழைச் சத்தை பயிர்கள் கிரகித்துக் கொள்ளும்.மேற்கண்ட முறைகளை கையாண்டால் கூடுதல் செலவையும், பூச்சி தாக்குதலையும் தவிர்க்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X