ஐக்கிய நாடுகள்: 'அணு மின் நிலையங்கள், பயங்கரவாதிகள் போன்ற அரசுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் வசம் வீழாமல் இருக்க, அந்தந்த நாடுகளும், சர்வதேச நாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலை, விரைவில் செயல்படும்' என, இந்தியா, ஐ.நா.,வில் தெரிவித்தது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும், ஐக்கிய நாடுகள் அமைப்பில், சர்வதேச அணுசக்தி அமைப்பின் வருடாந்திர கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், ஐ.நா.,வுக்கான இந்திய அதிகாரி அபிஷேக் சிங், சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன: கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் உலை, கடந்த ஜூலையில் செயல்பட துவங்கி, இப்போது, 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான நிலையை அடைந்து வருகிறது. சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையத்தில், 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான இரண்டாவது உலை அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இன்னும் ஆறு மாதங்களில், அந்த அணு உலை தன் முழு உற்பத்தித் திறனை அடையும். தோரியத்தை அணு எரிபொருளாக கொண்டு செயல்படும் அணு மின் உலைகள் நிறுவுவதற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கனநீர் அணு உலை அமைப்பதற்கான இடத் தேர்வில் மும்முரமாக உள்ளோம். அணு கழிவு நீரில் உள்ள, மைனர் ஆக்டினைட்ஸ் எனப்படும் கழிவை தனியாக பிரிக்கும் தொழில்நுட்பத்தை, உலகிலேயே இரண்டாவது உலையாக, தாராப்பூர் அணு மின் ஆராய்ச்சி கழகம் மேற்கொண்டுள்ளது. இதனால், அணு கழிவுகளின் ஆயுள், 1,000 ஆண்டுகளில் இருந்து, 300 ஆண்டுகளாக குறைந்துள்ளது. அணு மின் நிலையங்கள், அணு சக்தி நிலையங்கள் போன்றவை, பயங்கரவாதிகள் போன்ற, நாடுகளுக்கு அப்பாற்பட்ட சக்திகள் கையில் வீழாமல் இருக்க, அந்தந்த நாடுகளும், சர்வதேச நாடுகளும் தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான நிதியத்திற்கு, நிதி மற்றும் நிதியல்லாத பிற உதவிகள் வழங்க இந்தியா தயாராக உள்ளது. புற்றுநோய் ஆராய்ச்சிக்கு, சர்வதேச அணுசக்தி கழகம், கூடுதல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அபிஷேக் சிங் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE