நியூயார்க்: அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் கட்டடம், பயங்கரவாதிகளால் தரை மட்டமாக்கப்பட்டதை அடுத்து, புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில், மீண்டும் வர்த்தக நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அங்கு உலக வர்த்தக மைய கட்டடம் இருந்தது. நியூயார்க் நகரின் அடையாளமாக திகழ்ந்த இந்த வர்த்தக மையம், இரட்டை கோபுரங்கள் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டன.இந்நிலையில், 2001 செப்டம்பர், 11ல், இந்த கோபுரங்களின் மீது, விமானங்களை மோதி, அல் - குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், அந்த இரண்டு கோபுரங்களும் தரைமட்டமாகின. இதில், 2,700 பேர் இறந்தனர். இந்நிலையில், அதே இடத்தில், புதிய உலக வர்த்தக மையம் கட்டடம் கட்டப்பட்டது. 104 தளங்களை கொண்ட இந்த கட்டடத்தின் பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து, 13 ஆண்டுகளுக்கு பின், உலக வர்த்தக மையத்தின் பணிகள், இங்கு மீண்டும் துவங்கியுள்ளன. 1,776 அடி உயரமுடைய இந்த கட்டடத்தில், அமெரிக்காவின், 'கோண்ட் நாஸ்ட்' என்ற ஊடக நிறுவனத்தின், 170 ஊழியர்கள் பணிகளை துவங்கியுள்ளனர்.மேலும், 3,000 தொழிலாளர்கள் அடுத்த சில மாதங்களில் பணியை துவக்கவுள்ளனர். புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தில், தரைமட்டமாக்கப்பட்ட பழைய கட்டடத்தின் புளூ பிரின்ட் மற்றும் மியூசியம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. உலக வர்த்தக மையத்தின் புதிய கட்டடத்தில், 13 ஆண்டுகளுக்கு பின் பணி துவங்கியுள்ளதை, நியூயார்க் நகர மக்கள் நேரில் வந்து, பார்த்ததுடன், பழைய நினைவுகளில் மூழ்கி, கண் கலங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE