திருவண்ணாமலை என்ற உடனே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது அருணாச்சலேஸ்வரரும் கார்த்திகை தீபமும்தான். ஒரு இறந்த எரிமலையாக புவியியலாளர்களால் கூறப்படுகிற திருவண்ணாமலை, பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக உள்ளது. இத்தகைய நெருப்பு நகரில் வறட்சி இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயமில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தின் வறட்சி காரணமாகவே அந்த மாவட்டத்தின் விவசாயமும் பசுமைச் சூழலும் சற்று நலிந்தே உள்ளது.
தமிழகமெங்கும் மரங்களை நட்டு தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் செயலாற்றி வரும் ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம், தற்போது திருவண்ணாமலையில் மேற்கொண்டிருப்பது ஒரு சவாலான செயலாகத் தெரிந்தாலும் சுற்றுச்சூழலுக்கும் விவசாயிகளுக்கும் அற்புதப் பலனளிக்கக் கூடிய செயலாகும். ஆம்! திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஈஷா பசுமைக் கரங்களின் மிகப்பெரிய அளவிலான நாற்றுப்பண்ணை வறட்சிக்கு சவாலாய் பரந்து விரிந்து வீற்றிருக்கிறது.
கிரிவலப் பாதையில் 7வது கி.மீட்டரில் ராகவேந்திரா கோயிலுக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள இந்த நாற்றுப்பண்ணையில், முக்கிய அம்சமாக, வறட்சியைத் தாங்கக் கூடிய டிம்பர் வேல்யூ உள்ள மரங்களான தேக்கு, குமிழ் தேக்கு, மகோகனி, செஞ்சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மஞ்சள் கடம்பு, காயா எனப் பல விலையுயர்ந்த மரங்களின் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
இதைத் தவிர எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்தேகமாக தயார் செய்து தரப்படுகிறது.
வடக்கு மாவட்டங்களின் மையத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலையிலிருந்து அதனைச் சுற்றியுள்ள விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி போன்ற மாவட்டங்களிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்படுகின்றன. விவசாயத்தை கைவிட்டு கூலி வே¬லைக்கு சென்ற பல விவசாயிகளுக்கு இந்த நாற்றுப்பண்ணை மூலம் வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.
வெகு விரைவில் ஈரோட்டிலும்...
திருவண்ணாமலையில் உருவாக்கப்பட்டிருப்பதைப் போலவே 8 முதல் 10 லட்சம் மரக்கன்றுகள் வரை உருவாக்கும்படியாக ஒரு விஸ்தாரமான நாற்றுப்பண்ணையை ஈரோட்டிலும் உருவாக்க ஈஷா பசுமைக் கரங்கள் திட்டமிட்டுள்ளது. தற்போது 1 லட்சம் மரக்கன்றுகள் வரை உற்பத்தி செய்யப்படும் ஈரோடு நாற்றுப் பண்ணையை உற்பத்தியிலும் அளவிலும் விரிவுபடுத்தி ஈரோட்டைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கன்றுகளை விநியோகிக்க ஈஷா திட்டமிட்டுள்ளது.
உருவாக்கப்படும் வேளாண் காடுகள்
நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஒரு அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மேலும், விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் விலை மதிப்புள்ள, அதிக நிழல் விழாத மரங்களை நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கனிசமான வருவாயை ஈட்டித்தரும். அனைவரும் வரப்பு ஓரங்களில் மரங்கள் நட்டால் வருவாயும் நாட்டிற்கு பசுமைப்பரப்பும் அதிகரிக்கும். ஊடுபயிராக நீர் மற்றும் மண் வளத்திற்கு ஏற்ற வகையில் மற்ற பயிர் வகைகளையும் பயிர் செய்துகொள்ளலாம்.
மேலும், ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் களைகளை கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்களையும் நேரில் வந்து அளிப்பார்கள்.
நாற்றுப் பண்ணைகள் அமைக்க இடம் கொடுங்கள்!
தமிழகமெங்கும் 50கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை 'ஈஷா பசுமை கரங்கள் திட்டம்' அமைத்துள்ளது.
தற்போது மரக் கன்றுகளின் தேவை அதிகரித்து வருவதால், புதிய நாற்றுப் பண்ணைகள் அமைப்பதற்கு இட வசதி தேவைப்படுகிறது. 5 வருடங்களுக்கு இடங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இடத்தை நன்கொடையாகவோ அல்லது குத்தகைக்கோ, வாடகைக்கோ நீங்கள் வழங்கலாம். நாற்றுப் பண்ணைகள் அமைக்க இடமளித்து உதவுவதன் மூலம் ஈஷாவின் இந்த பசுமைப் பயணத்தில் நீங்களும் உடன் பயணியுங்கள்!
ஊருக்கு அருகாமையில், ரோட்டோரத்தில் அமைந்துள்ள, ஓரளவு நீர் வளமுள்ள 50 சென்ட் வரை உள்ள இடத்தில் பண்ணைகள் அமைக்கப்படும்போது, கன்றுகளை நன்கு வளர்க்கவும் பண்ணைகள் மக்களை எளிதாகச் சென்றடையவும் வசதியாயிருக்கும்.
உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், புதிய நாற்றுப்பண்ணைகள் அமைக்க இட வசதி வழங்குவது குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொ. பே. 94425 90062