சாவடி இருப்பது மாநில எல்லை... சம்பாதிப்பதில் எல்லையே இல்லை!| Dinamalar

சாவடி இருப்பது மாநில எல்லை... சம்பாதிப்பதில் எல்லையே இல்லை!

Added : நவ 06, 2014
Share
மித்து! நான் சொன்ன அந்தக் கேள்வியை எழுதிட்டியா? கரெக்டா, கோர்ட் பீஸ் ஸ்டாம்ப் ஒட்டுனியா? பார்க்கலாம்...என்ன பதில் வருதுன்னு!,'' தலைமை தபால் நிலையத்தில், மித்ராவுக்கு 'இன்ஸ்ரக்ஷன்' கொடுத்துக் கொண்டிருந்தாள் சித்ரா.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பல தகவல்களைக் கேட்டு, பல்வேறு துறைகளுக்கும் இருவரும் சேர்ந்து மனுப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.''அக்கா! இது மக்கள்
சாவடி இருப்பது மாநில எல்லை... சம்பாதிப்பதில் எல்லையே இல்லை!

மித்து! நான் சொன்ன அந்தக் கேள்வியை எழுதிட்டியா? கரெக்டா, கோர்ட் பீஸ் ஸ்டாம்ப் ஒட்டுனியா? பார்க்கலாம்...என்ன பதில் வருதுன்னு!,'' தலைமை தபால் நிலையத்தில், மித்ராவுக்கு 'இன்ஸ்ரக்ஷன்' கொடுத்துக் கொண்டிருந்தாள் சித்ரா.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பல தகவல்களைக் கேட்டு, பல்வேறு துறைகளுக்கும் இருவரும் சேர்ந்து மனுப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.''அக்கா! இது மக்கள் கையில இருக்கிற ஆயுதம்னு யாருக்குமே தெரியுறதில்லை. எங்க சித்தப்பாவுக்கு ரேஷன் கார்டு வரலை; ஆர்.டி.ஐ.,.யில ஒரு மனுப்போட்டேன்; எனக்கு பதில் வர்றதுக்கு முன்னால, அவருக்கு ரேஷன் கார்டு வந்துருச்சு. ஹவுசிங் போர்டுல சில விபரம் கேட்டு, ஒரு மனு அனுப்பிருக்கேன். வரட்டும்...விபரம் சொல்றேன்!,'' என்றாள் மித்ரா.''ஹவுசிங் போர்டு மேட்டர் தான், ஊருக்குள்ள பத்திக்கிட்டு எரியுது மித்து!. பல வருஷமா வராத பத்திரத்தைக் கொடுக்கிறதுக்காகவே, சென்னையிலிருந்து இங்க 'போஸ்ட்டிங்' வாங்கிட்டு வந்த ஒருத்தர் தான், வசூல் தட்டி எடுக்கிறாரு!,'' என்றாள் சித்ரா.''கோயம்புத்துார் ஆபீஸ்ல, ஏற்கனவே 8 பேரு விஜிலென்ஸ்ல நேரடியா மாட்டிருக்காங்க. பல பேரு 'சஸ்பெண்ட்' ஆயிருக்காங்க. இன்னமும் இவுங்க திருந்தலையா?,'' என்றாள் மித்ரா.''ஓ....திருந்திட்டாங்களே. இப்பல்லாம், ஆபீஸ்ல வச்சு, இவுங்க பணம் வாங்குறதில்லை. வெளியில, அதுவும் ராத்திரியில தான் வாங்கிட்டு, பத்திரத்தைக் கொடுக்குறாங்க. பத்திரம் கொடுக்கிற ஆபீசரே, லுங்கியைக் கட்டிக்கிட்டு வந்து, கத்தை கத்தையா வாங்கிட்டுப் போறாரு!,'' என்று சித்ரா பேசும்போதே, மித்ராவுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.''பாலா! வரவர நீ 'கோல் மால்' கோபாலாயிட்ட...எப்ப தான் என்னோட 'பிராஜக்ட்'டை முடிச்சுக் கொடுப்ப. நாளைக்காவது கொண்டு வாடா!,'' என்று பேச்சைத் துண்டித்தாள். சித்ரா தொடர்ந்தாள்.''போன வாரத்துல, ஒரு பத்திரத்துக்கு 80 ஆயிரம் ரூபா இவரு வாங்கிருக்காரு. விஷயம் தெரிஞ்சு, பெரிய ஆபீசர் கேட்டதும், 'லீவு' போட்டு 'எஸ்கேப்' ஆயிட்டாரு. பணம் வாங்குன சில பேருக்கு, பணத்தைத் திரும்பக் கொடுத்துட்டு, புரோக்கர்களை 15 நாளைக்கு, ஆபீஸ் பக்கமே வர வேண்டாம்னு சொல்லிருக்காரு!,'' என்றாள் மித்ரா.''அக்கா! ஆர்.எஸ்.புரத்துல இருக்கிற ஹவுசிங் போர்டு 'கெஸ்ட் ஹவுஸ்'க்கு 15 ஆயிரம் ரூபா, 'கரன்ட்' பில் வந்திருக்கு. ஏன் தெரியுமா?,'' என்று சித்ரா சொல்லும்போதே, குறுக்கிட்ட மித்ரா, ''கெஸ்ட் ஹவுஸ்ன்னா இது கூட வராதா?,'' என்றாள்.''முழுசாக் கேளுடி! அங்க பல மாசமா ஆபீசருங்க யாரும் தங்கலை. இங்கயிருக்கிற எஸ்.இ.,க்கு 'குவாட்டர்ஸ்' கொடுக்கலைன்னு, அவருதான் ஒரு ரூமை எடுத்துக்கிட்டாராம். ஏ.சி., கீசர் எல்லாம் போர்டு கணக்குல ஓடுது. இன்னொரு ரூம்ல, கோயம்புத்துார் காலேஜ்ல படிக்கிற ஒரு ஸ்டூடன்ட் இருக்காரு. போர்டு தலையோட பையனாம். இன்னொரு ரூம், ஆபீசா இருக்கு!,'' என்றாள் சித்ரா.''அப்படின்னா, ஆபீசர்கள் தங்குறது...?,'' என்றாள் மித்ரா.''அவுங்க அக்ரி யுனிவர்சிட்டி கெஸ்ட் ஹவுஸ்ல தான் தாங்குறாங்க. என்ன அநியாயம் பார்த்தியா?,''''இதெல்லாம் அநியாயம்னு சொன்னா, ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபா, லஞ்சம் வாங்கிப் பங்கு போடுறதை நீ என்னன்னு சொல்லுவ?,'' ''அடேங்கப்பா! ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாயா...தலை சுத்துதுடி!,'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா! நம்ம ஸ்டேட் பார்டர்ல க.க.சாவடியில 'இன்', 'அவுட்'ன்னு ரெண்டு ஆர்.டி.ஓ., செக்போஸ்ட் இருக்கு. அங்க தான், இந்த வசூலு. நாளுக்கு 80 ஆயிரத்துல இருந்து ஒரு லட்ச ரூபா வரைக்கும் 'மாமூல்' வசூலாகுமாம். அங்க இருக்கிற ஒரு லேடி அசிஸ்டென்ட்டுக்கு தான், அதிகமான பங்காம்!,'' என்றாள் மித்ரா.''யார் யாருக்கு எவ்ளோ பங்கு?,'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.''அதுல 40 பர்சன்டேஜ், வெய்கிள் இன்ஸ்பெக்டர்களுக்குப் போயிருமாம். மத்ததை, அங்க 3 ஷிப்ட்ல இருக்கிறவுங்க பகுந்துக்கணும். ஆனா, இந்த லேடி, பெரிய ஆபீசர்களைக் 'கரெக்ட்' பண்ணி, ரெண்டு 'ஷிப்ட்' பாத்து, பெரும் பகுதி காசை எடுத்துர்றாங்களாம். இந்தம்மாவைச் சேர்த்து, 5 பேரு, அங்க இருக்கிற ரெண்டு செக்போஸ்ட்லயே மாறி மாறி காலத்தை ஓட்றாங்களாம்!,''''இந்த மாதிரி செக்போஸ்ட்களுக்கு எத்தனை லட்ச ரூபா கொடுத்தாலும், ஒரு வருஷம் தான் அங்க இருக்க விடுவாங்க. அடுத்த வருஷத்துக்கு மறுபடியும் அதே 'அமவுன்ட்' தரணுமே!,''''கரெக்ட்! இந்த செக்போஸ்ட்ல வேலை பார்க்கணும்னா, 15 லட்ச ரூபா கொடுக்கணும். ஆனா, இந்த லேடி மட்டும், பல வருஷமா அங்கேயே ஓட்றாங்களாம். யாரோட ஆதரவுன்னே, இங்க இருக்கிற மத்த ஆபீசருங்களுக்கே தெரியலை!,'' என்றாள் மித்ரா.அப்போது டூவீலரில் வந்து இறங்கிய ஒரு பெண்ணைப் பார்த்த சித்ரா, ''ஹேய்! பத்மா...என்னடி இப்பிடி ஆயிட்ட? ஓன் உடம்புக்கு இந்த வண்டி பத்துமா? முதல்ல உடம்பைப் பாருடி!'' என்று அட்வைஸி விட்டு, மித்ராவிடம் திரும்பினாள்.''இப்பல்லாம் லேடி ஆபீசருங்க தான், தைரியமா லஞ்சம் வாங்குறாங்க. சொத்துக்குவிப்புல மாட்டுனாலும், 'லேடி'ங்கிறதுக்காக மக்கள் இரக்கப்படுவாங்கன்னு நினைக்கிறாங்களோ?,'' என்று சிரித்தாள் சித்ரா.''அக்கா! நீ ஏதோ அரசியல் பேசுறது மாதிரி இருக்கு!,'' என்ற மித்ரா, ''போன வாரத்துல, நம்மூர்ல ஒரு அரசியல்வாதி பண்ணுன வேலை இருக்கே....!,'' என்று காட்டமாய்த் துவங்கினாள்.''நீ ஏன்டி நாகம் மாதிரி சீறுற...?,'' என்று ஆசுவாசப்படுத்தினாள் சித்ரா.''அப்புறம் என்னக்கா? நம்மூர்ப் பொண்ணு ஒன்னு, மெட்ராஸ்ல படிக்கிறப்ப அங்க ஒரு பையனை 'லவ்' பண்ணிருக்கா. அவன் 'மேரேஜ்' பண்ணிக்கிறதாச் சொன்னதை இவளும் நம்பி, அவன் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போயிருக்கா. கடைசியில, ஏமாத்திட்டான். இதை விட வசதியான பொண்ணாப் பாத்து, கல்யாணம் பண்ண முயற்சி பண்றப்ப, புலியகுளத்துல இருக்கிற பெண் போலீஸ்ட்ட 'கம்பிளைன்ட்' பண்ணிருக்கா!,''''அய்யய்யோ! அங்க இருக்கிற 'பாப்' கட்டிங் ஆபீசர், நல்லவுங்க மாதிரியே நடிச்சு, நல்லா காசு பண்ணுவாங்களே...அங்கயா மாட்டிக்கிட்டா?,''''சாட்சாத் அதே ஆபீசர்ட்டதான்...அவுங்க மட்டுமில்லாம, ஊட்டியிலயிருந்து வந்த இன்னொரு 'பாப் கட்டிங்' ஆபீசர்ட்டயும் வசமா சிக்கிக்கிட்டா. ரெண்டு பேரும் சேர்ந்து, 'கமுக்கமா 'காம்ப்ரமைஸ்' ஆயிப்போயிரு'ன்னு அந்தப் பொண்ணை மெரட்டிருக்காங்க. பேக் கிரவுண்ட் என்னன்னு பார்த்தா, இந்த அரசியல்வாதி தான், இந்த ஆபீசர்களுக்குப் போனைப்போட்டு, 'அந்த பையன் எங்க கட்சிக்காரரோட பையன். பொண்ணை மெரட்டி அனுப்பி விடுங்க'ன்னு சொல்லிருக்காரு. இதுக்கு தான், இவருக்கு ஓட்டுப்போட்டு டில்லிக்கு போக வச்சாங்களா நம்ம மக்கள்?,'' என்று கொதித்தாள் மித்ரா.''ரெண்டு மாசமா, ஆளும்கட்சிக்காரங்க சில பேரு, நம்மளை யாரு கண்டுக்கப்போறாங்கங்கிறது மாதிரித் தான் நடந்துக்கிறாங்க? இது எங்க போய் முடியுமோ தெரியலை!,'' என்றாள் சித்ரா.''வேற யாருக்கா இப்பிடிப் பண்றாங்க?,'' என்றாள் மித்ரா.''கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் ஏரியாவுல இருக்கிற கடைகள்ல எல்லாம்...ஆளும்கட்சி கவுன்சிலர் ஒருத்தரு, அவரோட பொண்ணு கல்யாணத்துக்காக செம்ம வசூல் நடத்திருக்காரு. ஏற்கனவே, அங்க இருக்கிற தள்ளுவண்டி, பிளாட்பாரம் கடைகள்ல எல்லாம், ஒரு நாளுக்கு நுாறு ரூபாலயிருந்து, 500 ரூபா வரைக்கும் வசூல் பண்ணிட்டு இருக்கிறது அதே கவுன்சிலர் தான்!,'' என்றாள் சித்ரா.''அட...'சோக்'கான வசூலா இருக்கே!. கிராஸ்கட் ரோடுன்னதும் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வந்துச்சு. அங்கயிருக்கிற, ஒரு பெரிய ஜவுளிக்கடையில, சில மாசங்களுக்கு முன்னால, நம்ம சிட்டி சேச்சி துணி எடுத்திருக்காங்க. முதல் தடவைன்னு, அந்த கடை ஓணரு, 'பணம் வேண்டாம்'னு சொல்லிருக்காரு. அப்புறம் பார்த்தா, மாசாமாசம் மகள்களையும், மத்த மகளிரணி நிர்வாகிகளையும் கூப்பிட்டு வந்து, அஞ்சு, பத்துன்னு சேலைகளா அள்ளிட்டுப் போயிர்றாராம்!'' என்றாள் மித்ரா.''மித்து! நம்ம மாவட்ட வி.ஐ.பி.,ட்ட பி.ஏ.,வா இருக்கிற இன்ஜினியர் ஒருத்தரோட ஆட்டம் தாங்கலையாம். எல்லா டிபார்ட்மென்ட் ஆபீசர்களையும் கூப்பிட்டு, தாறுமாறாப் பேசுறாராம்!,'' என்று சித்ரா சொல்லும்போதே, ''அக்கா! போஸ்ட் பண்ணிட்டு சீக்கிரம் கிளம்புவோம்; தேவராஜ் அண்ணா என்னைப் பார்க்க வீட்ல 'வெயிட்' பண்றாராம்'' என்று அவசரமாய்க் கிளம்பினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X