வள்ளியப்பா: வளரும் பிள்ளைக்குப் பள்ளியப்பா: நாளை (நவ.7) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த நாள்| Dinamalar

வள்ளியப்பா: வளரும் பிள்ளைக்குப் பள்ளியப்பா: நாளை (நவ.7) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த நாள்

Updated : நவ 07, 2014 | Added : நவ 06, 2014 | கருத்துகள் (6)
வள்ளியப்பா: வளரும் பிள்ளைக்குப் பள்ளியப்பா: நாளை (நவ.7) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த நாள்

அழ.வள்ளியப்பா 07.11.1922-ல் புதுக்கோட்டை அருகே உள்ள ராயவரத்தில் பிறந்தார். உயர்நிலை படிப்பை முடித்த நிலையில் வள்ளிப்பா சென்னை சென்று வங்கிப் பணியை மேற்கொண்டார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்களும், 'மஞ்சரி' ஆசிரியர் தி.ஜ.ர.வின் வழிகாட்டலும் அவரைக் குழந்தைக் கவிஞர் ஆக்கின. 1944ல் கவிஞரின் முதல் குழந்தை இலக்கியப் பாடல் தொகுதியான 'மலரும் உள்ளம்' வெளிவந்தது. அதன் பின் வாழ்நாள் முழுவதையும் குழந்தைகளுக்கே - குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கே - காணிக்கை ஆக்கினார் வள்ளியப்பா.

1954-ல் 'மலரும் உள்ளம்' நுாலின் பெரிய தொகுதி, பின்பு அதன் இரண்டாம் பகுதி, தொடர்ந்து 'சிரிக்கும் பூக்கள்' என்னும் பெயரில் மூன்றாம் தொகுதி வெளிவந்தன. குழந்தை இலக்கிய வரலாற்றில் வள்ளியப்பாவின் இம்மூன்று தொகுதிகளும் முத்தமிழ் போல பேறு பெற்றவை; முக்கனி போலச் சுவை பயப்பவை. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்களில் மிகுந்த புகழ் பெற்ற நான்கு வரிகள் இவை:

''ஏடு துாக்கிப் பள்ளியில்இன்று பயிலும் சிறுவரேநாடு காக்கும் தலைவராய்நாளை விளங்கப் போகிறார்!” கவிஞரின் குறிக்கோள்

“குழந்தைகள் இன்பமே எனது இன்பம். அவர்களுக்குத் தொண்டு செய்வதே என் முக்கியக் குறிக்கோள்” என 'மலரும் உள்ளம்' தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் வள்ளியப்பா குறிப்பிட்டிருப்பார். குழந்தைப் பாடல்களைப் படைப்பதோடு நின்று விடாமல், குழந்தை எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பெருமையும் வள்ளியப்பாவுக்கு உண்டு.மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் வள்ளியப்பா பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:“தமிழில் நான்கு வகையான பாக்கள் உண்டு என்பது தெரியும். ஆனால், என்னைப் பொறுத்த வரை பா வகைகள் ஐந்து. அவை ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வள்ளியப்பா!”

''வள்ளியப்பா ஒரு புள்ளியப்பா - அவர்வரையும் பாக்கள் வெள்ளியப்பா!வளரும் பிள்ளைக்குப் பள்ளியப்பா - இளைஞர்வருங்கா லத்திற்குத் தங்கமப்பா!”என்பது கொத்தமங்கலம் சுப்புவின்புகழாரம்.


எளிமை-, இனிமை-, தெளிவு:

குழந்தைப் பாடல் எளிமை, இனிமை, தெளிவு ஆகிய பண்புகளையும் தன்னகத்தே கொண்டதாக விளங்க வேண்டும். வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்களில் இம் மூன்று பண்புகளும் கொலுவிருக்கக் காணலாம்; கூடவே குழந்தைகளின் ஆளுமையைச் செதுக்கும் வகையில் ஒரு நல்ல செய்தியும் பொதிந்திருக்கும். ஓர் எடுத்துக்காட்டு:

''அணிலே, அணிலே, ஓடிவா!அழகு அணிலே ஓடிவா!கொய்யா மரம் ஏறிவா!குண்டுப்பழம் கொண்டு வா!பாதிப் பழம் உன்னிடம்பாதிப் பழம் என்னிடம்கூடிக்கூடி இருவரும்கொறித்துக் கொறித்துத் தின்னலாம்”

எளிய, இனிய, தெளிவான இப் பாடல் வாயிலாகப் பகிர்ந்து உண்ணும் நற்பண்பினை குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் பதிய வைத்துவிடுகின்றார் வள்ளியப்பா.

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்அழகான மாம்பழம் அல்வா போல் மாம்பழம்தங்க நிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா?இங்கு ஓடி வாருங்கள்;பங்கு போட்டுத் தின்னலாம்.மல்கோவா மாம்பழம் போலவே இனித்திடும் வள்ளியப்பாவின் சுவையான குழந்தைப் பாடல் இது.


முத்திரைப் பாடல்:

வள்ளியப்பா என்றதும் நம் நினைவுக்கு ஓடோடி வருவது 'லட்டும் தட்டும்' என்னும் குழந்தைப் பாடல்.

''வட்ட மான தட்டு.தட்டு நிறைய லட்டு.லட்டு மொத்தம் எட்டு.எட்டில் பாதி விட்டு,எடுத்தான் மீதம் கிட்டு.மீதம் உள்ள லட்டுமுழுதும் தங்கை பட்டுபோட்டாள் வாயில் பிட்டு.கிட்டு நான்கு லட்டு;பட்டு நான்கு லட்டு.மொத்தம் தீர்ந்த தெட்டு.மீதம் காலித் தட்டு!”

இந்தப் பாடலில் வரும் கிட்டுவும் அவன் தங்கை பட்டுவும் 'எனக்கே அதிக லட்டு வேண்டும்' என்னும் பேராசை கொள்ளாமல் ஆளுக்கு நான்கு லட்டு எனச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளும் சிறப்பினைப் பார்க்கிறோம். 'வட்டமான தட்டு' எனக் குழந்தைகளுக்கு வட்டத்தையும், 'எட்டில் பாதி', 'எடுத்தான் மீதம்', 'மொத்தம் எட்டு' என்றாற் போல் வகுத்தல், கழித்தல், கூட்டல் கணக்கு-களையும் சொல்லித் தருவது இப் பாடலின் சிறப்பு. தட்டு, லட்டு, எட்டு, விட்டு, கிட்டு, பட்டு, பிட்டு என்ற ஓசை நயம் வாய்ந்த சொற்கள் இப் பாடலில் அணிவகுத்து வருவதும் சிறப்பு.


குழந்தையாக மாறுவார்:

வள்ளியப்பா குழந்தைகளோடு பழகும் போது ஒரு குழந்தையாகவே மாறி விடுவார்; அவர்களோடு மனம் கலந்து பேசியும் பாடியும் மகிழ்வார். ஞாயிற்றுக்-கிழமைகளில் கதை கேட்பதற்காக அவருடைய வீட்டிற்கு நிறையக் குழந்தைகள் வருவார்கள். அப்படி வந்த குழந்தைகளில் ஒரு சிறுவனுக்கு அன்று பிறந்த நாள்; அவன் புதிய உடை அணிந்து வந்திருந்தான். குழந்தைகளுக்கே உரிய குணத்தோடு ஒரு சிறுமி அவனிடம், “நீ ஞாயிற்றுக்கிழமை பிறந்தாயா? நான் வெள்ளிக்கிழமை பிறந்தேன்” என்றாள்.அருகில் இருந்த இன்னொரு சிறுவன் “நான் புதன்கிழமை பிறந்தேன்” என்றான். இப்படி அங்கே குழந்தைகள் பேசிக் கொண்டிருப்பதை வைத்தே வள்ளியப்பா ஒரு பாடல் எழுதினார்.''ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளைநன்றாய்ப் பாடம் படித்திடுமாம்.திங்கட்கிழமை பிறந்த பிள்ளைதினமும் உண்மை பேசிடுமாம்செவ்வாய்க்கிழமை பிறந்த பிள்ளைசெய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்புதன்கிழமை பிறந்த பிள்ளைபெற்றோர் சொல்படி நடந்திடுமாம்வியாழக்கிழமை பிறந்த பிள்ளைமிகவும் பொறுமை காட்டிடுமாம்.வெள்ளிக்கிழமை பிறந்த பிள்ளைவேண்டும் உதவிகள் செய்திடுமாம்சனிக்கிழமை பிறந்த பிள்ளைசாந்தமாக இருந்திடுமாம்இந்தக் கிழமை ஏழுக்குள்எந்தக் கிழமை நீ பிறந்தாய்?” உழைப்பை உயர்த்திப் பிடித்தல்

வள்ளியப்பாவின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று 'பாடும் பலனும்' என்னும் பாடல். இந்தப் பாடலில் 'உழைத்தால் உயரலாம், உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை' என்பதைக் காரண காரியத்தோடு விளக்குவார்.

''தோலை உரித்த பிறகு தான்சுளையைத் தின்று பார்க்கலாம்!ஓட்டை உடைத்த பிறகு தான்உள்ளே பருப்பைக் காணலாம்!உலையில் அரிசி வெந்து தான்உண்டு பசியைப் போக்கலாம்! …பாடு பட்ட பிறகு தான்பலனைக் கண்டு மகிழலாம்!” தமிழ்ப் பேரவைச் செம்மல்

பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்த அழ.வள்ளியப்பாவிற்கு, 1982ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்னும் பட்டம் வழங்கியது. இது எந்தக் குழந்தை இலக்கியப் படைப்பாளரும் பெறாத தனிப்பெருஞ் சிறப்பு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட வள்ளியப்பா, 'குழந்தை இலக்கியத்தைப் பல்கலைக்கழக அளவில் பாடமாக வைக்க வேண்டும்' என்று வலியுறுத்திப் பேசி முடித்த நிலையில் மயங்கிச் சாய்ந்தார். 1989 மார்ச் 16-ல் கவிஞரின் உயிர் பிரிந்தது! வள்ளியப்பாவின் வழியில் நடை பயின்ற குழந்தை எழுத்தாளர் பூவண்ணன், “அப்போதும் அவரது வலக்கையின் மூன்று விரல்கள் மடிந்தும், இரண்டு விரல்கள் பேனா பிடிப்பது போன்றும் இருந்தன. உயிர் பிரியும் தருணத்திலும் குழந்தைக் கவிஞர் ஏதோ ஒரு குழந்தைப் பாடல் எழுத முயன்று, அந்த முயற்சியிலேயே உயிர் துறந்தார் என்று தோன்றுகிறது” என வள்ளியப்பாவின் உயிர் பிரிந்த கடைசித் தருணம் குறித்து எழுதி இருக்கும் வரிகள் உள்ளத்தை உருக்கும்.

- முனைவர் நிர்மலா மோகன், எழுத்தாளர், - பேச்சாளர் 94436 75931 மாணவர்கள் கருத்து தெரிவிக்க mdureporting@dinamalar.in

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X