உடல் உபாதைகள் நீங்க மருந்தில்லா மருத்துவம்| Dinamalar

உடல் உபாதைகள் நீங்க மருந்தில்லா மருத்துவம்

Updated : நவ 07, 2014 | Added : நவ 07, 2014 | கருத்துகள் (2)
 உடல் உபாதைகள் நீங்க மருந்தில்லா மருத்துவம்

மருந்துகளுக்கு மாற்றாக மருந்தில்லா மருத்துவமாக இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) திகழ்கிறது. இதன் தத்துவம் வலியை நீக்கி, வலிமை உண்டாக்கி, உடலியக்கம் பெறச் செய்தல் என்பதாகும். வலியுள்ள இடத்தில் ரத்த ஓட்ட அளவை சீர்படுத்தி, அதற்குரிய தசையின் வலிமையை மேம்படுத்தி, உடல் இயக்கத்தை ஏற்படுத்தி, தீர்வளித்தல் என்பது இதன் பொருள். உடல் இயக்கத்தை முதன்மைப்படுத்தி பயிற்சி மற்றும் சிகிச்சை மருத்துவமாக இது விளங்குகிறது.

பக்கவிளைவு இல்லை :

இந்த பயிற்சி முறையில் மின்கருவி சிகிச்சை, ஒளிக்கதிர் சிகிச்சை, நீர்நிலை சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் இயக்கத்தின்போது, இதயத்துடிப்பு அதிகரிப்பதால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. எனவே, உடலில் அனைத்து பாகங்களும் நன்றாக இயங்குகின்றன. ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இம்மருத்துவத்தின் மூலம் மருந்துகள் இன்றி வலி நிவாரணம் பெற முடியும். வலி நிவாரணத்தில் மட்டும் 40 சதவீத மருந்துகளை தவிர்க்கலாம். மருந்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.இந்த அவசர உலகில் போதிய உடல் இயக்கத்தை விட்டு விட்டு, உடற்பருமன் ஏற்பட்டதன் காரணமாகவும், குண்டும் குழியுமான ரோட்டில் அதிக துாரம் வாகனம் ஓட்டுவதாலும், தொடர்ச்சியாக பல மணி நேரம் கம்ப்யூட்டர் பணியினாலும் கழுத்து, முதுகு மற்றும் மூட்டு வலிகள் ஏற்படுகின்றன. உடல் இயக்கம் இல்லாததால், உடல் தசைகள் அனைத்தும் வலுவிழக்கின்றன. இதுவே அனைத்து வலிகளுக்கும் மூலகாரணம்.அனைத்திற்கும் சிகிச்சை:பிறவியில் ஏற்படும் தசை, நரம்பு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்குறைவு, தசை சிதைவு நோய், மூளை நரம்பு பாதிப்பு முதுகுத்தண்டுவட முறிவினால் ஏற்படும் வாதம் ஆகியவற்றிற்கு பின்தொடர் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிகிச்சைக்கும் இயன்முறை மருத்துவம் பயன்படுகிறது. படுக்கைப்புண் ஏற்படாமல் தவிர்த்தல், எலும்பு அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இருதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைக்குப்பின் தொடர் சிகிச்சை, தீக்காய சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளுக்குப்பின் பின்தொடர் சிகிச்சைகளுக்கும் இந்த மருத்துவமுறை உதவுகிறது.விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கும், அவர்களின் உடற்தகுதியை மேம்படுத்துவதற்கு தேவையான பயிற்சியை அளிப்பதற்கும், எலும்பு தேய்மானம், சவ்வு மற்றும் தசைநார் வீக்கத்தினால் ஏற்படக்கூடிய வலியை போக்குவதற்கான பெரும் பங்கு இயன்முறை மருத்துவம் வகிக்கிறது.

வலியின்றி வாழலாம்:

உடல் இயக்க மருத்துவத்தின் பயிற்சிகள் பொதுவான பயிற்சிகள் போல் அல்லாமல் வேறுபட்டு உள்ளதால், இயன்முறை மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று உடல் இயக்க பயிற்சி செய்ய வேண்டும். எந்த இடத்தில் உடல் இயக்கத்தை தவிர்க்க வேண்டும் என அவர் ஆலோசனை வழங்குவார்.மேலைநாடுகளில் வலி நிவாரண மருந்துகளுக்கு கட்டுப்பாடு உள்ளதால், உடல் இயக்கப்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் மருந்துகள் சாதாரணமாக கிடைக்கும் சூழல் உள்ளது. ஆகவேதான் நாம் பயிற்சியின் முக்கியத்துவத்தை உணராமல் உள்ளோம். ஒவ்வொரு வேளையும் தவறாமல் மருந்து, மாத்திரைகளை உட்கொள்வதுபோல, உடல் இயக்கப்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்துவந்தால் நன்மைகள் விளையும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நலமோடும் வலிமையோடும் வலியின்றி வாழ, மருந்தில்லா இயன்முறை மருத்துவம் மிக மிக அவசியம்.
- ரெ.கணேஷ் பாண்டியன்,
இயன்முறை மருத்துவர்,
விருதுநகர்.
04562 -269 293
ganesh30@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X