Karunanidhi asks TN Govt to take steps to increase storage | கேவியட் போடுங்கப்பா... : சொல்கிறார் அனுபவஸ்தர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கேவியட்' போடுங்கப்பா... : சொல்கிறார் அனுபவஸ்தர்

Updated : நவ 09, 2014 | Added : நவ 07, 2014 | கருத்துகள் (122)
'கேவியட்' போடுங்கப்பா... : சொல்கிறார் அனுபவஸ்தர்

சென்னை : 'கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 136 அடியாக குறைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், தமிழக அரசு, 'கேவியட்' மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:முல்லைப் பெரியாறு அணையில், 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு பெயர் வந்து விடுமோ என, ஜெயலலிதா கருதுகிறாரோ என்ற சந்தேகம், அப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக, எல்லா குளங்களும் நிரம்பி, எல்லா நிலங்களிலும் ஈரப்பதம் மிகுந்துள்ளது. இந்த நேரத்தில், தேவையில்லாமல் அணையிலிருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றுவதன் மூலம், 142 அடி வரை நீரைத் தேக்கும் வாய்ப்பை, தமிழகம் இழக்க நேரிடும் நிலை உள்ளது.

எனவே, குடிநீர் தேவைக்காக மட்டும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறந்து விட்டு, அணையை வந்தடைகின்ற நீரை, முழுவதுமாகச் சேமித்து, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை நிலைநாட்டி, விவசாயிகளின் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்ற, தமிழக அரசு முன்வர வேண்டும்.இதற்கிடையில், கேரள அரசு, முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை, 136 அடியாக குறைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்த நேரத்தில், 142 அடி வரை, நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என, உச்ச நீதிமன்ற உத்தரவை நிலைநாட்டிக் கொள்ள முன்வர வேண்டும். கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதால்,தமிழக அரசு, கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.


'கேவியட்' டால் என்ன பயன்?

மனு தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக, முன் அறிவிப்பு இன்றி, ஒரு குறிப்பிட்ட காரியத்தில், பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு அளிப்பதை தடுக்க, வாதி சார்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவே, 'கேவியட்' மனு என்று அழைக்கப்படுகிறது. 'கேவியட்' என்றால், முன் எச்சரிக்கை என்று பொருள்.'கேவியட்' மனுவை, ஒருவர் தாக்கல் செய்தால், அவருக்கு எதிராக தொடரப்படும் வழக்கில், 'கேவியட்' மனு தாக்கல் செய்தவருக்கு, முதலில் தகவல் தெரிவிக்கப்படும்.முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தால், மனுவின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூற முடியாது. தமிழக அரசுக்கு, தகவல் தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பி, பதில் வாங்கிய பிறகே, தீர்ப்பு அளிக்க முடியும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X