uratha sindhanai | நல்ல துவக்கத்தின் அறிகுறி| Dinamalar

நல்ல துவக்கத்தின் அறிகுறி

Updated : நவ 09, 2014 | Added : நவ 08, 2014 | கருத்துகள் (4)
Advertisement
நல்ல துவக்கத்தின் அறிகுறி

ஜனநாயகம் என்னும் கோபுரத்தைத் தாங்கி நிற்பவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில சட்டசபைகள் மற்றும் பார்லிமென்ட், நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய துாண்கள். இம்மூன்றில் ஏதேனும் ஒன்று, ஏதேனும் ஒரு காரணத்தால் சேதம் அல்லது சிதிலம் அடைந்தால், ஜனநாயக கோபுரம் ஆட்டம் கண்டுவிடும்.இத்தகைய ஆபத்தில் நம் ஜனநாயகம் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், ஆரம்பநிலையிலேயே அச்சிதிலத்தை அல்லது சேதத்தை சரி ய்வதற்காகவும் அல்லது அவ்வாறு ஏற்படாமல் தடுக்க வேண்டும். இதற்கு அரசியல், நிர்வாகம், நீதித்துறையில் காணப்படும் தவறுகளையும், குற்றம், குறைகளையும் சுட்டிக்காட்டுவதற்காக ஊடகங்களுக்கு கருத்து சுதந்திரத்தையும், எழுத்து சுதந்திரத்தையும் நம் அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. எனவே தான் ஊடகங்களை, 'ஜனநாயகத்தின் நான்காவது துாண்' என்கிறோம்.

ஆரோக்கியமான மக்களாட்சிக்கு இத்தகைய ஒரு நடைமுறை இன்றியமையாதது என்பதை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர், 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்' என, சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, நெறிதவறும் அரசால் நாடு சீர்கெடும் என்பது இதன் பொருள். அடிப்படையில், சுயநலப் போக்குடைய மனிதர்களே சமுதாயத்தில் அதிகம் உள்ளனர். பொது நல நோக்கும், நம் நாடு, நம் மக்கள், அனைவரும் நம் சகோதரர் என்னும் பொதுநல உணர்வுடைய உயர்ந்தோர் வெகு சிலரே. இத்தகையோரால் தான், அவர்களின் தியாக வாழ்வினால்தான் மனித சமுதாயம் இன்று வரை
அழியாதிருக்கிறது. நம் அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடு இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனுடைய சமூக, பொருளாதார, அரசியல், மத உணர்வு, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவனுக்குள்ள உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதி செய்து, அவற்றைக் கட்டிக்காப்பதுதான். அதே சமயம் தனி மனித உரிமைகளும், சுதந்திரமும் சமுதாய நலனுக்கு ஊறு விளைவிப்பதை நம் அரசியல் சாசனம் அங்கீகரிக்கவில்லை. சமூக நீதிக்குப் புறம்பாக, விரோதமாக தனி மனித சுதந்திரம் செயல்பட முடியாது என்று தெள்ளந் தெளிவாகக் கூறுகிறது நம் அரசியல் சாசனம்.அனைவரும் தங்களுக்குரிய உரிமை களைப் பெறுவதற்கும், அவற்றை அனுபவிப்பதற்கும் அருகதை உள்ளவர்கள் தான்; ஆனால் அதே சமயம், அவர்களுக்குள்ள கடமைகளை உதாசீனப்படுத்திவிட்டு, உரிமைகளை
மட்டுமே கோருவது ஜனநாயக நெறிக்குப் புறம்பானது மட்டுமல்ல, சட்ட விரோதம்.

எனவே தான், பொது வாழ்வில் (அரசியல்) காலடி எடுத்து வைப்பவர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் கடமைகள் என்ன என்பதை நன்கு புரிந்து கொண்டு, தங்கள் அரசியல் பயணத்தைத் துவங்க வேண்டும். அரசியல் என்பது சுய நலம் தவிர்த்து, ஆதாயம் தேடாமல் மக்கள் நலனுக்காகப் பாடுபடுவது.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் என்னும் தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு, தாங்கள் சர்வ வல்லமையும், வரம்பில்லாத அதிகாரத்தையும் பெற்றவர்கள் என்றும், தங்களைக் கேள்விகள் கேட்க வேறு யாருக்கும் எவ்வித உரிமையும் இல்லை என்றும் அரசியல்வாதிகள் நினைத்தால், அது அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர் என்று தான் பொருள்.இத்தகைய ஒரு தவறான எண்ணம், இன்று நம் அரசியல்வாதிகளிடம் ஊறிப்போயிருப்பதால் தான், தங்கள் அதிகாரத்தின் கீழ் செயல்படும் அரசு அதிகாரிகளை தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கைக்கூலிகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.மக்கள் வரிப்பணத்திலிருந்து ஊதியம் பெறும் அரசு ஊழியர்களும் சுய நலத்தால் உந்தப்பட்டு, அரசியல்
வாதிகளுடன் இணைந்து, கூட்டாக மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை லஞ்சமும், ஊழலும் புரையோடிப் போயிருக்கின்றன. பணம் சம்பாதிப்பதற்கும், ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிப்பதற்கும், கோடிகள் தேடுவதற்கும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. வியாபாரம், தொழில் போன்றவைகளை செய்வதன் மூலம் இதைப் பெறலாம். அவ்வாறு வியாபாரத்திலும், தொழிலிலும் ஈடுபடுவது குற்றமாகாது; சட்டமே அதை அனுமதிக்கிறது. எனவே, கோடிகள் குவிக்க ஆசைப்படுபவர்கள் இவற்றில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, அரசியலுக்குள் நுழைந்து மக்கள் நலனுக்காக உள்ள ஜனநாயகத்தை அரசியல் வியாபாரமாக ஆக்கி உள்ள அயோக்கியத்தனம் தான், இன்று நம் அரசியல்வாதிகளால் நாடு தழுவிய அளவில் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

நல்லவர்களை தங்களது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கத் தவறுவதால் பொதுமக்கள் சொல்லொணா துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
அத்துன்பங்களையும், துயரங்களையும் அரசியல்வாதிகள் தரும் இலவசங்கள் என்னும் வாய்க்கரிசியைப் பெற்று, மறந்து மகிழ்கின்றனர். ஏதுமறியா பாமர மக்கள் கூட்டமாக, இன்று நம் சமுதாயம் மாறிப்போயிருக்கிறது.இந்த இலவசப் படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் ஏழை, எளிய, பாமர மக்களைத் துாக்கி வெளியே கொண்டு வந்து, அவர்களைத் தங்கள் சொந்தக் கால்களில் நிற்கும் திராணியுடைவர்களாக செய்ய வேண்டிய பெரிய பொறுப்பு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் கடமை.இத்தகைய ஒரு சூழலில் ஒரு நம்பிக்கை ஒளியாக, சமீபகாலமாக நம் நீதிமன்றங்கள் ஊழலுக்கு எதிராக வழங்கிவரும் தீர்ப்புகள் அமைந்து வருவது, வரவேற்கத்தக்க அம்சம்.இது, பணத்திற்கு அடிமையாகாத நீதித்துறை சார்ந்த நீதிபதிகளின் மனோதிடத்தையும், நீதியின்பால் அவர்கள் கொண்டுள்ள மரியாதையையும், நாட்டின் மீதும், மக்கள் நலனிலும் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையையும் காட்டுகிறது. இது, எதிர்கால இந்திய சமுதாயத்தின் நல்வாழ்விற்கு வழிவகுக்கும் சிறந்த அம்சம்.

மக்கள் சேவையே தங்கள் லட்சியம் என்று முழங்கி, மக்களின் ஓட்டுகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாக ஆகும் அரசியல்வாதிகள், ஆட்சியைப் பிடித்ததும் மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவது இந்தியக் கலாசாரமாக ஆகிவிட்டது. இன்று, பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்களும், அமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் பல லட்சம் கோடிகள் ஊழல்கள் புரிந்து சுருட்டிய கதைகள், அம்பலத்திற்கு வந்து சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சுருட்டிய பணத்தைக் கொண்டு எளிதில் சட்டத்தை விலைக்கு வாங்கிவிட முடியும் என்ற ஊழல் அரசியல்வாதிகளின் எண்ணத்தில், இப்போது மண் விழுந்துள்ளது. அவர்கள் மனதில் கிலி ஏற்பட்டுள்ளது; நம் நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.நம் அரசியல் சாசனம் மக்கள் பிரதிநிதிகளும், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களும் செய்யும் குற்றங்களைத் தடுக்கவே நீதித்துறைக்கு பல அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. அத்தகைய அதிகாரங்களை செயலிழக்கச் செய்யும் அற்பத்தனமான முயற்சியிலும், முந்தைய காங்., அரசு ஈடுபட்டது. அம்முயற்சி வெற்றி பெறாது, நம் ஜனநாயகம் புத்துயிர் பெற்றது.ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை இன்னும் அதிகமாக முடுக்கி விடுவதன் மூலம் நம் நீதித்துறை, ஜனநாயகக் காவலனாக மக்கள் மனதில் ஓங்கி உயர்ந்து நிற்கும்; நீதிபிழைத்து, அதர்மம் அழியும்.எனவே, நம் நீதித்துறையின் தற்போதைய நடவடிக்கைகள், தர்மத்தைக் காக்கும் முயற்சியில் ஒரு நல்ல துவக்கத்தின் அறிகுறி என்றே
சொல்லலாம்.
இ-மெயில்:krishna_samy2010@yahoo.com

- ஜி.கிருஷ்ணசாமி
- எழுத்தாளர், சிந்தனையாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பணிநிறைவு)வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - Peravurani  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-201407:59:31 IST Report Abuse
ராஜேஷ் மிகவும் அருமையான கருத்து ஐயா...
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
11-நவ-201402:43:07 IST Report Abuse
Manian நல்ல சிந்தனயே. ஆனால் தகுதி அற்ற ஆசிரியர்கள், பேராசை, சுயநலம் மற்றும் சிந்திக்க தெரியாத பெற்றோர்கள் இருக்கையில் , சிறந்த மாணவ மணிகளை யார் தயார் செய்வார்கள் என்பது பற்றியும் எழுத்தாளர் சொல்ல வேண்டும். சினிமா, சீரியல் கலாசாரத்தில் வருங்கால குடி மக்கள் எப்படி வருவார்கள்? எழுத்தாளர் நல்லது, கெட்டது, சுதந்திரம் பெற அ ஆ யிரக்கண்க் கானவர்கள் உயிர் துறந்ததை மறந்து விட்ட சமுதாயம் எப்படி முன்னேறும் என்பதனையும் சற்று கூரினால் நல்லது?
Rate this:
Share this comment
Cancel
r.sundararaman - tiruchi,இந்தியா
10-நவ-201417:38:56 IST Report Abuse
r.sundararaman மிக மிக அருமையான கருத்துக்கள். மிக நிதர்சனமான உண்மைகளை கொண்டுள்ளது. எல்லாம் அரசியல் சார்ந்து தான். அதிலும் துவேஷமும் ,காழ்ப்புணர்வுகளும் மேலாதிக்க தன்மையுடனும் சந்தர்ப்ப வாதத்தையும் அடிப்படையாகக்கொண்டு தன்னலமே மிக பெரிதென்னும் மாயையினால் நன்மை தீமைகள் தர்மம் இவைகளை மிஞ்சி தானே பெரிது தன்னை சார்ந்தோரே எல்லானலமும் வளமும் பெறவேண்டும். தலைமுறைகள் செல்வ செழிப்பிலும் அதிகார நிலையிலும் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் எங்கும் எதிலும் மேலோங்கி நிற்கிறது .எனினும் ஜன நாயகத்தில் மக்கள் கருத்துக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கும் நிலை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது .எல்லாமக்களும் நல்லது கெட்டது அறிந்துணர்ந்தே தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X