புதுடில்லி : பிரதமர் மோடி, திறமையானவர்கள் அடங்கிய தன்னுடைய நெருங்கிய வட்டத்தை மையப்படுத்தி ஆட்சி நடத்த விரும்புபவர் என்பது, நேற்று நடந்த அமைச்சரவை விரிவாக்கத்திலும் வெளிப்பட்டது. திறமையானவர்களை திரட்டும் அதே நேரத்தில், அரசியலில் இருந்தும் தன்னுடைய கவனம் திசை திரும்பவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மோடியின், இணை அமைச்சர்கள் தேர்வு அமைந்திருந்தது.
கடந்த மே மாதம் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில், நேற்று, 21 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். பிரதமர், 22 கேபினட் அமைச்சர்கள், 22 இணை அமைச்சர்கள் என, மொத்தம் 45 பேர் இருந்த அமைச்சரவையில், நேற்று, நான்கு கேபினட் அமைச்சர்கள் மற்றும் 17 இணை அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் மூன்று இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு வகிப்பார்கள். இந்த விரிவாக்கத்தின் மூலம் மத்திய அமைச்சரவையில், தற்போது, 66 பேர் பதவி வகிக்கின்றனர்.
ஆட்சிக்காக... :
ஆட்சி திறம்பட நடக்க வேண்டும் என்பதற்காக, மனோகர் பாரிக்கர், சுரேஷ் பிரபு, ஜே.பி.நட்டா ஆகிய அனுபவஸ்தர்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது.மனோகர் பாரிக்கர், சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்தவர், எளிமையானவர், தொழில்நுட்ப அறிவு உடையவர்; மிஸ்டர் கிளீன் இமேஜ் கொண்டவர். கோவா மாநில முதல்வராக திறம்பட செயல்பட்டவர் என்பதால் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இவர் முதல்வரானவுடன், பால் உற்பத்தியை பெருக்கும் 'காமதேனு' திட்டத்தை கொண்டு வந்தார். மாநிலத்தில் 'லோக் ஆயுக்தாவை' கொண்டு வந்து ஊழலற்ற ஆட்சிக்கு வழிவகுத்தார்.அரசியலையும் தாண்டி திறமையானவர்களை தன்னுடைய வட்டத்திற்குள் கொண்டு வர முனைகிறார் என்பது, சிவசேனாவைச் சேர்ந்த சுரேஷ் பிரபுவை அமைச்சரவையில் இணைத்ததன் மூலம் நிரூபித்துள்ளார் மோடி. சுரேஷ் பிரபு, வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். பா.ஜ.,வின் கனவு திட்டமான, நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பொறுப்பாளராக இவரை, வாஜ்பாய் அப்போது நியமித்தார். சமீப காலமாக, ஜி-20 மாநாட்டிற்கான அடிப்படை வேலைகள் போன்ற பல முக்கிய பணிகளை இவரிடம் மோடி ஒப்படைத்து உள்ளார். மோடியின் நம்பிக்கை வட்டத்தில் இடம் பிடித்துள்ள இவர், மோடியுடன் பணியாற்றுவதற்காக, நேற்று காலை சிவ சேனாவில் இருந்து விலகி, அமைச்சராக பதவியேற்றார்.இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஜே.பி.நட்டா, நிர்வாகத் திறமை மிக்கவர். மோடிக்கும், அமித் ஷாவுக்கும் மிக நெருக்கமானவர், அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமானவர். இவரை நியமிப்பதன் மூலம் தன் வேலைகளை, தன்னைப்போலவே எடுத்துச்செய்யும் ஒருவரை மோடி பெற்றுள்ளார்.அது போல, விமான பைலட்டாக பணியாற்றும், பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி, உ.பி.,யைச் சேர்ந்த டாக்டர் மகேஷ் சர்மா, ஐ.ஐ.டி.,யில் படித்த ஜெயந்த் சின்ஹா ஆகியோருக்கும் தன் அமைச்சரவையில், பிரதமர் மோடி வாய்ப்பு அளித்துள்ளார்.
அரசியலுக்காக...
சிறந்த ஆட்சி அளிக்க வேண்டும் என நினைக்கும் பிரதமர் மோடி, அரசியலுக்கும் தன் அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். நீண்ட காலமாக, பா.ஜ., செய்தித் தொடர்பாளராக இருக்கும், உ.பி.,யைச் சேர்ந்த முக்தர் அப்பாஸ் நக்விக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.ஆர்.ஜே.டி., தலைவர், லாலு பிரசாத் யாதவின் வலதுகரமாக விளங்கிய ராம்கிருபால் யாதவுக்கும், அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிட, 'சீட்' கிடைக்காததால் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தவர் இவர். பீகாரின் நவடா தொகுதியில் இருந்து எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிரிராஜ் சிங், 62. இவருக்கு, இணை அமைச்சர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதவிகள் தந்திருப்பது அடுத்த வருடம் பீகாரில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் யாதவ மக்களின் ஓட்டுகளை கவர பா.ஜ.,வுக்கு உதவும்.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான பண்டாரு தத்தராயே, 68, தான் தெலுங்கானா மாநிலத்தின் ஒரே, பா.ஜ., - எம்.பி., 2014 லோக்சபா தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் வெற்றி பெற்று 4வது முறையாக எம்.பி., ஆனவர் தற்போது இணை அமைச்சராக (தனிப்பொறுப்பு) பொறுப்பேற்றுள்ளார். பா.ஜ., கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஆக இருக்கும் சோனாராம் சவுத்ரிக்கு, 53, இணை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் தெலுங்கானா மற்றும் சீமாந்திரா பகுதியில் பா.ஜ வின் பலத்தை கூட்ட முடியும் என்று மோடி முடிவெடுத்திருக்கிறார்.பாபுல் சுப்ரியோ, அசன்சோல் தொகுதி எம்.பி., மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, பா.ஜ.,வின் இரு எம்.பி.,க்களில் ஒருவர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்.பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்காவின் மகனான ஜெயந்த் சின்கா ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவரும் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
ஜாதிக்காக...
ஆட்சி, அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள பிரதமர் மோடி, அவசிய தேவையான ஜாதிகளுக்கும், குறிப்பிட்ட ஜாதிகளின் பிரதிநிதித்துவத்திற்கும் இடமளித்துள்ளார்.ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கி சுடும் போட்டியில் வௌ்ளிப் பதக்கம் வென்ற, ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்ர இனத்தை சேர்ந்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், 43, மத்திய இணை அமைச்சராகி உள்ளார். அரியானா மாநில அரசியலில் முக்கிய இடம் பெற்றிருப்பவர் பிரேந்தர் சிங், 68. காங்., கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய இவருக்கு, அரியானாவின் 'ஜாட்' இன மக்களை கவரும் வகையில் கேபினட் அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இதன் மூலம், ஜாட் இனத்தவருக்கும், ராஜபுத்ர இனத்தவருக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளித்துள்ளார்.சாமான்ய மக்களுக்கும் அங்கீகாரம் அளிப்பது தான் பிரதமர் மோடியின் சிறப்பம்சம். இதற்கேற்ப, 'பிளம்பராக' பணியாற்றிய விஜய் சாம்லாவுக்கு, 53, இணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த இவர், தனித் தொகுதியான ஹோஷியார்பூரில் இருந்து வென்று லோக்சபாவில் காலடி எடுத்து வைத்தார். வரும் 2017ல் பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதை மையமாக வைத்து, தலித் சமூகத்தை சேர்ந்த இவருக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது.பணிகள் விரைவாக நடக்கவும் முக்கிய பைல்கள் ஓரிடத்தில் குவிந்து விடாமல் இருக்கவும் அமைச்சரவை விரிவாக்கம் நடந்திருக்கிறது. சீர்திருத்தத்தை மனதில் வைத்தும் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.சேனாவின் நெருக்கடிகளுக்கு இடம் தராததன் மூலம், கூட்டணி கட்சிகளுக்கு ஒரு கடுமையான செய்தியை மோடி சொல்லி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மாநில வாரியாக பிரதிநிதித்துவம்
மோடி அமைச்சரவையில் உ.பி., மாநிலத்தில் இருந்து அதிகபட்சமாக 13 பேர் இருக்கின்றனர். கேரளாவில் இருந்து ஒரு அமைச்சர் கூட இடம் பெறவில்லை.
மாநிலவாரியாக அமைச்சர்களின் எண்ணிக்கை.
உத்தரபிரதேசம் 13
பீகார் 8
மகாராஷ்டிரா 7
குஜராத் 5
கர்நாடகா 4
மத்தியபிரதேசம் 4
அரியானா 3
ராஜஸ்தான் 3
பஞ்சாப் 2
ஆந்திரா 2
கோவா 2
ஜார்க்கண்ட் 2
தமிழகம் 1
ஒடிசா 1
சத்தீஸ்கர் 1
அசாம் 1
அருணாச்சல் 1
மே.வங்கம் 1
டில்லி 1
இமாச்சல் 1
தெலுங்கானா 1
காஷ்மீர் 1
இது சின்ன அமைச்சரவை:
மத்தியஅமைச்சரவை நேற்று மாற்றிஅமைக்கப்பட்டது. பிரதமர் மோடியை சேர்த்து அமைச்சர்களின் எண்ணிக்கை தற்போது 66 ஆக உள்ளது. இதில் 27 பேர் 'கேபினட்' அமைச்சர்கள்; 13 பேர் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு), 26 பேர் இணை அமைச்சர்கள். இது, வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ., கூட்டணி மற்றும் மன்மோகன் தலைமையிலான ஐ.மு.,-2 கூட்டணியின் 'ஜம்போ' அமைச்சரவையோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.கடந்த 2012ல் மன்மோகன் அமைச்சரவையில் 33 'கேபினட்', 12 இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), 33 இணை அமைச்சர்கள் என 78 பேர் இருந்தனர்.வாஜ்பாய் அமைச்சரவையில் துவக்கத்தில் 56 பேர் தான் இருந்தனர். பின், 2003ல் விரிவாக்கம் செய்த போது 88 பேர் கொண்டதாக உயர்ந்தது.
பெண் அமைச்சர்கள்:
மோடி அமைச்சரவையில் மொத்தம் எட்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது ஏழு பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. நேற்று, பதவியேற்ற அமைச்சர்களில் சாத்வி நிரஞ்சன் ஜோதி என்ற பெண் மட்டும் இடம் பெற்றார்.
தற்போதுள்ள பெண் அமைச்சர்கள் விவரம்:
1. சுஷ்மா சுவராஜ்
2. ஸ்மிருதி இரானி
3. நஜ்மா ஹெப்துல்லா
4. மேனகா
5. ஹர்சிம்ரத் கவுர் பாதல்
6. உமா பாரதி
7. நிர்மலா சீதாராமன்
8. சாத்வி நிரஞ்சன் ஜோதி
மூன்று டாக்டர்கள்:
விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் மகேஷ் சர்மா என்ற டாக்டர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பதவியேற்றார். இவரை சேர்த்து மோடி அமைச்சரவையில் மூன்று டாக்டர்கள் இடம் பெற்றுள்ளனர். இதற்கு முன், ஹர்ஷவர்தன் மற்றும் ஜிதேந்திரா சிங் ஆகிய டாக்டர்கள் அமைச்சர்களாக உள்ளனர்.
'ஜூனியர்', 'சீனியர்' யார்:
பிரதமர் மோடி அமைச்சரவையில் அதிகம், குறைந்த வயது உடையவர்கள் இருவருமே பெண்கள். அதிக வயதானவர் நஜ்மா ஹெப்துல்லா, 74. குறைந்த வயது உடையவர் ஸ்மிருதி இரானி, 38. ஹெப்துல்லா மத்திய பிரதேசத்தில் இருந்தும், இரானி குஜராத்தில் இருந்தும் ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஹெப்துல்லா சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சராகவும், இரானி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் உள்ளனர். இருவரும் கேபினட் அமைச்சர்கள்.
படித்தவர்கள் அதிகம்:
ஐந்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐ.ஐ.டி.,யில் படித்தவர்கள் வரை மோடி அமைச்சரவையில் உள்ளனர். இந்திய அரசியல் வரலாற்றில், ஐ.ஐ.டி., யில் படித்து மாநில முதல்வரான முதல் அரசியல்வாதி என்ற பெருமை பெற்றவர் மனோகர் பாரிக்கர், நேற்று பதவியேற்ற விஜய் சம்ப்ளா 'பிளம்பராக'
பணியாற்றியவர்.
படிப்பு- அமைச்சர்கள்
5ம் வகுப்பு - 1
10ம் வகுப்பு-5
பிளஸ் 2 -2
பட்டப்படிப்பு-14
தொழிற்படிப்பு-21
பட்டமேற்படிப்பு-13
டாக்டர் பட்டம்- 7
மற்ற படிப்பு-3
ஆண்கள் ஆதிக்கம்:
பிரதமர் மோடியை சேர்த்து அமைச்சரவையில் 66 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 58 பேர் ஆண்கள்; எட்டு பேர் மட்டும் பெண்கள்.
ஆண்களுக்கு 87.87 சதவீதமும், பெண்களுக்கு 12.12 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக்கு குறைவு:
பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவிலேயே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ., சார்பில் 60 பேர் அமைச்சர்களாக உள்ளனர். கூட்டணி கட்சிகளில் ஆறு பேர் மட்டுமே அமைச்சர்கள். தெலுங்கு தேசம் கட்சிக்கு இரண்டு, சிவசேனா, சிரோன்மணி அகாலிதளம், லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த காங்., ஆட்சியில் மொத்தம் 78 பேர் அமைச்சர்களாக இருந்தனர். இதில் கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் 19 பதவிகள் ஒதுக்கப்பட்டன.