அந்த மேடை நீண்ட நாளைக்கு பிறகு தமிழால் தகித்துக்கொண்டு இருந்தது.
காரணம் தருண் விஜய் என்ற வடமாநில எம்பி.
உத்திராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் இருபத்தைந்து ஆண்டுகாலம் பத்திரிகையாளராக இருந்துவிட்டு முழுநேர அரசியலுக்கு வந்தவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர் பாஜகவின் எம்பியாக செயல்படுபவர்.
இது பல வடமாநில எம்பிக்களின் பின்புலமாக இருப்பதுதான்.அதனால் இது ஓரு ஆச்சரிய தகவல் அல்ல.
மாநிலங்களவையில் முக்கியமான பிரச்னைகளை அவையின் கவனத்திற்கு கொண்டுவரும் காலஅவகாசத்தில் தருண்விஜய்க்கு பேசவாய்ப்பு கிடைத்தது.
அப்போது தருண்விஜய் பேசிய பேச்சுதான் மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கவைத்தது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விரும்பி ஏற்கவைத்தது.
அவர் பேசியதன் சுருக்கமாவது...
தமிழின் சிறப்பு:
"வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்திய மொழிகள் தமிழ் தனித் தன்மையும், சிறப்பு வாய்ந்தததுமாகும். வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தென் மாநிலங்களில் உள்ள ஏதேனும் ஒரு மொழியை விருப்ப மொழியாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
தமிழ் மொழியில் எழுதப்பட்ட தொல்காப்பியம் 5,000 ஆண்டுகளுக்கும் பழைமையானது. அதேபோல, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி போன்றவை தமிழ் இலக்கியம் நமக்களித்த மாபெரும் காப்பியங்களாகும்.
தமிழ் இலக்கியத்தின் பெருமையை சந்தேகத்துக்கு இடமின்றி உலகுக்கு பறைசாற்றுவது கம்பரின் "ராமாயணம்' ஆகும். அதேபோல, இன்றைய காலகட்டத்துக்கும் உரித்தாகும் வகையில் அமைந்த சிறந்த படைப்பு, திருவள்ளுவரின் "திருக்குறள்' ஆகும். திருக்குறளின் சுவடுகள் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
நம் நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உலக அளவில் கொண்டிருந்த செல்வாக்கும், அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய நற்சேவையும் நம்மில் எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும்? அசோகரும், விக்ரமாதித்யர் போன்ற மாபெரும் சக்கரவர்த்திகளும் மட்டும்தான் இந்தியா எனக் கருதிக் கொள்ளக் கூடாது. சோழர்கள், கிருஷ்ணதேவராயர், பாண்டியர்கள் போன்ற மரியாதைக்குரிய மன்னர்களையும் நமது வரலாறு கண்டுள்ளது.
"இந்திய மொழிகள் தினம்:
இந்திய மொழிகளுக்கு எல்லாம் மரியாதை அளிக்கும் வகையில், திருவள்ளுவர் பிறந்த தினத்தை "இந்திய மொழிகள் தினம்' எனக் கடைப்பிடிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். அதேபோல, தேசிய ஒற்றுமையை உணர்த்திடும் வகையில் வட மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை விருப்பப் பாடமாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்'
தமிழை தாய்மொழியாக கொண்டிராத ஒருவர் அதுவும் இந்தியை மட்டுமே நேசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்தவர் இப்படி தமிழை தலைக்கு மேல் தூக்கிவைத்து முக்கியமான அவையில் பேசியது பெரும் வரவேற்பை பெற்றது. இவர் பேசியது போல நூறில் ஒரு பங்கு கூட தமிழ் பேசும் தமிழ் உறுப்பினர்கள் இந்த அவையில் இப்படி பேசியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அவரை எப்படியாவது பார்த்து நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கவேண்டும் என்று தமிழர்கள் நினைத்த போது அதற்கான வாய்ப்பை வெற்றித்தமிழர் பேரவையின் சார்பில் அதன் நிறுவனர் கவிஞர் வைரமுத்து ஏற்படுத்தி கொடுத்தார்.
சென்னை விழா:
சென்னை மியூசிக்அகடமி கடந்த 11ம் தேதி மாலை தமிழாலும் தமிழர்களாலும் நிறைந்து காணப்பட்டது. பார்வையாளர் வரிசையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விஐபிக்கள் சாதாரணமாக உட்கார்ந்து நடப்பதை பார்க்க காத்துக் கொண்டு இருந்தனர்.
முன்னாள் துணைவேந்தர்கள் அவ்வை நடராஜன், ராசேந்திரன், அறவாணன், திருவாசகம், முன்னாள் நீதிபதி பாஷா, மற்றும் கவிஞர் வைரமுத்துவின் பாராட்டுக்கு பிறகு உற்சாக மனிதராக ஒலிவாங்கிக்கு முன் வந்தார் தருண்விஜய்.
எனக்கு தமிழ் எழுத பேச படிக்கத்தெரியாது ஆனால் தமிழ் மிகவும் பிடிக்கும் (இசையை பற்றி தெரியாவிட்டாலும் அந்த இசையை எத்தனை பேர் உயிராய் மதிக்கிறார்கள் அதுபோல) என்று சொல்லி ஆங்கிலத்தில் தனது உரையை துவங்கினார்.
தமிழில் வந்த பல பெருமையான விஷயங்களை எனக்கு தெரிந்த மொழியில் படித்து தெரிந்து கொண்ட போதுதான் தமிழின் பெருமையும் புகழும் விளங்கியது.
பாராட்டுக்காக செய்யவில்லை:
இதை சரியான சந்தர்ப்பத்தில் பதியவேண்டும் என்று எண்ணினேன் மாநிலங்களவையில் அந்த கடமையை சரியாகவே செய்தேன். இதற்காக உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் மட்டுமல்ல அனைத்து கட்சிக்காரர்களாலும் எனது தலைவர்களாலும் கூட பாராட்டுகளை பெற்றேன்.
இது போன்ற பாராட்டை எதிர்பார்த்து நான் அதைச் செய்யவில்லை.
'அதர் லாங்வேஜ்' என்று மத்தியில் உள்ளவர்களால் சொல்லப்படுவது எனக்கு 'மதர் லாங்வேஜ்' என்றேபடுகிறது.
முன்பைவிட இப்போது இன்னும் வேகமாக இருக்கிறேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் இருக்கவேண்டும், காசியில் பாரதியார் வாழ்ந்த இல்லம் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டு போற்றி பாதுகாக்கப்பட வேண்டும், நீங்கள் தாகூரை கொண்டாடும் போது நாங்கள் பாரதியாரை கொண்டாட வேண்டாமா? நீங்கள் ராமாயணம் மகாபாரதம் படிக்கும் போது நாங்கள் சிலப்பதிகாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? அப்போதுதானே நிஜமான தேசிய ஒருமைப்பாடு நிலவும்.
ஓட்டு அரசியல் இல்லை:
இதையெல்லாம் அரசு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தும் அதே நேரத்தில் தனிப்பட்ட நான் என்ன செய்யப்போகிறேன் என்பதையும் சொல்கிறேன். எனது டேராடூன் வீட்டில் என் சொந்த செலவில் பயிற்சி மையம் துவங்கி தமிழ் கற்றுக்கொடுக்க போகிறேன். நீங்கள் யாரும் வந்து டேராடூனில் எனக்கு ஓட்டுப்போடப்போவதில்லை ஆகவே இதில் எந்த அரசியலும் இல்லை எவ்வித உள்நோக்கமும் இல்லை.
எனக்குள்ள ஒரே நோக்கம் எல்லாவகையிலும் சிறப்பு வாய்ந்த இமயத்திலும் மிக உயர்ந்ததாக நான் கருதும் தமிழ் வாழ வேண்டும் வளரவேண்டும் என்பதுதான் இதற்காக நான் என் உயிருள்ளவரை குரல் கொடுப்பேன் என்று உணர்ச்சிகரமாக பேசிவிட்டு தமிழில் நன்றி நன்றி நன்றி என்று சொல்லிய தருண் விஜய்க்கு நாம் நிறையவே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
- எல்.முருகராஜ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE