நுகர்வோருக்கு கூடுதலாக கிடைக்கிறது அதிகாரம்: சட்டத்தில் பல திருத்தங்கள் செய்ய முடிவு| Tougher consumer laws in offing | Dinamalar

நுகர்வோருக்கு கூடுதலாக கிடைக்கிறது அதிகாரம்: சட்டத்தில் பல திருத்தங்கள் செய்ய முடிவு

Updated : நவ 17, 2014 | Added : நவ 16, 2014 | கருத்துகள் (13) | |
புதுடில்லி : நுகர்வோருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கச் செய்யும் வகையில், இப்போதுள்ள நுகர்வோர் சட்டங்களில் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, நுகர்வோர் நலன்களை பாதுகாக்கவும், திருப்தி இல்லாத வர்த்தக நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடரவும், புதிய வழிமுறைகள் விரைவில் எளிதாக உள்ளன.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பல
நுகர்வோருக்கு கூடுதலாக கிடைக்கிறது அதிகாரம்: சட்டத்தில் பல திருத்தங்கள் செய்ய முடிவு

புதுடில்லி : நுகர்வோருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கச் செய்யும் வகையில், இப்போதுள்ள நுகர்வோர் சட்டங்களில் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, நுகர்வோர் நலன்களை பாதுகாக்கவும், திருப்தி இல்லாத வர்த்தக நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடரவும், புதிய வழிமுறைகள் விரைவில் எளிதாக உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பல துறைகளிலும், புதிய திட்டங்களையும், அதிரடி மாற்றங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் விதத்தில், நுகர்வோர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர உள்ளது.
லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான, நுகர்வோர் விவகாரத்துறை, நுகர்வோர் துறையில் பல மாற்றங்களை செயல்படுத்த உள்ளது. இதற்காக, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986ல் மாற்றம் செய்ய, புதிய வரைவு மசோதாவை அத்துறை தயாரித்துள்ளது.அந்த வரைவு மசோதா, பிற துறைகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டு, வேண்டிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின் இறுதியாக, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள, நுகர்வோருக்கு பயனளிக்கும் முக்கிய அம்சங்களாவன:
*ஆன் - லைன் ஷாப்பிங், இ - காமர்ஸ் எனப்படும், இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
*நுகர்வோரின் புகார்கள், நேரடியாகவும், இணையம் மூலமும் பெற வசதி செய்யப்படும். புகார் மீது, 21 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்படும்.
*நுகர்வோர் புகார் முறையீட்டிற்கு, உயர் அளவிலான, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். இது, புலனாய்வு அமைப்பு போல செயல்பட்டு, மோசடி மற்றும் வில்லங்க நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும்.
*இந்த புலனாய்வு அமைப்பு, தானாக புகார்களை விசாரிக்கும். ஒருவருக்கு மேற்பட்ட நுகர்வோர் கூறும் புகார்களை கூட விசாரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம், தண்டனை வழங்கும்.
*பாதிக்கப்பட்ட நுகர்வோர் வழக்கு தொடர, நிறுவனத்தின் தலைமையிடம் அமைந்துள்ள ஊரில் தான், வழக்கு தொடர முடியும். இப்போது அந்த முறை மாற்றப்பட உள்ளது. நுகர்வோர் எந்த ஊரில் உள்ளாரோ, அந்த ஊரின் நீதிமன்றங்களில், நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர முடியும்.
*வழக்கு தொடரும் பட்சத்தில், வழக்கறிஞர்கள் வைத்துக் கொள்ளவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேற்கொண்ட தொகைக்கு மட்டும் தான், வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும். அதை விட குறைந்த தொகைக்கு வழக்கறிஞர் இல்லாமல், நுகர்வோரே தன் தரப்பு வாதத்தை எடுத்து வைக்கலாம்.
*தேவைப்பட்டால், இருதரப்பினரும் மத்தியஸ்தம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அந்த வரைவு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரபலமாகி வரும் இணையதள வர்த்தகம்:

சமீப காலமாக, இணையதளம் மூலம் நடைபெறும் வர்த்தகம் பிரபலம் அடைந்துள்ளது. போதிய நேரமின்மை, நகரின் ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு செல்வதில் உள்ள இடர்பாடுகள் போன்றவற்றால், இந்த இணையம் மூலமான வர்த்தகத்திற்கு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும், இணையம் வழியான வர்த்தகத்தில், நிமிடத்துக்கு நிமிடம், பொருட்களின் விலை மாறுகிறது. வீட்டில் இருந்து படியே, தேவையான பொருளை, இணையம் மூலமாக பதிவு செய்தால், வீட்டுக்கே பொருள் வந்து விடுகிறது. பொருள் வரும் நேரத்தைக் கூட, குறுந்தகவல் மூலம் தெரிவிக்கின்றனர்.வீட்டுக்குப் பொருள் வந்ததும், பணத்தைக் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இவ்வளவு வசதிகள், இணைய வர்த்தகத்தில் இருந்தாலும், நுகர்வோர் பாதுகாப்பு என்பது முற்றிலும் இல்லை. அதனால், இணைய வர்த்தகம் தொடர்பாக, நுகர்வோர் சட்டத்தில் தனிப் பிரிவை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


இடைத்தரகர் மூலம் விற்பனை:

தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர், சடகோபன் கூறியதாவது:இணையதளம் வழி வர்த்தகத்தில், நுகர்வோர் நலனைப் பாதுகாக்க, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில், தெளிவான விதிமுறைகள் இல்லை. வீட்டுக்குப் பொருள் வந்தாலும், பணம் கொடுத்த பின்னரே, பொருள் உள்ள பெட்டியை கொடுப்பர்.பெட்டியை திறந்து பார்த்த பின், பணத்தை கொடுக்க முடியாது. பெட்டியில், ஆர்டர் கொடுத்த பொருள் தான் இருக்கிறதா; நல்ல நிலையில் உள்ளதா என்பதை அறியாமலேயே, பணத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. மேலும், இணையதளம் வழியாக, ஒரு நிறுவனத்தின் பொருளை விற்கும் போது, அந்த நிறுவனத்துக்கும், நுகர்வோருக்கும் தொடர்பில்லை. இடைத்தரகரே விற்பனை செய்கிறார்.இதனால், அவருக்கு பொருளின் தரம் குறித்து தெரிவதில்லை. அவர், பொருளை விற்கும் ஒரு நபராக மட்டுமே இருக்கிறார். எனவே, இணைய வழி வர்த்தகத்தில், நுகர்வோரின் நலனைப் பாதுகாக்க, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில், புதிய பிரிவுகள் உருவாக்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X