தனியா கொடுக்குறாரு போஸ்... மெட்ராஸ்ல கிடைச்சது டோஸ்!| Dinamalar

தனியா கொடுக்குறாரு போஸ்... மெட்ராஸ்ல கிடைச்சது டோஸ்!

Added : நவ 18, 2014
Share
''மித்து! போன வாரம் நான் சொன்னது சரியாப்போச்சு...நீ சொன்னது என்னாச்சு பார்த்தியா?,'' கோவை விமான நிலையத்தில், தோழியை வரவேற்பதற்காக, வெளியில் காத்திருந்த மித்ராவைப் பார்த்துக் கேட்டாள் சித்ரா. ''ஆமாக்கா! நீ சொன்னது மாதிரியே, அவரை புதுக்கோட்டை கலெக்டராப் போட்டாங்க. அந்த ஊரு மினிஸ்டர், தன்னோட 'இன்புளூயன்ஸ்'ல அவரை அங்க கொண்டு போயிட்டாரு. அதனால என்ன.... இப்ப
தனியா கொடுக்குறாரு போஸ்...  மெட்ராஸ்ல கிடைச்சது டோஸ்!

''மித்து! போன வாரம் நான் சொன்னது சரியாப்போச்சு...நீ சொன்னது என்னாச்சு பார்த்தியா?,'' கோவை விமான நிலையத்தில், தோழியை வரவேற்பதற்காக, வெளியில் காத்திருந்த மித்ராவைப் பார்த்துக் கேட்டாள் சித்ரா.


''ஆமாக்கா! நீ சொன்னது மாதிரியே, அவரை புதுக்கோட்டை கலெக்டராப் போட்டாங்க. அந்த ஊரு மினிஸ்டர், தன்னோட 'இன்புளூயன்ஸ்'ல அவரை அங்க கொண்டு போயிட்டாரு. அதனால என்ன.... இப்ப வந்திருக்கிற புது கமிஷனர் விஜய் கார்த்திகேயன், ரொம்பவே 'யங் அண்ட் எனர்ஜெடிக்' ஆபீசர்ங்கிறாங்க!,'' என்றாள் மித்ரா.


''அவுங்க அப்பா, ஐ.எப்.எஸ்., அதிகாரி கண்ணன், நம்ம ஊர்ல பாரஸ்ட் கன்சர்வேட்டரா நல்லா 'ஒர்க்' பண்ணவரு. இவரும் கோவில்பட்டியில, ரொம்ப நல்லா 'ஒர்க்' பண்ணுனதா பேப்பர்ல பாத்திருக்கேன்! ஆனா, அவரை சுதந்திரமா இங்க வேலை பார்க்க விடுவாங்களான்னு தான் தெரியலை!,'' என்றாள் சித்ரா.


''அதேபோல, நம்ம பேசுனது மாதிரியே, கவுன்சில் மீட்டிங்குக்கு கருணாநிதி போட்டோவைக் கொண்டு வந்து, டிஎம்கேகாரங்க ஏக ரகளை பண்ணிட்டாங்களே!''


''அதுல ஏகமா 'ஸ்கோர்' பண்ணுனது, மீனா லோகு தான். யாருக்கும் தெரியாம, ஜெயலலிதா போட்டோவைக் கொண்டு போயி, மீடியாக்கள் முன்னால கிழிச்சுட்டாங்க. அதை தன்னோட மொபைல் போன் காமிராவுல படமும் எடுத்து, கருணாநிதியோட பி.ஏ.,வுக்கு உடனே 'வாட்ஸ் ஆப்'ல போட்டு விட்ருக்காங்க!,''


''ஹைய்யோ...சூப்பர் ஐடியாக்கா! அப்புறம் என்ன ஆச்சு?,'' என்றாள் மித்ரா.


''எப்பவுமே 'டேப்லட்', 'பேஸ்புக்'ன்னு பிஸியா இருக்கிற அவுங்க தலைவரும், இதைப் பாத்துட்டு, 'ஒரு மாவட்டச் செயலாளர் செய்யாததை, ஒரு லேடி கவுன்சிலர் பண்ணிருக்கேய்யா. அந்தப் பொண்ணை உடனே கிளம்பி வரச்சொல்லு'ன்னு சொல்லிருக்காரு. மீனா லோகு நேர்ல கிளம்பிப் போய், கருணாநிதிட்டயே பாராட்டு வாங்கிட்டு வந்திருக்காங்க. அநேகமா, மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளரா அந்தம்மாவுக்கு தான் வாய்ப்பு இருக்குங்கிறாங்க!,'' என்றாள் சித்ரா.


''இந்த விவகாரத்துல, நம்ம மேயருக்கு மெட்ராஸ்ல 'டோஸ்' விழுந்ததா கேள்விப்பட்டேன்!'' என்றாள் மித்ரா.


''இருக்கலாம். அவர் மேயரா வர்றதை விரும்புன கவுன்சிலர்களே, இப்போ அவரோட நடவடிக்கை எல்லாம் மாறிப்போச்சுன்னு புலம்புறாங்க!,'' என்றாள் சித்ரா.


''ஏன்...அவுங்க யாரையும் சம்பாதிக்க விடலையா?,''


''அதெல்லாம் இல்லை. எந்த பங்ஷனா இருந்தாலும், அவரோட ரூம்ல ஏதாவது நலத்திட்ட உதவி வழங்குனாலும், பக்கத்துல இருக்கிற கவுன்சிலர்க யாரையும் போட்டோவுக்குக் கூப்பிடுறதே இல்லையாம். தனியா 'போஸ்' கொடுக்குறாராம்!,''


''அதை விடு...நம்ம ஊருல எப்பவுமே தெற்கு தேயுதுன்னு சொல்லுவோம்; ஆனா, புது மேயர் நடத்துன முதல் கவுன்சில் மீட்டிங்லயே, தெற்கு மண்டலத்துக்கு 24 கோடி ரூபா ஒதுக்கிருக்காங்களே. வரலாறு மாறுதோ?,'' என்றாள் மித்ரா.


''வரலாறும் மாறலை; புவியியலும் மாறலை. இது வேற கணக்கு...தெற்கு மண்டலத் தலைவர் பெருமாள் சாமி, மினிஸ்டரோட ஆளாச்சே. அதுக்காகவே, இந்த மண்டலத்தை ரெண்டரை வருஷமா புறக்கணிச்சாங்க. இப்பவாவது, ஸ்பெஷலா கவனிக்கிறாங்கன்னா, அதுக்காக சந்தோஷப்பட வேண்டியது தான்!,'' என்றாள் சித்ரா.


''அக்கா! தெற்குன்னதும், எனக்கு தெற்கு தாலுகா ஆபீஸ் ஞாபகம் வந்துருச்சு. அந்த ஆபீஸ்ல, ரிட்டயர்டு வி.ஏ.ஓ., ஒருத்தர் தான், 'ஆக்டிங் தாசில்தார்' மாதிரி இருக்காராம். அவரு சொல்ற 'பைல்'ல மட்டும் தான், அங்க இருக்கிற ஆபீசர்ஸ் கையெழுத்துப் போடுறாங்களாம்!,'' என்றாள் மித்ரா.


இடையில் வந்த அலைபேசி அழைப்பை ஏற்றுப்பேசிய மித்ரா, ''அட்ரஸ் கரெக்ட் தான்; ஆனா, 'பிளாட் நம்பர்' 7 க கிடையாது. 7 ஆ...ஆ ஃபார் பாலசுப்ரமணியம்!,'' என்றாள்.


''தாலுகா ஆபீஸ்ல மட்டுமா....கலெக்டர் ஆபீஸ்ல என்ன நடக்குது தெரியுமா? அங்க விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம், நுகர்வோர் பாதுகாப்புக் கூட்டம், முன்னாள் படை வீரர் முறையீட்டுக் கூட்டம் எல்லாமே, டி.ஆர்.ஓ., தான் நடத்துறாரு!,''


''ஏன் என்னாச்சு? மேடம் ரொம்ம்ம்ப....பிஸியோ?,''


''ஆமா...பெரும்பாலான நேரம், ஆபீஸ்லயும் இருக்கிறதில்லை. கேட்டா, 'கேம்ப்'ங்கிறாங்க. எங்கேயோ 'இன்ஸ்பெக்ஷன்' போயிருக்காங்கங்கிறாங்க. ஆனா, அப்பிடி எங்கயும் போறதாத் தெரியலை!,'' என்றாள் சித்ரா.


''ஊருக்குத் தெற்கால, பெரிய்ய்ய காலேஜ் நடத்துற ஒரு லேடி கூடத்தான், இப்போ ரொம்பவே 'க்ளோஸ்'சா இருக்கிறதா கேள்விப்பட்டேன். முந்துன கலெக்டர் இருந்தப்ப, அவுங்களால ஒரே ஒரு 'அப்பாயின்மென்ட்' வாங்கிக்கூட, அவரைப் பார்க்க முடியலை!'' என்றாள் மித்ரா.


''அவுங்க கூட மட்டுமில்லை...பெரிய பெரிய பிஸினஸ் பேமிலிஸ்ல இருக்கிற லேடீஸ் பல பேரைச் சேர்த்து, ஒரு 'நட்பு வட்டத்தை' உருவாக்கிருக்காங்களாம். அவுங்களோட சேர்ந்து அரட்டை அடிக்கவே நேரம் பத்தலைங்கிறாங்க. இதுல எப்பிடி, இவுங்க கூட்டம் நடத்துவாங்க? 'டெவலப்மென்ட் ஒர்க்'கை ஆய்வு பண்ணப்போறாங்க?,''


''இதெல்லாம் கோயம்புத்தூரோட தலைவிதின்னு தான் சொல்லணும். கலெக்டர் நல்லாயிருந்தா, கார்ப்பரேஷன் கமிஷனர் சரியிருக்க மாட்டாரு. அங்க நல்ல ஆபீசர் வந்தா, இங்க சொகுசு ஆபீசர் இருப்பாங்க. இல்லேன்னா ரெண்டு பேருமே சரியிருக்க மாட்டாங்க!,''


''மித்து! நம்ம கார்ப்பரேஷன்ல ஏகப்பட்ட 'பைல்'களைக் காணோமாம்...தெரியுமா?,'' என்று திடீரென நினைவுக்கு வந்தவளாய்ச் சொன்னாள் சித்ரா.


''காசு தராதவுங்க, கட்டிட அனுமதி 'பைல்'தான் இப்பிடித் தொலையும்னு கேள்விப்பட்ருக்கேன். இது என்ன பைலு?,'' என்றாள் மித்ரா.


''இதெல்லாமே, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சம்மந்தப்பட்ட 'பைல்'கள்ன்னு சொல்றாங்க. அதுல நடக்குற, நடந்த ஊழலைத் தோண்டுனதும், பல 'பைல்'களைக் காணோமாம். அதே மாதிரி, 'ரிசர்வ் சைட்'களை தானம் செட்டில்மென்ட் பண்ணுனது சம்மந்தமான 'பைல்'களையும் நிறையா காணோம்கிறாங்க. விசாரணை நடக்குது!,'' என்றாள் சித்ரா.


''விசாரணைன்னு சொன்னதும், இன்னொரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு! இ.பி.,மெட்ரோ ஏரியாவுல, 3 வருஷத்துக்கு மேல ஒரே இடத்துல இருக்கிற 27 இன்ஜினியர்களைப் பத்துன பட்டியல் தலைமைக்கு போச்சே...அதைப்பத்திக்கூட விசாரணை நடந்துச்சு தெரியுமா...அப்பிடி 3 வருஷத்துக்கு மேல இருக்கிறவுங்க, வேற இடத்துக்கு மாத்தச்சொல்லி உத்தரவு வந்திருக்காம். அதை வச்சிட்டு, ஒவ்வொரு ஏ.இ.,யையும் கூப்பிட்டு, 'ஒனக்கு எந்த இடம் வேணும்; ஒரு லட்சம் கொடு. ரெண்டு லட்சம் கொடு'ன்னு ஒரு ஆபீசர் கலெக்ஷன் ஓட்டிட்டு இருக்காராமே!,'' என்றாள் மித்ரா.


''அதைப்பத்தி எனக்குத் தெரியலை. ஆனா, நீ சொல்ற ஆபீசர், ஒவ்வொரு டிரான்ஸ்பார்மர் 'அலாட்' பண்ணவும் ஒரு 'பெரிய அமவுண்ட்' கேக்குறாரு. நாங்கதான், புரோக்கர் வேலை பார்க்க வேண்டியிருக்குன்னு, 13 ஏ.இ.,க்கள் கையெழுத்துப் போட்டு, ஒரு பெட்டிஷன் அனுப்பிருக்காங்க. அதோட 'காபி' என் கையில இருக்கு!,'' என்றாள் சித்ரா.


''இந்த விஷயத்துல எப்பவுமே நீதான்க்கா என்னோட குரு!,'' என்று புகழ்ந்தாள் மித்ரா.


''சரி சரி...வாலாங்குளத்துல ஆக்கிரமிப்பு வீடுகள்ல இருக்கிறவுங்க எல்லாருக்கும் மாற்று வீடு ரெடியாயிருச்சு. இனியாவது, அந்த வீட்டையெல்லாம் இடிப்பாங்களா?,'' என்றாள் சித்ரா.


''அநேகமா இடிச்சிருவாங்கன்னு தான் நினைக்கிறேன். ஆனா, ஏற்கனவே 'பயோ மெட்ரிக்'ல பயனாளிகள் விரல்ரேகையெல்லாம் பதிவு பண்ணி, பட்டியல் தயார் பண்ணுன பிறகு, இப்போ திடீர்னு புது ஆட்களை பட்டியல்ல சேர்க்கிறாங்களாமே!,'' என்றாள் மித்ரா.


''அது நம்ம சிட்டி சேச்சி வேலை தான். அவரோட வீட்டுல வேலை பார்க்கிற மாதவி, சுரேஷன், நாகலட்சுமி, மல்லிகான்னு 4 பேர்களுக்கு அம்மன் குளத்துல வீடு கொடுக்கச் சொல்லிருக்காரு. அவுங்க யாருமே, வாலாங்குளத்துல குடியிருந்தவுங்க இல்லை. இதை எப்பிடியோ டிஎம்கேகாரங்க கண்டு பிடிச்சு, பிரச்னை பண்ணப் பார்த்தாங்க. ஆனா, ஆபீசர்களே, அவுங்களை 'லிஸ்ட்'ல இருந்து எடுத்துட்டாங்க!,'' என்றாள் சித்ரா.


''அக்கா! ஆச்சரியம்....ஆனா அதிசயம்கிறது மாதிரி ஒரு நியூஸ். நம்மூர்ல 'பிளையிங் ஸ்குவாடு' ஆர்.டி.ஓ., பாண்டியன்னு ஒருத்தர் இருக்காரு. சும்மா சரக்கு வண்டி, பாசஞ்சர் வண்டின்னு விதி மீறுன எல்லா வண்டிகளுக்கும் எக்கச்சக்கமா 'பைன்' போட்டுத் தாளிக்கிறாரு. மத்த ஆர்.டி.ஓ., எல்லாம் பயங்கர கடுப்புல இருக்காங்க. சீக்கிரமே அவரை, இங்கயிருந்து தூக்க ஏற்பாடு நடக்குது,'' என்றாள் மித்ரா.


விமான நிலையத்தில், டில்லி விமானம் வருகை குறித்த அறிவிப்பு வரவே, இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு, 'வருகை' பகுதியை நோக்கி, வேகமாக நடக்கத் துவங்கினார்கள்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X