50 ஆயிரத்துக்கு 10; 25 ஆயிரத்துக்கு 5: வசூல் வேட்டையில் புரோக்கர்கள்!| Dinamalar

50 ஆயிரத்துக்கு 10; 25 ஆயிரத்துக்கு 5: வசூல் வேட்டையில் புரோக்கர்கள்!

Added : நவ 18, 2014 | |
அன்றைய தினம் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், புதிய சன்னதிகளில் பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த விக்ரகங்களுக்கு தான்ய வாச பூஜை நடந்து கொண்டிருந்தது. விழாவுக்கு சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்தனர்.ஸ்கூட்டரை மித்ரா ஓட்ட, சித்ரா பின்னால் அமர்ந்து கொண்டாள். காமராஜ் ரோட்டில் சென்று, தாராபுரம் ரோட்டில்
 50 ஆயிரத்துக்கு 10; 25 ஆயிரத்துக்கு 5: வசூல் வேட்டையில் புரோக்கர்கள்!

அன்றைய தினம் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், புதிய சன்னதிகளில் பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த விக்ரகங்களுக்கு தான்ய வாச பூஜை நடந்து கொண்டிருந்தது. விழாவுக்கு சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்தனர்.ஸ்கூட்டரை மித்ரா ஓட்ட, சித்ரா பின்னால் அமர்ந்து கொண்டாள். காமராஜ் ரோட்டில் சென்று, தாராபுரம் ரோட்டில் திரும்பியது. அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் இருந்த கூட்டத்தை பார்த்த சித்ரா, ""நம்மூர்ல ரெண்டு இடத்துல எப்பவும் கூட்டம் குறையாம இருக்கு. ஒன்னு, ஆஸ்பத்திரி. இன்னொன்னு, "டாஸ்மாக்' மதுக்கடை,'' என்றாள்.அதைக்கேட்ட மித்ரா,""இந்த ஆஸ்பத்திரியில கூட்டமும் குறையாது; பிரச்னைக்கும் குறையிருக்காது,'' என்றாள்.""ஏன்... போதுமான வசதி இல்லையா,'' என திருப்பிக் கேட்டாள் சித்ரா.""சில குறைகள் இருக்கு. ஆனாலும், நோயாளிகள் குறைபடுவது டாக்டர்களை பத்தி. எய்ட்ஸ் நோயாளிகள் பிரிவில் ரெண்டு டாக்டர்கள் இருக்காங்க. எச்.ஐ.வி., பாதிப்புள்ளவர்கள் மாசத்துக்கு ஒருக்கா வந்து மருந்து மாத்திரை வாங்கிட்டு போறாங்க. இங்குள்ள டாக்டர்களோ, நோயாளிகளை நேரடியாக பார்த்துகூட பேசுறதில்லைன்னு புலம்புறாங்க. நோயின் தன்மையை தெரிந்த டாக்டர்களே, எங்களிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்தால், மத்தவங்கள்ட்ட என்னத்த எதிர்பார்க்க முடியும் என நோயாளிகள் வருத்தப்படுறாங்க,'' என்றாள் மித்ரா.""டவுன்ஹாலில் நடந்த விழாவுக்கு போயிருந்தீயே... விசேஷமா ஏதேனும் இருந்துச்சா,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.""போயிருந்தேன். விழா சிறப்பா நடந்துச்சு. சமூக நலத்துறை வச்சிருந்த பேனரில், தமிழக அரசின் முத்திரையை அச்சிட்டிருந்தாங்க. ஒன்றரை வருஷத்துக்குபிறகு தாலிக்கு தங்கம் கிடைச்சுதேனு மக்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்,'' என்றாள் மித்ரா.""சும்மாவா? 10 ஆயிரம் வரைக்கும் செலவு செஞ்சிருக்காங்களே...'' என்றாள் சித்ரா.""புரோக்கர்களை நம்பாதீங்கன்னு பல தடவை சொல்லியும், பலரும் புரோக்கர் மூலமாகவே "மூவ்' பண்ணியிருக்காங்க. அதுக்காக, 50 ஆயிரத்துக்கு 10 ஆயிரம், 25 ஆயிரத்துக்கு அஞ்சாயிரம் கொடுத்திருக்காங்க. சில கிராமங்களில், "ஊர் நல அலுவலர்'கள், பயனாளிகள் வீட்டுக்கு போயி ஆய்வு செய்றதுக்கு, ஆட்டோ கட்டணம் 500 ரூபாய், அவங்களுக்கு 2,000 ரூபாய் வசூலிச்சிருக்காங்க,'' என்று சொல்லிக் கொண்டே, பேக்கரி முன் வண்டியை நிறுத்தினாள் மித்ரா.சூடா ரெண்டு இஞ்சி டீ ஆர்டர் கொடுத்த சித்ரா, ""மாநகராட்சில், இப்ப எல்லா வேலையும் "டேபிள் ஒர்க்'காவே முடிஞ்சிடுது,'' என்றாள்.""டேபிள் ஒர்க் செய்யக்கூடாதா? இதுல என்ன பிரச்னை?,'' என கேள்வி எழுப்பினாள் மித்ரா.""மாநகராட்சியில் இன்ஜினியரிங் செக்ஷன் இருக்கு. எந்தெந்த இடத்தில் பாலம் கட்டணும்; சாக்கடை கால்வாய் கட்டணும், தெருவிளக்கு அமைக்கணும்னு ஆய்வு செஞ்சு, மதிப்பீடு தயாரித்து, டெண்டர் விடணும். இந்த பணிகளை செய்றதுக்கு, "ஸ்பாட்'டுக்கு போயி ஆய்வு செய்யணும். ஆனா, சிட்டி இன்ஜினியரா இருக்கிற அதிகாரி, எந்த இடத்துக்கும் போறதில்லை. கான்ட்ராக்டர்களை ஆபீசுக்கு வரச் சொல்லி, ஒக்கார்ந்திருக்கும் இடத்திலேயே எல்லாத்துக்கும் "ஓகே' செஞ்சிடுறார். இது, கான்ட்ராக்டர்களுக்கு நல்ல வசதியா போச்சு. இதனாலதான், மாநகராட்சி பணிகளோட தரம் ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு'' என்று சித்ரா சொல்லி முடிப்பதற்கும், டீ வருவதற்கும் சரியாக இருந்தது. டீயை பருகிவிட்டு, வீட்டை நோக்கி விரைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X