புதுடில்லி : "டில்லியில் நடந்த கருத்தரங்கில், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் கிலானி பேசியதை வேடிக்கை பார்க்கவில்லை என்றும், விதி மீறல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை பாயும்' என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
டில்லியில் நேற்று முன்தினம், "சுதந்திரம் ஒன்றே வழி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், காஷ்மீர் பிரிவினைவாத ஹூரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் செய்யது அலி ஷா கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய், நக்சல் ஆதரவு தலைவர் வர வர ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கிலானி, நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பேச்சு சுதந்திரம் என்பது, நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக இருக்கக் கூடாது. பேச்சு சுதந்திரம் என்று கூறிக் கொண்டு, நாட்டுக்கு எதிரான கருத்தை தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. அது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவ்வாறு, நாட்டுக்கு எதிரான கருத்தை தெரிவிப்பது, சட்டப்படி குற்றம். இதுபோன்ற செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
சிதம்பரம் மறுப்பு: அருண் ஜெட்லியின் இந்த குற்றச்சாட்டுகளை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டில்லியில் நடந்த கருத்தரங்கை, மத்திய அரசு வேடிக்கை பார்த்ததாக, அருண் ஜெட்லி கூறிய குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறேன். இந்த விஷயத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியதையும் மறுக்கிறேன். இந்த கருத்தரங்கில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் அதிகாரிகள் வீடியோ மூலம் பதிவு செய்துள்ளனர். கருத்தரங்கில் ஏதாவது விதிமீறல் நடந்ததா என, சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறை மீறல் இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். டில்லி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, "அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையையொட்டி, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தக் கூடும்' என, உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, உயர் அதிகாரிகளுடன் இன்று விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
ஒமர் கண்டனம்: டில்லியில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற செய்யது அலி ஷா கிலானி மீது, ஷூ வீசப்பட்ட சம்பவத்துக்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். "இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான செயல்' என்று அவர் கூறியுள்ளார். மேலும், காஷ்மீர் வன்முறை காரணமாக கைது செய்யப்பட்டிருந்த பிரிவினைவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சபீர் ஷா, நேற்று பரோலில் விடுவிக்கப்பட்டார். நோய்வாய்ப்பட்டுள்ள தாயாரை சந்திப்பதற்காக அவருக்கு பரோல் அளிக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கவில்லை என்று கூறப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE