தசைச்சிதைவு நோய் எனும் உயிர்கொல்லி நோயுடன் போராடிக்கொண்டே அந்த நோயின் பிடியில் இருப்பவர்களை மீட்க போராடும் சேலத்தை சேர்ந்த வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி ஆகிய இருவரைப்பற்றிய அருமையான படம்தான் நம்பிக்கை மனுஷிகள் என்ற குறும்படம்.
ஒரு படம் என்றால் ஒரு கதை இருக்கவேண்டும் இங்கே இருவரின் நிஜக்கதை இயல்பாய் நம்முன் விரிகிறது.
படத்திற்குள் செல்வதற்கு முன் தசைச்சிதைவு நோய் பற்றிய ஒரு சிறு குறிப்பு
'மஸ்குலர் டிஸ்ட்ரோபி' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தசைச்சிதைவு நோய் யாருக்கும் எந்த வயதிலும் வரலாம்.
எல்லா மனிதர்களுக்கும் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. அதன் காரணமாக உடலில் உள்ள தசைகள், மெள்ள, மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும். அதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத் துவங்கி உடல் முடங்கிவிடும், முடிவில் ஒரு நாள் மொத்த உடல் இயக்கமும் செயல் இழந்து விடும்.
இதற்கு மருந்து கிடையாது அதிக பட்சம் பத்து வருடங்கள் வாழலாம். ஆனால் அந்த பத்து வருட வாழ்க்கையே பெரும் சுமையாகவும் வலியாகவும் போராட்டமாகவும் இருக்கும்
இந்த வலியும் சுமையும் மிகுந்த போராட்டத்தை கடந்த பல ஆண்டுகளாக அனுபவித்து வருபவர்கள்தான் வானவன் மாதேவி மற்றும் இயல்இசை வல்லபி ஆகிய இரு சகோதரிகள்.
வெகு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர்களுக்கு பத்தாவது படிப்பதற்குள் இந்த நோயின் தன்மை தீவிரம் அடைந்துவிட அதற்கு பிறகு இவர்கள் வாசித்தது எல்லாம் இலக்கியம் மற்றும் வாழ்வியல் பற்றிய புத்தகங்கள்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக தசைச்சிதைவு நோய்க்கு தன்னை தின்னக்கொடுத்ததன் காரணமாக மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போலானது இவர்களது உடம்பு.
என்னால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது, ஒருவர் தூக்கி உட்கார வைக்க வேண்டும், நடக்க முடியாது. நடந்தால் விழுந்து விடுவார்கள். விழுந்தால் எழ முடியாது, டாய்லெட் போவதற்கு ஒருவர் துணை வேண்டும்.போன் பேச வேண்டும் என்றால் கூட யாராவது காதருகே போனை வைக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போது கழுத்து சாய்ந்து பின்பக்கமாக போய்விடும், உடம்பு இவர்களுடையது ஆனால் அதன் கட்டுபாடு இவர்களுடையதல்ல என்றாகிவிட்டது.
இருந்தாலும் இதை எல்லாம் மீறி வாழவேண்டும் என்ற வேட்கை இவர்களுக்கு நிறைய தேடலை ஏற்படுத்தியது தேடல் நல்ல நண்பர்களை ஏற்படுத்தி தந்தது.
நண்பர்கள் உதவியுடன் இந்த நோயை எதிர்த்து மாற்று மருந்துகளுடன் வாழமுடியும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை இருக்கும் காலம் வரையாவது மகிழ்ச்சியாக வாழவைக்க முடியம் என்பதை உலகிற்கு நிருபிப்பதற்காகவே ஆதவ் ட்ரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
இந்த அமைப்பை துவக்கியபிறகுதான் தெரிந்தது இந்த நோயால் கிராமத்து குழந்தைகள் நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது.
தங்களை பாதுகாப்பதே பெரிய விஷயம் என்ற நிலையில் இந்த சகோதரிகள் இருவரும் சேர்ந்து சிகிச்சைக்கு பணம் செலவழிக்கமுடியாதவர்களை தங்களது ஆதவ் ட்ரஸ்டில் வைத்து பராமரித்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.
வாடகை கட்டிடத்தில் இடவசதி போதவில்லை என்ற நிலையில் சொந்த கட்டிடத்திற்கு இடம் மாறினால் இன்னும் நிறைய பேருக்கு உதவலாம் என்ற நிலையில்தான் இவர்களுக்கு எழுத்தாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஆவணபட இயக்குனர் கீதா இளங்கோவன் மற்றும் தினமலர்.காம் நிஜக்கதை வாசகர்களின் அறிமுகமும் உதவியும் கிடைத்தது. இதனால் ஆதவ் அறக்கட்டளைக்கு தேவையான நிலம் வாங்கியாகிவிட்டது.
இப்போது இந்த நிலம் கட்டிடமாக உயரவேண்டும் நல்ல ஜீவன்களால் உயிர்பெறவேண்டும் என்ற நிலையில்தான் கீதா இளங்கோவன் இவர்களைப்பற்றிய ஒரு ஆவணபடத்தை எடுத்துள்ளார்.
நம்பிக்கை மனுஷிகள் என்ற இந்த குறும்படம் தலைப்பிற்கு ஏற்ப சகோதரிகள் இருவரையும் தூக்கி நிறுத்துகிறது.
நான் நடக்கும் போது இழந்த நிம்மதியை சந்தோஷத்தை நடக்கமுடியாமல் வீல் சேரில் இருக்கும் உணர்ந்து நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் எப்போது விழுவேன் என்ற நிலையில் வாழ்வதை விட இனி விழுவதற்கு இடமுமில்லை காலமுமில்லை என்ற மனத்துணிவு ஏற்பட்டுவிட்டது என்று இயல் இசை வல்லபி பேசும்போதும் ஆதவ் அறக்கட்டளையின் கட்டிடத்திற்கு பணம் வேண்டும்தான் ஆனால் மண்ணையும் மக்களையும் சிதைத்துவரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அல்ல நல்ல எளிய உண்மையான மக்களிடம் இருந்துவரும் பணம்தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வானவன் மாதேவி பேசும்போதும் என்ன ஒரு மனத்துணிவு என்று எண்ணி இவர்களை பார்த்து வியக்கத் தோன்றுகிறது.
இந்த ஆதரவு இல்லத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டும் வெறும் மருத்துவமனையாக இல்லாமல் ஆராய்ச்சி மருத்துவமனையாக மாற்றவேண்டும். இந்த தசைச்சிதைவு நோய் வராமல் தடுக்கப்பட வேண்டும், வந்தவர்களை முற்றாக குணப்படுத்த வேண்டும்.
எங்களுக்கு டாக்டர்கள் கொடுத்த கெடுவை தாண்டி பத்து வருடமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கிட்டத்தட்ட எங்கள் உடலின் எல்லா தசைகளுமே தன் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டுவிட்டது ஆனால் எங்கள் செயல்பாடுகள் இப்போதுதான் வீறு கொண்டு எழுந்துள்ளது அது ஆதவ் அறக்கட்டளை என்ற ஆலமரத்தின் கீழ் தசை்சிதைவு நோய்க்கு ஒரு முடிவு காணும் வரை தொடரும் என்று சொல்லும் இந்த சகோதரிகளிடம் பேசுவதற்கான எண்: 99763 99403.
இப்படி ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை மேற்கொண்டுள்ள இந்த சகோதரிகளைப்பற்றி நம்பிக்கை மனுஷிகள் என்ற தலைப்பிலான இந்த குறும்படத்தை கீதா இளங்கோவன், ஆர்.ஆர்.சீனிவாசன், சேலம் ரியாஸ், கார்த்திக், தயாளன், ஈரோடு கதிர், ஏ.எல்.சுதாகர், கே.தங்கராஜ் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு முதலில் வாழ்த்துகள். இந்த குறும்படம் அனைவரும் பார்த்து பகிர்ந்து கொள்ளவேண்டிய படம். படத்திற்கான யூ-ட்யூப் லிங்க கீழே உள்ளது.
https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4
- எல்.முருகராஜ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE