தமிழ்நாடு

திட்டமிட்டு படித்தால் வெற்றி பெறலாம்; தினமலர் நடத்திய குரூப் 4 தேர்வு ஆலோசனை முகாமில் தகவல்

Added : நவ 24, 2014
Share
Advertisement

தேனி : தினமலர் நாளிதழ் சார்பில் தேனியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான இலவச ஆலோசனை முகாமில் ஏராளமான வாசகர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் வழங்கிய ஆலோசனைகள்:பத்தாம் வகுப்பு தகுதியாக கொண்டு இந்த தேர்வு எழுதப்படுகிறது. ஆனால் இதற்கு விண்ணப்பித்தவர்களில் பட்டதாரிகள், பொறியியல் பட்டம் பெற்றவர்களும் என லட்சக்கணக்கில் உள்ளனர். ஏன் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. காரணம் திட்டமிட்டு படிக்காதது. தேர்வு குறித்தும் அதன் பாடத்திட்டம் குறித்தும், தகுந்த வழிகாட்டுதல் உடன் திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம். 12 மணி நேரம் தொடர்ந்து படிப்பது முக்கியம் கிடையாது. எந்த பாடத்தை எப்படி படிப்பது என்பது தான் புத்திசாலிதனம். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாட புத்தகங்கள் கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும். இதில் இருந்து தான் வினாக்கள் வரும்.பொது அறிவு பிரிவில் 100 வினாக்களும், பொது தமிழில் 100 கேள்விகளும் இருக்கும். முதல் பிரிவில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 மதிப்பெண்களுக்கும் வினாக்கள் இருக்கும். பொது அறிவு அனைவரும் படிப்பர். எனவே "கட் ஆப்' மார்க்கில் உயர்ந்த இடத்தை பிடிக்க, திறனறி தேர்வு, நடப்பு கால நிகழ்ச்சி, பொது தமிழ் இவைகளில் கவனம் செலுத்தி படித்து அதிக பட்ச மதிப்பெண் பெற்றால் அரசு வேலை உறுதி. பொருத்துக, இணை தேர்வு, பொருந்தாது என சிக்கலான வினாக்கள் இருக்கும். எனவே இவற்றை கவனமுடன் படித்து, சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். நாளிதழ்: புத்தகத்தில் இல்லாத கேள்விகள் நடப்பு கால நிகழ்வாக 15 வினாக்கள் கேட்கப்படும். இதற்கு நாளிதழ் படிப்பது அவசியம். மத்திய அமைச்சர்கள், உலக நிகழ்வுகள், விருதுகள், கண்டுபிடிப்புகள், விளையாட்டில் சாதனையாளர்கள் நடந்த இடம், நடைபெற உள்ள இடம். உலக தலைவர்களின் பெயர்கள், அவர்கள் வகிக்கும் பதவிகள் என அனைத்தையும் குறித்து வைத்து படிக்கவேண்டும். கடந்த ஒரு ஆண்டு நடந்த நிகழ்வுகளை குறித்து வைத்து ஞாபகப்படுத்துவது நல்லது.வரலாற்று பாடத்தில் கால சுவடு அமைத்து படிக்கவேண்டும். கற்காலம் முதல் சுதந்திரம் பெற்றது வரை முக்கிய ஆண்டுகளை வரிசை படுத்தி அந்த சம்பவங்களை குறித்து வைத்து படிக்க வேண்டும். போர்கள் நடந்த ஆண்டு, யாருக்கு வெற்றி, அதில் ஏற்பட்ட ஒப்பந்தம் என வரிசை படுத்தி படிக்கவேண்டும். அறிவியல் பாடம்: 20 முதல் 25 வினாக்கள் கேட்கப்படுகிறது. இயற்பியல் பாடம் படிக்கும் போது 6 ம் வகுப்பில் காந்தவியல் பகுதி படித்தால், தொடர்ந்து ஏழாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பு என பத்தாம் வகுப்பு வரை உள்ள காந்தவியலை படித்து குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இது போல் ஒவ்வொரு பாடத்தையும் ஒரு வகையில் படிக்க வேண்டும். உயிரியல் பாடத்தில் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள், விட்டமின்கள் போன்றவற்றை கண்டிப்பாக படித்து குறிப்பெடுக்க வேண்டும். நாள்தோறும் படிப்பை துவங்குவதற்கு முன்னதாக படித்ததை நினைவு படுத்தி படித்த பின்பு தான், புதிய பாடத்தை படிக்க துவங்க வேண்டும். பாடதிட்டத்தை தேர்வு செய்து, தன்னம்பிக்கையுடன், திட்டமிட்டு பாட புத்தகத்தை தெளிவாக படித்தால் அரசு வேலை உறுதி, என்றார்.மதுரை மன்னர் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் செந்தில்குமார் பேசியதாவது:பொது அறிவும், பொதுத்தமிழும் இரு கண்கள். பொது தமிழ் பாடத்தை ஆழ்ந்து கவனமுடன் படித்தால் வெற்றி நம் வசப்படும். இதற்கு முன் இருந்த பொது தமிழ் வினாக்கள் எளிமையாகவும், நேரிடையாகவும் இருக்கும். ஆனால் தற்போது வினாக்கள் சற்று கடினமாக உள்ளது. எனவே வினாக்களை நன்கு படித்து, புரிந்து நிதானமாக அதே நேரத்தில் விரைவாக விடை அளிக்கவேண்டும். இதற்காக நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாடங்களில் உள்ள தமிழ் பகுதிகளை படிக்க வேண்டும். மூன்று பகுதிகளாக பிரித்து படிக்க வேண்டும். இலக்கணத்தில் 32 முதல் 50 வினாக்கள் கேட்கப்படும். இலக்கியத்தில் 22 முதல் 30 வினாக்கள் கேட்கப்படும். இதில் திருக்குறள் தொடர்பாக கண்டிப்பாக இரண்டு வினாக்கள் இடம் பெறும். தமிழ் அறிஞர்கள், தொண்டுகள் பகுதியில் 16 முதல் 20 வினாக்கள் கேட்கப்படும். பாரதியாார் உள்ளிட்ட கவிஞர்கள், அவர்களின் புனை பெயர்கள், அவர்கள் எழுதிய புத்தகங்கள் என விரிவாக படிக்க வேண்டும். இலக்கணத்தை புரிந்து படிக்க வேண்டும். தமிழ் பாடத்தில் மட்டும் 100 வினாக்கள் கேட்கப்படும் இதில் 95 வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்கும் வகையில் தயார் படுத்திகொண்டால் அரசு வேலை உங்களுக்காக காத்திருக்கும், என்றார்.
முகாமில் பங்கேற்றவர்களின் கருத்துக்கள்
வி.நித்யா: தேர்வுக்கு 26 நாட்கள் தான் உள்ளது. என்ன செய்வது, எப்படி படிப்பது என குழப்பமாக இருந்தது. தினமலர் நடத்திய முகாமில் பங்கேற்றதால் என் ஆழ் மனதில் இருந்த சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை கிடைத்தது. படிப்பதை காட்டிலும் திட்டமிட்டு படிக்க வேண்டும் என புரிய வைத்தனர். தினமலர் நாளிதழுக்கு மனமார்ந்த நன்றி.ஆர்.மாரிமுத்து: நான் தேர்வு குறித்து குழப்பமான நிலையில் இருந்தேன். இந்த முகாமில் வழங்கப்பட்ட ஆலோசனைகள், சரியான நேரத்தில் வழங்கப்பட்ட சரியான தகவல்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் தினமலர் நாளிதழ் சார்பில் வழங்கப்பட்ட இந்த ஆலோசனைக்கு ஈடாகாது. அனைவரின் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் தினமலர் நாளிதழ் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மாதிரி வினா விடை இலவச பிரதிகள் வழங்கப்பட்டது. அ.வஹிதா: இதற்கு முன் போட்டி தேர்வுகள் எழுதியுள்ளேன். ஆனால் தற்போது இந்த முகாமில் பங்கேற்றதால், பாட புத்தகங்களில் இருந்து அனைத்து வினாக்களும் கேட்கப்படுகிறது என்பதை அறிந்துகொண்டேன். படித்ததை நினைவு படுத்தி படிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன். இந்த முறை கண்டிப்பாக தேர்வு பெறுவேன்.

பி.மாரிராஜா: தேர்வில் வெற்றி பெறுவதற்கான "கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கும் பகுதி எது. எந்த எந்த பகுதியில் எவ்வளவு மதிப்பெண்கள் கேட்கப்படும் என தெளிவாக கூறியது படிப்பதற்கு உதவியாக இருக்கும். தினமலர் நாளிதழ் சார்பில் வழங்கப்பட்ட இலவச பிரதியில் உள்ள பாடத்திட்டம், தேர்வு முறை தகவல்கள், மாதிரி வினா-விடை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X