நதிமூலத்தை ஆராய்வோம்| Dinamalar

நதிமூலத்தை ஆராய்வோம்

Updated : நவ 24, 2014 | Added : நவ 24, 2014
Advertisement
நதிமூலத்தை ஆராய்வோம்

'இம்பீரியல் கெஸட்டியர் ஆஃப் இந்தியா'வில் 'கக்கர்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட குறிப்பு சரஸ்வதி நதியின் போக்கை விவரித்திருந்தது. கூடவே இன்னொரு தகவலையும் குறிப்பிட்டிருந்தது:'பண்டைய காலங்களில் கக்கர் நதியின் கீழ்ப்பகுதியானது பட்டியாலாவில் அதனுடன் இணையும் நதியான சர்சுதி அல்லது சரஸ்வதி என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது அது ஒரு முக்கியமான நதியாக இருந்தது. எனினும், இப்போது அதன் நீர் பாசனத்துக்காகத் திருப்பிவிடப்பட்டுள்ளது. அம்பாலாவில் மட்டும் 10,000 ஏக்கர் நிலத்துக்கு இந்த நதியின் நீர்தான் பாய்ச்சப்படுகிறது. நதியின் கீழ்ப்பகுதியில் சீர்ஸா மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் ஜூன் வரை இந்த கக்கர் நதிப்படுகையில் நீர் வறண்டு போய்விடும். அந்தக் காலகட்டத்தில் நெல்லும் கோதுமையும் பெருமளவில் பயிரிடப்படுகிறது.''பஞ்சாபின் புனித நதி ஆரம்பகால பிராமணிய ஆவணங்களில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது' என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போம். 'இந்த நதி சிர்மூர் குன்றுகளில் உற்பத்தியாகி இந்துக்கள் புனிதமெனக் கருதும் சத் புத்ரி (ஆத் பத்ரி) சமவெளிப்பிரதேசத்தை வந்தடைகிறது. கக்கர் நதியில் இணைவதற்கு முன் தானேசர் என்ற புனித நகரம், அதன் பின்னர் மகாபாரதத்தின் யுத்தகளமும் இந்துக்களுடைய தீர்த்தாடன க்ஷேத்ரமுமான குருக்ஷேத்ரம் ஆகியவற்றின் வழியாகப் பாய்கிறது.'பண்டைய காலங்களில் கக்கரில் சங்கமித்த பிறகான கீழ்ப்பகுதி நதி சர்சுதி என்றே அழைக்கப்பட்டது. மலைப்பகுதிக்கு அருகில் பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பிறகும்கூட அது ராஜ்புதானா சமவெளிப் பிரதேசத்தில் பாய்ந்தது' என்று இம்பீரியல் கெஸட்டியர் மீண்டும் தெரிவித்திருக்கிறது.பூகோள சாஸ்திரத்தின் மூலம் தெரியவந்ததையும் புராதன இலக்கியங்களில் சொல்லப்பட்டதையும் ஒன்றிணைத்துப் பார்த்த பிறகு, கெஸட்டியர் தொடர்கிறது: 'சரஸ்வதி நதிக்கரையில் ஆரம்ப கால ஆரியர்களின் குடியிருப்புகளில் சில அமைந்திருந்தன. இதனைச் சுற்றிலுமிருந்த இடங்களை வேத காலம் முதலே மக்கள் புனித பூமியாகக் கருதி வழிபட்டனர். இந்துக்கள் இந்த நதியைக் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியுடன் இணைத்துப் பார்க்கின்றனர்.' இப்படி அடையாளப்படுத்திக்கொள்வதற்கான காரணங்களைப் பின்னர் ஆராயலாம். அதற்கு முன்பு இந்தப் பகுதியின் நிலவியல் எப்படியிருந்தது என்பதையும், சரஸ்வதி நதி 'மறைந்து போன'தற்கான காரணங்களையும் பார்க்கலாம்.1879ல் பிரிட்டிஷ் புவியியலாளர் ரிச்சர்ட் டிக்ஸன் ஒல்தாம் இந்திய புவி இயல் ஆய்வு நிறுவனத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 21. அவருடைய தந்தை தாமஸ் ஒல்தாம் அந்த நிறுவனத்தின் முதல் இயக்குநராக இருந்தார். ஆனால், விஞ்ஞான உலகம் தந்தையைவிட மகனையே பெரிதும் நினைவில் வைத்திருக்கிறது. குறிப்பு உதவிப் பணிகள், நினைவுக்குறிப்புகள், இந்திய புவியியல் சார்ந்த எண்ணற்ற ஆய்வுக்கட்டுரைகள் எழுதியதோடு மட்டுமல்லாமல் நிலநடுக்கங்களை ஆராய்வதிலும் ஒல்தாம் தேர்ச்சிபெற்றிருந்தார். 1897ல் அஸ்ஸாமில் வந்த நில நடுக்கம் ஷில்லாங்கைத் தரைமட்டமாக்கியபோது (அது அப்போது அந்த மாநிலத்தின் பகுதியாக இருந்தது) அவருக்கு இருந்த நில நடுக்கம் சார்ந்த அறிவு புவியின் உருகிய குழம்புப் பாறை அங்கு இருக்கிறது என்ற முடிவுக்கு அவரை இட்டுச்சென்றது. உடல் நலக் குறைபாடு காரணமாக ஒல்தாம், தன் 45வது வயதில் ஜி.எஸ்.ஐ.யில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வெளியேறினார். எனினும், இங்கிலாந்தில் இருந்தபடியும் பிறகு ஃப்ரான்ஸின் தென் பகுதியில் இருந்தபடியும் தன் துறை சார்ந்து தொடர்ந்து பங்களிப்பு செய்துவந்திருக்கிறார். அதிக முக்கியத்துவம் பெறாத அவருடைய ஆய்வுகள்தான் நமக்கு இந்த இடத்தில் மிகவும் முக்கியம். நதியில் மேல் பகுதியில் (சரியாகச் சொல்வதானால், நதிப்படுகையின் மேல் பகுதியில்) அதாவது பவல்பூரிலிருந்து ஹிஸ்ஸார் வரையுள்ள பகுதியில் துணை ஆய்வாளராக ஒல்தாம் மேற்கொண்ட அந்த ஆய்வுகளின் முடிவுகளை இப்போது பார்க்கலாம். அவருக்கு புவியியல் துறை சார்ந்து இருந்த நிபுணத்துவம் பிற ராணுவ முன்னோடிகளைவிடக் கூடுதல் சாதகமான அம்சமாக இருந்தது.
1886ல் The Journal of the Asiatic Society of Bengalல் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் சரஸ்வதி நதி வறண்டு போனதற்கு அங்கு பெய்து கொண்டிருந்த மழையின் அளவு குறைந்ததுதான் காரணம் என்ற வாதத்தை நிராகரித்தார். ஏனெனில், அதுதான் காரணமென்றால், அந்தப் பகுதியிலிருந்த அனைத்து நதிகளையும் அது பாதித்திருக்க வேண்டும். ஆகவே, இந்தியப் பாலைவனத்தில் 'மறைந்த' நதி சரஸ்வதி அல்ல. மாறாக, அது சட்லெஜ்தான் என்றும், அது மேற்கே திரும்பி பியாஸ் (பீயாஸ்) நதியுடன் இணைந்த காரணத்தாலேயே 'காணாமல்' போயிற்று என்றும் ஒல்தாம் வாதிட்டார். இந்த சட்லெஜ் நதி ரூபார் (இந்திய பஞ்சாப் பகுதியில் சண்டிகருக்கு அருகில் இருக்கும் ரூபார் அல்லது ரூப்நகர்) அருகே மேற்கு திசையில் சட்டென்று வளைந்து செல்கிறது. இந்த நதியையும் ஐம்பது கி.மீ கிழக்கிலுள்ள கக்கரையும் இணைக்கும் ஒரு புராதன நதியின் படுகை காணப்பட்டது. இந்தக் காரணங்களால் ஒல்தாமின் விளக்கம் சரிதான் என ஒப்புக்கொள்ளப்பட்டது.மேலும், வேதகாலத்தில் யமுனை நீரின் ஒரு பகுதி கக்கர்ஹக்ரா நதிப்படுகையில் பாய்ந்திருக்கலாம் என்றும் ஒல்தாம் எண்ணினார். 'மலையிலிருந்து சமவெளிக்கு வந்த ஜமுனை (யமுனை) நதி இரண்டாகப் பிரிந்திருக்கலாம். பஞ்சாப் பக்கம் திரும்பி ஓடிய கிளைக்கு சரஸ்வதி என்றும், கங்கை நதியில் சங்கமித்த நதிக்கு யமுனை என்றும் பெயரிடப்பட்டிருக்கலாம்.' சட்லெஜும் யமுனையும் வழிமாறி ஓடியதால் சரஸ்வதி நதிக்குப் போதிய நீர் கிடைக்கவில்லை. இந்தக் காரணத்தாலேயே 'அந்தப் பகுதியிலிருந்த நீர்நிலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன' என்று ஒல்தாம் தெரிவித்திருக்கிறார். வட இந்திய நதிகளின் தாறுமாறான போக்கே இதற்குக் காரணம். இதற்கு மிக சமீபத்திய எடுத்துக்காட்டாக அவர், 19ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில், பிரம்மபுத்ரா நதி கங்கையுடன்இணையுமிடத்துக்குச் சற்று மேலாக (இன்றைய பங்களாதேஷில்) வழிமாறி ஓடியதைக் குறிப்பிடுகிறார். வட இந்திய நதிகள் இப்படி அடிக்கடித் தடம் மாறி ஓடுவதற்குக் காரணம் முழு கங்கைச் சமவெளிப் பிரதேசமும் பெரிதும் சம தளமான படுகையாக இருப்பதுதான். இதன் விளைவாக அந்தப் பகுதியில் மணல் படுகைகள் உருவாவதும் நில அரிப்பும் பெரிய அளவில் நடந்தேறின. இதனாலேயே அந்தப் பகுதியில் நதிகள் அடிக்கடித் தடம் மாறின. இம்மாதிரியான நிகழ்வுகள் தக்காணப் பீடபூமியில் அதிகமாகக் காணப்படுவதில்லை.
ஒருவகையில் ஒல்தாம், பொ.யு.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ட்ராபோ என்ற கிரேக்க அறிஞர் சொன்னதையே மேற்கோள்காட்டியிருக்கக்கூடும். புராதன உலகம் பற்றி ஸ்ட்ராபோ எழுதிய 'ஜியாக்ரஃபி' என்ற புத்தகத்தை மிஞ்சும்படியான ஒன்றைப் பல நூற்றாண்டுகள்வரை யாரும் எழுதியிருக்கவில்லை. வடமேற்கு இந்தியாவைப் பற்றி எழுதும்போது பல்வேறு கிரேக்க வரலாற்றாசிரியர்களின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார். மாவீரன் அலெக்ஸாண்டருடன் இந்தியாவுக்கு வந்த அரிஸ்டோபுலஸ் (அணூடிண்tணிஞதடூதண்) என்பவரும் அவர்களில் அடங்குவார். அவருடைய நூலை மேற்கோள் காட்டி ஸ்ட்ராபோ கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:'ஏதோ ஒருவேலையாக அவர் (அரிஸ்டோபுலஸ்) சென்றபோது, மிகப் பெரியதொரு நிலப்பரப்பைப் பார்த்ததாகச் சொல்கிறார். அதில் யாருமே வசிக்காத ஆயிரக்கணக்கான நகரங்களும் அதன் கிராமங்களும் இருந்தன; இதற்குக் காரணம் சிந்து நதி தனது வழக்கமான பாதையை விட்டுவிட்டு, இடது பக்கமாக மிகவும் ஆழமான வழித்தடத்தில் திரும்பிச் சென்றதுதான். இதன் விளைவாக சிந்து நதியின் வலது கரைப்பக்கங்களில் நீர்வரத்துக் குறைந்தது; புதிய வழித்தடத்துக்கு மேலாக ஓடிய வெள்ளங்களினால் உருவானதாகவும் புதிய வெள்ளங்களுக்கும் மேலான படுகையாகவும் அது இருந்ததால், நதியின் நீர் அங்கு பாயவில்லை.'சிந்து நதியின் வலது கரைப்பக்கம் எப்படி மேடாக மாறியது? ஸ்ட்ராபோ இதற்கான காரணத்தை சாதுரியமாக யூகித்திருக்கிறார். 'இந்தியாவில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நிலமானது துவாரங்கள் மிகுந்ததாகவும் விரிசல் மிகுந்ததாகவும் ஆகிவிடுகிறது. இதன் மூலம் பூகம்பங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன. அப்போது நதிகளின் போக்கும் மாற்றிவிடுகிறது.' பூகம்பங்கள் நிகழ்வது பற்றிய ஸ்ட்ராபோவின் கற்பனை அதிகப்படியானதுதான். ஆனால், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிகழும் பூகம்பங்கள் அங்கு ஓடும் நதிகளின் போக்கையே மாற்றிவிடுகின்றன என்ற அவருடைய யூகம் மிகச் சரியாக இருந்தது. சொல்லப்போனால், சரஸ்வதி நதி (சிந்து நதியின் விஷயத்தில் இதை நாம் பார்த்தோம்) பாதை மாறியதற்கு இதுதான் காரணம் என்று இன்றைய புவியியல் அறிஞர்கள் முன்வைத்துவருகின்றனர்.=========சரஸ்வதி : ஒரு நதியின் மறைவுமிஷல் தனினோதமிழில் : வை. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 416 விலை ரூ.300இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-635-3.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X