தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், பேக்கரி அருகே ஸ்கூட்டரை ஓரம் கட்டினர். சூடா ரெண்டு இஞ்சி டீ ஆர்டர் கொடுத்த மித்ரா, ""நைட் 10.00 மணிக்கு தள்ளுவண்டி டிபன் கடையில் ஒரு ஆசாமி போதையில் நின்னு, "அலம்பல்' செய்துக்கிட்டு இருந்தார். அந்த வழியா ரோந்து வந்த இளைஞர் போலீஸ் படை வீரர்கள் ரெண்டு பேர், அந்தாளுகிட்ட போய் மிரட்டும் தொனியில் பேசியிருக்காங்க. போதையில் இருந்தபோதிலும், அவர், மரியாதையா பேசியிருக்கார். ஆனா, இளைஞர் படையை சேர்ந்த ரெண்டு பேரும் கொஞ்சம் எகிறியிருக்காங்க. அந்தாளு, கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்துட்டு, ரெண்டு பேரையும் புரட்டி எடுத்துட்டார்,'' என்றாள்.
டேபிளுக்கு வந்த இஞ்சி டீயை வாங்கி உறிஞ்சிய சித்ரா, ""அய்யய்யோ அப்புறம், என்னாச்சு,' என படபடத்தாள்.
""அதிர்ச்சியான அவங்க ரெண்டு பேரும், உடனே ரோந்து போலீசுக்கு தகவல் சொல்லியிருக்காங்க. ரோந்து வாகனத்தில் வந்த எஸ்.ஐ., வண்டிக்குள்ளேயே இருந்திருக்கார்; இறங்கி வந்து என்னாச்சுன்னு விசாரிக்கலை. இவங்க போய் கேட்டப்போ, "நீங்க ரெண்டு பேரும் ஜூனியர். உங்க கிட்ட நான் வந்து, என்ன நடந்ததுன்னு கேட்கணுமா? நீங்களா தான் வந்து சொல்லணும்னு சொல்லியிருக்கார். அதுக்கு அப்பறம் விசாரிச்சா, அடிச்ச ஆளு, ஆளும்கட்சியை சேர்ந்த "டாஸ்மாக்' பார் உரிமையாளரின் அண்ணனாம். போலீஸ்காரங்க, பேசாம போயிட்டாங்க,'' என்றபடி, டீயை மடமடவென குடித்து விட்டு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.
காய்கறி பைகளை சித்ரா எடுத்துக் கொண்டு, பின்னால் அமர்ந்தாள். வீட்டை நோக்கி ஸ்கூட்டர் விரைந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த "டாஸ்மாக்' மதுக்கடையில் கூட்டமாக இருந்தது. அதை பார்த்ததும். "டாஸ்மாக்' மதுக்கடை ஊழியர்களும் வருத்தத்துல இருக்காங்க தெரியுமா என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""ஏன்... என்னாச்சு... அவங்களுக்கு என்ன?,'' என மித்ரா கேட்க, ""கடையில் வசூலாகும் பணத்தை வங்கியில் செலுத்துறாங்க. ரெண்டு நோட்டு, மூணு நோட்டு கள்ளநோட்டா இருந்துச்சுன்னு, வங்கியில் சொன்னாங்கன்னு ஆபீசுல இருக்கற ஒருத்தர், கடை ஊழியர்களிடம் ஆயிரம், ஆயிரத்து ஐநூறுன்னு வசூல் பண்ணிடுறார். உண்மையிலேயே கள்ளநோட்டு இருந்தா, அதை கிழித்து பாதியை திரும்ப தரணுமே. அப்படி எதுவும் தர்றதில்லை. வசூலிக்கிற
பணம் எங்கே போகுதுன்னு தெரியலை; தலைவிதியை நொந்தபடி, பணத்தை கொடுத்துட்டு, புலம்பிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
தாராபுரம் ரோடு சிக்னலை கடந்து சென்றபோது, கோவில்வழி பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் ஸ்டாப்பில் காத்திருந்தனர். அதைப்பார்த்த மித்ரா, ""கொஞ்ச நாளைக்கு முன்னாடி திறப்பு விழா நடத்துன, பஸ் ஸ்டாப்பில் கல்வெட்டை மூடி வச்சுட்டாங்க... கேள்விப்பட்டீயா,'' என கேட்டாள்.
""இல்லையே... எந்த ஊர்ல நடந்துச்சு? என்ன பிரச்னை,'' என சித்ரா கேட்க, ""மேற்குபதி ஊராட்சியில், வடக்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் பஸ் ஸ்டாப் கட்டியிருக்காங்க. திறப்பு விழாவுக்கு போன அமைச்சர் "டென்ஷன்' ஆகிட்டார். அவர் பெயரை காட்டிலும், ஒன்றிய தலைவரின் பெயர் கொஞ்சம் பெரிசா இருந்திருக்கு. பெயரை இப்படித்தான் சின்னதா போடுறதானு கண்டிச்சிருக்கார். வேற வழியில்லாம, கல்வெட்டை மறைச்சு வச்சிட்டாங்க,'' என்ற மித்ரா, ""கிட்டத்தட்ட 20 லட்சத்தை நெருங்கிடும்னு சொல்றாங்க. ரொம்பவே ஆச்சரியமா இருக்கு,'' என, புதிர் போட்டாள்.
""அதிகாரிகள் வசூலிச்ச தொகையா?,'' என சித்ரா கேட்க, ""வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி செஞ்சாங்கள்ல. புதுசா வாக்காளரா சேர்வதற்கு மட்டும் இதுவரை 71 ஆயிரம் பேர் விண்ணப்பம் செஞ்சிருக்காங்க. திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் மட்டும் 22 ஆயிரம் பேர் "அப்ளை' பண்ணியிருக்காங்க. பல்லடத்தில் மட்டும் 14,366 பேரை சேர்த்திருக்காங்க. தேர்தல் பிரிவு அதிகாரிகள் ரொம்ப ஆச்சரியப்படுறாங்க. ஜனவரி மாசம் இறுதி பட்டியல் வெளியிடும்போது, வாக்காளர் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கிடும்னு சொல்றாங்க,'' என மித்ரா சொல்லி முடிப்பதற்கும், வீடு வருவதற்கும் சரியாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE