சிக்குறதெல்லாம் பெண்கள் தப்புறதெல்லாம் ஆண்களா?| Dinamalar

சிக்குறதெல்லாம் பெண்கள் தப்புறதெல்லாம் ஆண்களா?

Added : நவ 25, 2014
Share
''மரத்துல ஆணி அடிச்சாத்தான தப்பு; மரத்தையே பிடுங்கிட்டா...!,'' நன்றாகப் பேசிக்கொண்டு வந்த மித்ரா, திடீரென 'பன்ச்' டயலாக் பேசவும், 'ஜெர்க்' ஆகி, வண்டியை நிறுத்தினாள் சித்ரா. இங்கிலீஷ் கிளப் ரோட்டில், 'வெஸ்பா' கிரீச்சிட்டு நின்றது. ''என்னடி மித்து! என்னாச்சு...என்னவோ உளர்ற?,'' என்று சற்று பயத்தோடு கேட்டாள் சித்ரா. அங்கே இருந்த 2 மரங்கள் மொட்டையாக நிற்பதைக்
சிக்குறதெல்லாம் பெண்கள்  தப்புறதெல்லாம் ஆண்களா?

''மரத்துல ஆணி அடிச்சாத்தான தப்பு; மரத்தையே பிடுங்கிட்டா...!,''


நன்றாகப் பேசிக்கொண்டு வந்த மித்ரா, திடீரென 'பன்ச்' டயலாக் பேசவும், 'ஜெர்க்' ஆகி, வண்டியை நிறுத்தினாள் சித்ரா. இங்கிலீஷ் கிளப் ரோட்டில், 'வெஸ்பா' கிரீச்சிட்டு நின்றது.


''என்னடி மித்து! என்னாச்சு...என்னவோ உளர்ற?,'' என்று சற்று பயத்தோடு கேட்டாள் சித்ரா.


அங்கே இருந்த 2 மரங்கள் மொட்டையாக நிற்பதைக் காண்பித்த மித்ரா, அதே ரோட்டில், 2 ஆண்டுகளுக்குள் மொத்த மரங்களும் வெட்டப்பட்டு, சாலையே அதன் அழகை இழந்து போனதைச் சொல்லி வருத்தப்பட்டாள்.


''மரங்களை நேசிக்கிற மேயர் நமக்குக் கிடைச்சது சந்தோஷம் தான். மரத்துல ஆணி அடிக்கிறதைப் பார்த்தே கொந்தளிக்கிறவரு, இனிமே யாராவது அனுமதியில்லாம இப்பிடி மரத்தை வெட்டுனா, விட மாட்டார்னு நினைக்கிறேன்... நீ வண்டி எடுக்கா!,'' என்றாள் மித்ரா.


''கொஞ்சம் பொறுடி...எனக்கு இந்த 'டவுட்'டை கிளியர் பண்ணு. இவரென்ன திடீர்னு இப்படி கிளம்பிட்டாரு. 'வேற எந்த ஆணியையும் பிடுங்க வேணாம்'னு இவர்ட்ட சொல்லிட்டாங்களா?,'' என்றாள் சித்ரா.


''சொன்னாங்களா என்னன்னு தெரியாது. ஆனா, கார்ப்பரேஷன்ல அவரால கொஞ்ஞ்ஞ்சம் கூட சுதந்திரமா இயங்க முடியலைங்கிறது தான் நிஜம்கிறாங்க!,'' என்றாள் மித்ரா.


''டிஎம்கேகாரங்க அவுங்க தலைவரு 'பினாமி அரசு'ன்னு அறிக்கை விட்ட பாணியில, 'பினாமி மேயர்'னு பீளமேட்டுல பேனரே வச்சாங்க...தெரியாதா?,'' என்றாள் சித்ரா.


''நானும் அதைப் பார்த்தேன். அதுலயும், ஆளும்கட்சியோட உள்ளடி வேலை இருக்குன்னு சொல்றாங்க. ஒரு வேளை இருக்குமோ?,''

''அந்தக்கட்சியில அதுக்கெல்லாம் குறைச்சலே இல்லை தான். ஆனா, கார்ப்பரேஷன் கான்ட்ராக்டர் ஒருத்தர் தான், கார்ப்பரேஷன் ஆபீஸ்ல 'ராஜாதி ராஜனா' வலம் வர்றாருங்கிறாங்க. அவரு சொல்லாம, எந்த டிபார்ட்மென்ட்லயும் எந்த பைலும் நகராதாம். அப்புறம்... டிஎம்கேகாரங்க சொல்றதுல என்னா தப்பு?''


''கரெக்ட் தான்க்கா! 'அநியாயத்துக்கு எதிர்பார்க்கிறாங்க; இதுக்கு அவரே தேவலை!'ன்னு ஆபீசர்களெல்லாம் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்கங்கிறது தான் உண்மை!,'' என்றாள் மித்ரா.


''பாவம்! நம்ம புது கமிஷனர்...சின்ன வயசு...பெரிய அளவுல பேரு வாங்கணும்னு கனவுகளோட களம் இறங்கிருக்காரு. என்ன பண்ணப்போறாரோ?,'' என்று வருத்தப்பட்டாள் சித்ரா.


''அப்படின்னா, ஒன்ற வருஷத்துலயும் ஒண்ணும் நடக்காதுங்கிறீயாக்கா?,'' வேதனையோடு கேட்டாள் மித்ரா.


''நடக்கும் என்பார் நடக்காதுங்கிறது தான...இந்த கவர்மென்ட்டோட பாட்டு!,'' என்றாள் சித்ரா.


''என்ஜிஓஸ் எல்லாத்தையும் கூப்பிட்டு, குளங்களைக் காப்பாத்துறதைப் பத்தி மேயரு பேசிருக்காரு. குப்பைய எரிச்சு 'பவர்' தயாரிக்கிறது, கட்டடக் கழிவை மறு சுழற்சி பண்றதுன்னு பல திட்டங்களை 'ஸ்பீடா' பண்ணப் போறதாச் சொல்லிருக்காரு. பார்ப்போம்...என்ன நடக்குதுன்னு?,'' என்றாள் மித்ரா.


''கார்ப்பரேஷன் கதைய விடு...போலீஸ் கதை சொல்றேன் கேளு!''


''சொல்லு சொல்லு...!,'' என்று ஆர்வமானாள் சித்ரா.


''காந்திபுரத்துல ஒரு ஓட்டல்ல 590 ரூபாய்க்கு பார்சல் வாங்கிருக்காரு ஒரு போலீஸ் டிரைவரு. கல்லாவுல காசு கேட்டதுக்கு, கையில இருந்த அந்த சீட்டைக்கொடுத்தாராம். அதுல, அந்த ஏரியா போலீஸ் ஆபீசர் கையெழுத்துப் போட்டு, 'பிரியாணி, சிக்கன்'னு பட்டியல் கொடுத்திருக்காரு. கடைசி வரைக்கும் காசே தரலையாம்!,'' என்றாள் மித்ரா.


''ஊட்டிக்கு '10 சி'யை பத்திரமா கொண்டு போனார்னு சொல்லுவாங்களே...அவரா இவரு?,'' என்று சித்ரா கேட்க, வேகமாக, தலையாட்டினாள் மித்ரா.


''அக்கா! நம்மூர்ல விஜிலென்ஸ் 'டிராப்'ல மாட்டுற 'லிஸ்ட்'ல லேடி ஆபீசர் தான் அதிகமா இருக்காங்க பார்த்தியா...!,'' என்றாள் மித்ரா.


''ஆமா மித்து! சப்-ரிஜிஸ்ட்ரார், கார்ப்பரேஷன் இன்ஜினியரு, ஆர்.டி.ஓ., இ.பி., ஆபீஸ்ல, வரிசையா லேடீஸ் தான் அதிகமா மாட்டியிருக்காங்க. இப்ப இந்த ஆர்.ஐ., மணிமேகலை...!,'' என்றாள் சித்ரா.


''ஒரு ஆர்.ஐ.,யைப் பிடிச்சா போதுமா? ஊருக்குள்ள சில ஆர்.ஐ.,ங்க போடுற ஆட்டம் இருக்கே... நஞ்சுண்டாபுரம் ரோட்டுல, குவாட்டர்சும், ஆபீசும் ஒன்னா இருக்கிற ஆர்.ஐ.யைத் தேடி, சிங்காநல்லூர்ல இருந்து மக்கள் வர்றாங்க. அவரு...ஒரு வாரிசு சான்றுக்கு அஞ்சாயிரத்துல இருந்து பத்தாயிரம் ரூபா கேக்குறாராம். சாதிச்சான்றுன்னா, குறைச்சது ரெண்டாயிரம் கொடுக்கணுமாம். காசு கொடுக்காதவங்களை, கண்டபடி திட்டி, அலைய விடுறாராம்!,'' என்றாள் மித்ரா.


''இவரையெல்லாம் விஜிலென்ஸ் பிடிக்க மாட்டாங்களா?,'' என்றாள் சித்ரா.


''அவரு லஞ்சம் வாங்குறதை விட, பெரிய 'கம்பிளைன்ட்' என்னன்னா...அந்த ஆர்.ஐ., ஆபீஸ்ல ராத்திரியானா, தினமும் குடியும், கும்மாளமும் தானாம்!,'' என்றாள் மித்ரா.


அப்போது அவர்களை ஒட்டி நின்ற காரின் கதவு திறக்க, உள்ளேயிருந்து ஒருவர், 'மேம்! இங்க மோகன்பாபு சார் வீடு எங்க இருக்கும்னு தெரியுமா?,'' என்று கேட்க, இருவரும் 'தெரியாது' என்று கூறி, வண்டியைக் கிளப்பினர். வாகனம், ஜி.எச்.,க்குள் புகுந்ததும் கத்தினாள் மித்ரா.


''என்னக்கா! இங்க வந்திருக்க?,''


''ஏன்டி! எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தரைப் பார்க்கணும். கொஞ்சம் பொறுக்க மாட்டியா?,'' என்று கோபப்பட்டாள் சித்ரா.


''அதில்லக்கா! ஆர்.டி.ஓ., ஆபீஸ் போகணும். லேட்டாயிருமேன்னு தான்...!,'' என்றாள் மித்ரா.


''பத்தே நிமிஷம்...போயிரலாம்,'' என்ற சித்ரா, ''ஆர்.டி.ஓ., செக் போஸ்ட்ல ஒரு லேடி சம்பாதிக்கிறதைப் பத்தி பேசுனோமே...அந்தம்மாவை அங்கயிருந்து வால்பாறைக்கு டிரான்ஸ்பர் பண்ணியும் இன்னமும் அங்க போகாம அடம் பிடிச்சிட்டு, நார்த் ஆபீசை விட்டு நகர மாட்டேங்கிறாங்க,'' என்றாள்.


''வெஸ்ட்ல வேற மாதிரி கூத்து நடக்குது. அங்க இருக்கிற ஒரு லேடி ஆபீசர், 'கவுன்ட்டர்' டூட்டியைத் தவிர, வேற எதையும் பார்க்க மாட்டாராம். புரோக்கர் மூலமா வர்ற அப்ளிகேஷனை மட்டும் தான் வாங்குவாரு. நேரடியா யாராவது அப்ளிகேஷன் கொடுத்தா, 'இதுல முக்கியமான பேப்பர் இல்ல'ன்னு தூக்கி எறிஞ்சு, தாறுமாறா திட்டி அனுப்பிருவாராம்!,'' என்றாள் மித்ரா.


''அடேங்கப்பா! 'இவ்ளோ' தைரியமா வாங்குறதுக்கு 'பேக் ரவுண்ட்'ல யாராவது இருக்கணுமே!,'' என்று சந்தேகம் கிளப்பினாள் சித்ரா.


''விசாரிச்சேன். அப்பிடி யாரும் இல்லியாம்....'என்னிய இங்கயிருந்து தூக்குனா, கையப் பிடிச்சு இழுத்தான்'னு கேசு கொடுத்திருவேன்னு மெரட்டுறாங்களாம். அதனால தான், ஆபீசருங்களே பயப்படுறாங்களாம்,'' என்றாள் மித்ரா.


''சிவசங்கரி மேடம் எழுதுன 'இன்னொருத்தி ப்ளஸ் இன்னொருத்தி' நாவல் மாதிரி, லஞ்சம் வாங்கி பிடிபடுறவுங்க எண்ணிக்கை...இப்பிடியே நீண்டுக்கிட்டே போனா, லேடி ஆபீசர்சைப் பத்தி மக்கள் என்ன தான் நினைப்பாங்க?,'' என்றாள் சித்ரா.


''இதுல ஆணென்ன பெண்ணென்னக்கா இருக்கு? ஹவுசிங் போர்டுல, பத்திரம் கொடுக்கிறதுக்கு ஒரு லேடி கிளர்க், 50 ஆயிரம், 70 ஆயிரம்னு லஞ்சம் வாங்குறாங்கன்னு ஒரு கம்பிளைன்ட் வந்து, பெரிய ஆபீசர் கூப்பிட்டு 'வார்ன்' பண்ணிருக்காரு. அதுக்கு அவுங்க அண்ணன், பட்டப்பகல்ல நட்டநடு ஆபீஸ்ல நின்னுட்டு, ஆபீசரை வெட்டுவேன், குத்துவேன்னு 'சவுண்ட்' விட்ருக்காரு,'' என்றாள் மித்ரா.


''அவ்ளோ 'சவுண்ட்' பார்ட்டியா அவரு?,''


''ஆமாக்கா! அதே ஆபீஸ்ல சாதாரண வாட்ச்மேனா இருந்து, ஆளும்கட்சி யூனியன் பதவியைக் கைப்பத்தி, அதை வச்சு ஏகப்பட்ட 'தில்லாலங்கடி' வேலை செஞ்சு, கடைசியில 'சஸ்பெண்ட்' ஆனவரு. அவரோட வீட்டுக்காரம்மா...கார்ப்பரேஷன் கவுன்சிலரு. அப்புறம் ஏன் 'சவுண்ட்' விட மாட்டாரு?,''


''மித்து! இதே ஆபீஸ்ல 5 லட்சம், 6 லட்சம் இழப்பீடு பண்ணுன பல ஆபீசர்களை 'சஸ்பெண்ட்' பண்ணிருக்காங்க. ஆனா, வெள்ளக்கிணறு திட்டத்துல, போர்டுக்கு 90 லட்ச ரூபா 'லாஸ்' பண்ணுன ஒரு லேடி ஆபீசர்க்கு '17 பி' சார்ஜ் கொடுத்து, விட்டு வச்சிருக்காங்க. இது எப்பிடி இருக்கு?,'' என்றாள் சித்ரா.


''லேடி ஸ்டாஃப்களையே குறை சொல்லிட்டு இருக்காதக்கா. இதே ஆபீஸ்ல இருக்கிற சின்ன வயசு அசிஸ்டென்ட் ஒருத்தரு, கணபதி மாநகர்ல 5 'ஷாப் சைட்'களை அறிவிப்பு, விளம்பரம், குலுக்கலே இல்லாம வித்து செம்ம காசு பாத்திருக்காரு!'' என்றாள் மித்ரா.


''அட கணேசா! எங்க தான் போய் முட்டிக்கவோ?'' என்றாள் சித்ரா.


''முட்டிக்கிறதைப் பத்திச் சொன்னதும், வெட்டிக்கிட்ட மேட்டர் ஞாபகம் வந்துருச்சு. திமுக உட்கட்சித் தேர்தலுக்கு ஆள் பிடிக்க, ஆனைகட்டியில ஒரு 'ரிசார்ட்ஸ்'ல பெரிய பார்ட்டி நடந்திருக்கு. ராத்திரி ஒரு மணிக்கு, ஃபுல் மப்புல சிகரெட் கேட்டு, 'கிடைக்காது'ன்னு சொன்ன வாட்ச்மேனை, பக்கத்துல கிடந்த மொட்டை அருவாளை எடுத்து வெட்டிருக்காரு ஒரு எக்ஸ் எம்.எல்.ஏ.,! போலீஸ்ல கேசு போடாம, அப்பிடியே அமுக்கிருக்காங்க!,'' என்றாள் மித்ரா.


''அட ராமா! இந்த இந்திரன் சந்திரன்களை நினைச்சா எனக்கு தலை சுத்துது...வா...என் பிரண்ட் கிட்ட போன்ல பேசிக்கிறேன்!,'' என்று வண்டியைக் கிளப்பினாள் சித்ரா.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X