ஸ்ரீநகர் : காஷ்மீரில் பிரிவினைவாதிகள் உட்பட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பத்திரிகையாளர் திலீப் பட்கான்கர் தலைமையிலான மூன்று பேர் குழுவினர் நேற்று ஸ்ரீநகர் சென்றனர். இன்று முதல் பேச்சுவார்த்தையை துவக்குகின்றனர்.
காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் முதல் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. வன்முறையாளர்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நூற்றுக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு தொடர்ந்து அமைதியின்மை நிலவியது. இந்தப் பிரச்னையை தீர்க்கவும், மாநிலத்தில் நிரந்தர அமைதியை உருவாக்கவும் மத்திய அரசு விரும்பியது. இதற்காக, காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் உட்பட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பத்திரிகையாளர் திலீப் பட்கான்கர், கல்வியாளர் ராதாகுமார், தகவல் ஆணையர் எம்.எம்.அன்சாரி ஆகிய மூன்று பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்தது.
சமீபத்தில் பிரதமரைச் சந்தித்துப் பேசிய இந்தக் குழுவினர், நேற்று ஸ்ரீநகர் சென்றனர். நான்கு நாள் பயணமாக சென்றுள்ள அவர்கள், மாணவர்கள், பிரிவினைவாதிகள் என, அனைத்துத் தரப்பினரையும் சந்தித்துப் பேசி அவர்களின் கருத்தை கேட்க உள்ளனர். இதற்கிடையில், காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், பிரிவினைவாத அமைப்புகள் நேற்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், ஸ்ரீநகரின் ஒரு சில இடங்கள் தவிர பிற பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் திறந்திருந்தன. தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ""காஷ்மீரில் சில நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. தற்போது, அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. எனவே, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.
ஊடுருவல் முறியடிப்பு: காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் முயன்றனர். உடன், பாதுகாப்புப் படையினர் சுட்டனர். பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில், பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ""பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து, இந்தியாவிற்குள் ஊடுருவ 500 பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டில் மட்டும், இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE