சரஸ்வதியின் கிளை நதிகள்| Dinamalar

சரஸ்வதியின் கிளை நதிகள்

Added : நவ 29, 2014
Advertisement
சரஸ்வதியின் கிளை நதிகள்

சரஸ்வதி நதியைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டதைவிடக் கூடுதலாகப் பிற மூன்று வேதங்களில் (யஜூர், ஸாம, அதர்வண வேதங்களில்) ஒன்றும் சொல்லப்படவில்லை. யஜூர் வேதத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சரஸ்வதி நதிக்கு ஐந்து கிளை நதிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில் 'ஏழு சகோதரிகள்' என்று சொல்லப்பட்டதன் பிரதிபலிப்பு.எனினும், அடுத்தகட்ட வேத படைப்புகளான 'பிரமாணங்கள்'தோன்றுவதற்கு முன்பாக வேறு ஏதோ ஒரு முக்கிய சம்பவம் நடந்திருக்க வேண்டும். அந்தப் புராதனப் படைப்புகள் சிலவற்றுள் சரஸ்வதி நதி 'விநாசனம்' என்ற இடத்தில் மறைந்தது என்று சொல்லப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். விநாசனம் என்றால் மறைவு அல்லது இழப்பு என்று அர்த்தம்: அதாவது, முன்பு 'தங்கு தடையின்றி' கடல் வரை ஓடிக் கொண்டிருந்த சரஸ்வதி நதி இப்போது அப்படி இல்லை.சில பிரமாணங்கள் சரஸ்வதி நதி 'ப்லாக்ஷப்ராஸ்ரவனா'என்ற இடத்தில் உற்பத்தியானதாகக் குறிப்பிடுகின்றன. அங்கு ஒரு மிகப் பெரிய ஆலமரம் (ப்லாக்ஷா) இருந்ததால் அந்தப் பெயர் வந்தது. ஷிவாலிக் மலைப்பிரதேசத்துக்கு23 அருகில் இந்த இடம் இருந்ததாக மகாபாரதம் தெளிவாகக் கூறுகிறது. இந்த உற்பத்தி ஸ்தானத்திலிருந்து சரஸ்வதி மண்ணில் மறைந்து போன இடம் 44 'ஆஷ்வினா'களுக்கு அப்பாலிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. (அதாவது, குதிரையில் 44 நாட்கள் பயணம் செய்யும் தொலைவு). இங்கு ஒரு பிரச்னை எழுகிறது. ஒரு நாளைக்கு நாற்பது கி.மீட்டர் தூரம் கடந்து சென்றாலும்கூட இந்த இரு இடங்களுக்குமிடையே உள்ள தூரம் ஷிவாலிக் மலைத் தொடரிலிருந்து அரபிக்கடல் வரையுள்ள தூரத்தைவிட அதிகமாக இருக்கும்! இங்கு சொல்லப்பட்டிருக்கும் தொலைவு கற்பனையானதே. அதை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பஞ்சவிம்சப் பிராம்மணம் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. ஏனென்றால், அது 'பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடையிலான தொலைவு அது' என்றும் சொல்கிறது.சரஸ்வதி நதி காணாமல்போன அல்லது மறைந்துபோன இந்த இடம் பவுதிக இருப்பில் இருந்து அபவுதிக நிலைக்குச் செல்ல ஆரம்பித்தது (விநாசனா என்பது 'அதர்சனா' அதாவது கண்ணுக்குத் தெரியாத என்றும் அழைக்கப்பட்டது). இதன் விளைவாக விநாசனம் தீர்த்தாடனத்தலமாக மாறியது. இதே நூலும் பின்னர் வந்த பல படைப்புகளும் தங்களுடைய புனித யாத்திரையைத் தொடங்கும் முன்பு யாத்ரீகர்கள் இங்கு எப்படியான பூஜைகள் செய்தனர் என்பதை விவரிக்கின்றன. அந்தப் புனிதப் பயணமானது சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் நோக்கியதாக த்ருஷத்வதி நதியுடன் கலக்குமிடத்தையும் கடந்து செல்வதாக இருந்தது. இந்தக் கடைசித் தகவல் மிகவும் முக்கியமானது. சரஸ்வதி நதியைப் பற்றிப் பல சிறந்த கட்டுரைகளை எழுதியுள்ள சமஸ்கிருத மொழிப்புலவர் ஓ.பி.பரத்வாஜ் 'விநாசனம்' நாளடைவில் கிழக்கு திசையில் நகர்ந்து கடைசியில் பாசுபத புராணத்தில் சொல்லியிருப்பதுபோல குருக்ஷேத்ரத்தை வந்தடைந்தது என்பதை விளக்கிக்காட்டியுள்ளார். இதன்பொருள் சரஸ்வதிநதி ஒரே நாளிலோ திடீரென்றோ வறண்டுவிடவில்லை. மாறாக, படிப்படியாகத்தான் அது வறண்டிருக்கும் என்பதுதான். அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் இதனை உறுதிப்படுத்துகின்றனர்.ராமாயண காலத்தில் சரஸ்வதி நதி 'பிரம்மாவின் மகளான இக்ஷூமதி' என்ற பெயரில் அறியப்பட்டு வந்தது என்றும் பரத்வாஜ் சொல்கிறார். பரதனை அயோத்திக்குத் திரும்பக் கூட்டிக்கொண்டு போவதற்காக வந்த தூதர்கள் இந்த இக்ஷூமதியைக் கடந்துதான் சென்றனர். ஆனால், பிரமாணங்களில் இடம் பெற்றிருக்கும் அதிரடி மாற்றங்களை மகாபாரதம்தான் மிகச் சிறப்பாக விளக்குகிறது. மகாபாரதத்தில் கங்கை நதி (ரிக் வேதத்தில் இரண்டே இடங்களில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது) முக்கியமானது, புனிதமானது என்று சொல்லப்பட்டிருந்தாலும்கூட சரஸ்வதி நதியின் முக்கியத்துவம் குறைக்கப்படவில்லை. மகாபாரதத்தின் மிக முக்கிய நிகழ்வான, படு பயங்கரமான யுத்தம் நடந்த குருக்ஷேத்ரம் வழியாக அது கடந்து செல்வதுதான் இதற்குக் காரணம்.வேதங்களைத் தொகுத்தளித்தவரும் மகாபாரதக் காவியத்தை இயற்றியவருமான வியாஸ மஹரிஷி சரஸ்வதி நதிக்கு அருகிலுள்ள கானகத்தில் வசிக்கிறார். நாடு கடத்தப்பட்ட பாண்டவர்கள் 'தமது அன்றாடக் கடன்களை சரஸ்வதி, த்ருஷத்வதி, யமுனை நதிக்கரைகளில் கழித்தார்கள்' தொடர்ந்து 'மேற்கு திசையில் நடந்து சென்றார்கள்'. கடைசியில் சரஸ்வதி நதிக்கு அருகிலுள்ள காட்டில் அடைக்கலம் புகுகிறார்கள். வசிஷ்ட மஹரிஷியின் 'உயர்ந்த குடில்' இந்த நதியின் கிழக்குக்கரையில் ஒரு தீர்த்தத்தில் அமைந்திருக்கிறது. அவருடைய பரம விரோதியான விஸ்வாமித்திரர் எதிர்க்கரையில் வசிக்கிறார். இதன் விளைவாக அவர்களுக்கு இடையிலான பிரசித்தி பெற்ற சண்டைகளில் ஒன்றில் சரஸ்வதி நதியும் மாட்டிக்கொண்டுவிடுகிறது. ஆனால், அது வேறு ஒரு கதை.இங்கு நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், மகாபாரதத்தில் நாம் காணும் சரஸ்வதி நதியின் வர்ணனைகளில் பெரும்பாலானவை ரிக் வேதத்தில் ஏற்கெனவே உள்ளவற்றின் மறு வடிவங்களே. உதாரணமாக, 'ஹிமவத் ங்இமயசி மலையிலிருந்து பாய்ந்தோடி வருகிறது' சரஸ்வதி. அதற்கு ஏழு வடிவங்கள் உள்ளன. ரிக் வேதத்தில் 'ஏழு சகோதரிகள்' என்று சொல்லப்பட்டிருப்பதை ஒத்ததாக இது இருக்கிறது. ஏழு வடிவங்களுக்குத் தனிப் பெயர்களுமுண்டு (குருக்ஷேத்திரத்தில் ஓடும் நதிக்கு 'ஓகவதி' என்று பெயர்). இவையனைத்தும் 'ஸப்த சரஸ்வதி' ங்ஏழு சரஸ்வதிகள்சி என்ற பெயருள்ள புனித தீர்த்தத்தில் சங்கமிக்கின்றன. மீண்டும் த்ருஷத்வதி நதி சரஸ்வதியுடன் இணைத்து பேசப்படுகிறது. 'சரஸ்வதிக்குத் தெற்கேயும் த்ருஷத்வதிக்கு வடக்கேயுமுள்ள குருக்ஷேத்ரத்தில் வாழ்பவர்கள் ஸ்வர்க்கத்தில் வாழ்கிறார்கள்.'ஒரு முக்கியமான ஸ்லோகத்தில் உமா தேவி 'இந்தப் புனித சரஸ்வதி அனைத்து நதிகளிலும் முதன்மையானது. அது கடலை நோக்கி ஓடுகிறது. நதிகளில் உண்மையிலேயே அதுவே முதலானது'என்று விளக்குகிறாள். 'சரஸ்வதி கடலில் சங்கமிக்கிறது' என்று பிற இடங்களில் சொல்லப்படுகிறது.
0ரிக் வேதத்தில் சொல்லப்பட்டதுபோல இப்போதும் 'ஒரு நதி மலையிலிருந்து கடலை நோக்கி' செல்கிறது என்பதைப் பார்த்தோம். ஆனால், ஒரு முக்கியமான மாற்றம் இப்போது நடந்துவிட்டிருக்கிறது: 'போகும் வழியில் சில இடங்களில் கண்ணுக்குத் தெரிகிறாள். சில இடங்களில் மறைந்துவிடுகிறாள்.'பிரமாணங்களில் சொன்னபடி விநாசனம் என்ற இடத்தில் சரஸ்வதி 'கண்ணுக்குத் தெரியாமல்' போனாள்: 'மறைந்து போனது' 'தொலைந்து போனது'. ஒருவகையில், அது தனித்தனி சிற்றாறுகளாகச் சிதறியது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஏனெனில், சரஸ்வதி மீண்டும் பாய்ந்த இடங்களுக்கெல்லாம் சிறப்புப் பெயர்கள் உள்ளன. அவை புனிதமெனக் கருதப்படுகின்றன.சரஸ்வதி மறைந்து போனது தொடர்பாகப் பல கதைகளை உருவாக்கும் வாய்ப்பை மகாபாரதம் நழுவவிடவில்லை. அதில் ஒன்று இது. உதத்ய ரிஷியின் மனைவி யமுனையில் குளித்துக் கொண்டிருந்தபோது வருணபகவான் அவளை அபகரித்துச் செல்கிறான். தன் மனைவியைத் திரும்பத் தரும்படி நீரில் வாழும் அதன் அதிபதியான வருணைக் கட்டாயப்படுத்த உதத்ய ரிஷி, அந்தப் பகுதியிலிருந்த ஆறு லட்சம் ஏரிகளை வறண்டு போகும்படிச் செய்கிறார். சரஸ்வதியை 'காணாமல் போகும்படி'யும், 'அந்த இடத்தை விட்டு விட்டுப் பாலைவனத்துக்கு38 செல்லும்படி'யும் உத்தரவிடுகிறார்.அர்ஜுனனின் அம்பறாத்தூளியில் இருந்த அம்புகளின் எண்ணிக்கையாக இருந்தாலும் சரி, போர்களில் அணி வகுத்த யானைகளின் எண்ணிக்கையாக இருந்தாலும் சரி இதிகாசங்களில் சொல்லப்பட்ட எண்ணிக்கைகளை வாசகர்கள் (அல்லது கேட்பவர்கள்) அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் மேலே சொன்ன கதை உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்றால், அந்தக் குறிப்பிட்ட பகுதியில் எண்ணற்ற ஏரிகள் இருந்திருக்கவேண்டும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்: சரஸ்வதி நதி பாலைவனத்தில் சென்று மறைந்தது என்பதுதான் அது. இதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் இன்று தார்பாலைவனம் உள்ள மேற்கு ராஜஸ்தானில் பல ஊர்களின் பெயர்கள் லன்கரன்ஸர் என்பதுபோல், 'ஸர்' (ஸரஸ் என்றால் ஏரி) என்று முடிகின்றன. சாதாரண வரைபடம் ஒன்றிலேயேகூட நான் ஐம்பதுக்கும் மேற்பட்ட அப்படியான ஊர் பெயர்களைப் பார்த்தேன். நிச்சயம் அதற்கு மேலே நிறைய ஊர்கள் அந்தப் பெயருடன் இருக்கும். இந்த அனைத்து இடங்களும் எதற்காக மறைந்துபோன ஏரிகளின் பெயர்களைக்கொண்டதாக இருக்கவேண்டும்? மேற்கு ராஜஸ்தானின் வரைபடத்தைப் பார்க்கும் ஒரு சாதாரண சுற்றுலாப் பயணி, இந்தப் பகுதியை ஒருவகையிலான 'ஏரி மாவட்டம்' என்றுதான் நினைப்பார்.=========சரஸ்வதி : ஒரு நதியின் மறைவுமிஷல் தனினோதமிழில் : வை. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 416 விலை ரூ.300இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-635-3.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X