பிவானி:வரதட்சணை என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பலுக்கு மத்தியில், தான் வசிக்கும் கிராமத்தின் நலன் கருதி, தெருவை சுத்தப்படுத்தும் இயந்திரத்தை பெண் வீட்டாரிடம் வரதட்சணையாக பெறுகிறார், அரியானாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர். அதனால், இவரின் திருமணம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரியானா மாநிலத்தில், மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இம்மாநிலத்தின் பிவானி மாவட்ட மகா பஞ்சாயத்து தலைவரும், அரியானா அமைதிப்படை ஒருங்கிணைப்பாளருமான, சம்பூர்ண சிங்கின் மகன் சன்னி பானு. இவரின் திருமணம் டிச., 5ம் தேதி நடைபெற உள்ளது.இந்தத் திருமணத்தில், மணமகனுக்கு வரதட்சணையாக, மணப்பெண் வீட்டில் இருந்து, தெருவை சுத்தப்படுத்தும் இயந்திரத்தை (ரோடு கிளீனிங் மிஷின்) வழங்குகின்றனர்.
மேலும், திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் மற்றும் பறவைகளுக்கு உணவளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு முன் உதாரணமாக நடக்கும், இந்த வித்தியாசமான திருமணத்தை, பல்வேறு சமூக அமைப்புகள், சங்கங்கள், பஞ்சாயத்துகள், அரசியல் தலைவர்கள், பாராட்டி வரவேற்றுஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE