சபாஷ் முத்துரத்தினம்...| Dinamalar

சபாஷ் முத்துரத்தினம்...

Added : நவ 30, 2014 | கருத்துகள் (5)
Share
சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரசு ஊழியர்களுக்கான மாநில விளையாட்டுப்போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் ஒரு கட்டமாக நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் திருச்சி- தஞ்சாவூர் அணிகள் கடுமையாக மோதிக்கொண்டிருந்தது. இரு அணிகளும் பந்தை மாறி மாறி கூடைக்குள் போட்டுக்கொண்டு இருந்ததால் யாருக்கு வெற்றி தோல்வி என்பதை கணிக்கமுடியாத அளவிற்கு ஆட்டம் விறுவிறுப்பாக
சபாஷ் முத்துரத்தினம்...

சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரசு ஊழியர்களுக்கான மாநில விளையாட்டுப்போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் ஒரு கட்டமாக நடந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் திருச்சி- தஞ்சாவூர் அணிகள் கடுமையாக மோதிக்கொண்டிருந்தது. இரு அணிகளும் பந்தை மாறி மாறி கூடைக்குள் போட்டுக்கொண்டு இருந்ததால் யாருக்கு வெற்றி தோல்வி என்பதை கணிக்கமுடியாத அளவிற்கு ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.
தஞ்சாவூர் அணிக்கு பார்வையாளர்களின் கரகோஷம் அதிகமாக இருந்தது அந்த அணியின் வீரர் முத்துரத்தினம் பந்தை கடத்தி செல்லும் போதும் லாவகமாக கூடைக்குள் பந்தை போடும்போதும் கூட்டத்தினர் கைதட்டி கரகோஷம் செய்தனர். இதற்கு முக்கிய காரணம் வீரர் முத்துரத்தினத்திற்கு வலது கை முழங்கைக்கு கீழ் இல்லை என்பதுதான். ஆம் சராசரி விளையாட்டு வீரர்களுடன் போட்டியிட்டு விளையாடிய முத்துரத்தினம் ஒரு கை இல்லாமலே பிரமாதமாக விளையாடி அந்த போட்டியில் தஞ்சாவூர் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
வெற்றி புன்னகை பூக்க அரங்கத்திற்கு வெளியே வந்த வீரர் முத்தரத்தினத்தை சந்தித்து அவரது கதையை கேட்டோம். சுவாமி மலையில் பிறந்த முத்துரத்தினத்திற்கு பிறவியிலே கை கிடையாது.ஒரு கையுடன் படித்தவருக்கு படிப்பைவிட விளையாட்டின் மீதே அதிகநாட்டம் ஏற்பட்டது. பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்காமல் விளையாட்டு விளையாட்டு என்று திசை திரும்பிவிட்டார்.ஒத்தக்கையோடு விளையாடி எப்படிப்பா வாழ்க்கையில முன்னேற போற என்ற தந்தையின் கேள்விக்கு எனக்கு நம்பிக்கை இருக்குப்பா எப்படியும் விளையாட்டிலும் வாழ்க்கையிலும் ஜெயிப்பேம்பா என்று உறுதிகூறியிருக்கிறார்.
அதன்படியே உயரம் தாண்டுதல் போட்டியில் அகில இந்திய அளவில் பலவித பரிசுகள் பெற்றதை அடுத்து அவரது சாதைனையைப்பார்த்து அப்போதைய கலெக்டர் பாலசந்திரன் இவருக்கு ஒரு அரசு வேலை போட்டுக்கொடுத்தார். நார்மலாக இருப்பவர்களே அரசு வேலை கிடைத்ததும் விளையாண்டது போதும் என்று ஒய்வு எடுத்து தொப்பையுடன் வலம் வருவர் ஆனால் முத்துரத்தினமோ வேலை கிடைத்தபிறகுதான் இன்னும் வேகத்துடன் விளையாட்டில் ஆர்வம்காட்டினார்.
தடகள போட்டிகளில் இருந்து கபடி மற்றும் கூடைப்பந்தாட்டம் என்று குழுவிளையாட்டு போட்டிகளுக்கு மாறினார்.இரண்டு விளையாட்டிலும் திறன்காட்டிவந்தவரை இவரது பயிற்சியாளர் செல்வராஜ்தான் கூடைப்பந்தாட்டத்தில் கவனம் செலுத்த கேட்டுக்கொண்டு சிறப்பு பயிற்சியும் கொடுத்தார். இதன் காரணமாக தஞ்சாவூர் கூடைப்பந்தாட்ட அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தி திருச்சியுடனான போட்டியில் வெற்றிவாகை சூடினார்.
விளையாட்டுதாங்க என் உயிர் எல்லோரும் பிள்ளைகள நல்லா படியுடங்கடா என்பார்கள் நான் எம் பையன்கள் சபரிநாதன்,சுதர்சன் இரண்டு பேரையும் நல்லாவிளையாடுங்கடா என்று சொல்லித்தான் வளர்த்து வருகிறேன். இப்போது எனக்கு 49 வயதாகிறது ஆனாலும் மைதானத்தில் இறங்கிவிட்டால் 29 வயதின் வேகம் கிடைத்துவிடும்.கடந்த 30 வருடமாக விளையாடிக்கொண்டு இருக்கிறேன் நானும் என் நண்பர் ராஜாவும் ஜோடி சேர்ந்துவிட்டால் எதிரணியை துாள் துாளாக்கிவிடுவோம்.
இப்படி ஊனமாக பிறந்து விட்டோமோ என்று ஒரு நாளும் கவலைப்பட்டது இல்லை இந்த ஊனத்தோடு எப்படி ஜெயித்து காட்டுவது என்பதுதான் என் நோக்கமாகவும் லட்சியமாகவும் இருந்தது அதை நிருபித்தும் வருகிறேன். இப்போது தஞ்சாவூர் டவுன் பிளானிங் பிரிவில் உதவியாளராக இருக்கிறேன்.என் வாழ்நாள் முழுவதும் விளையாட வேண்டும் விளையாடும் போதே உயிர் போகவேண்டும் என்று விளையாட்டை உயிராக நேசிக்கும் முத்துரத்தினம் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்று வாழ்த்துவோம் நீங்களும் வாழ்த்த விரும்பினால் அவருக்கான எண்:9940948765.
-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X