வாழ்க்கையின் அற்புதமான தரிசனங்கள்!| Dinamalar

வாழ்க்கையின் அற்புதமான தரிசனங்கள்!

Added : நவ 30, 2014 | கருத்துகள் (2)
Advertisement
வாழ்க்கையின் அற்புதமான தரிசனங்கள்!

நிலைத்த உண்மைகளை ஆராயும் துறையினைத் தத்துவம் என்னும் பொதுப் பெயரால் குறிப்பிடுவர். தத்துவங்கள் அனுபவங்களின் உடனடியான வெளிப்பாடுகள்; உணர்ச்சிகளின் தீவிரமான பதிவுகள்; நிதர்சனங்களின் நேரடியான குரல்கள். சுருங்கச் சொல்வது என்றால், தத்துவங்கள், வாழ்க்கையின் அற்புதமான தரிசனங்கள்; மனித மனங்களின் இயல்பான படப்பிடிப்புகள்.

தத்துவ ஞானிகள் சில நேரங்களில் நாட்டுப்-புறங்களில் வழங்கும் பழமொழிகளைப் போல் விளங்குவார்கள்; நடைமுறை உண்மைகளைப் போகிற போக்கில் சொல்லிச் செல்வார்கள். சில நேரங்களில் அவர்கள் விடுகதைகளைப் போல் காட்சி அளிப்பார்கள்; அவர்கள் சில சமயங்களில் குழந்தைகளைப் போல் விளையாடி மகிழ்வார்கள்; சில சமயங்களில் குறிக்கோள் இல்லாத பைத்தியக்காரர்களைப் போல அலைந்து திரிவார்கள்; சில சமயங்களில் பொறுப்பும் முதிர்ச்சியும் மிகுந்த ஞானிகளைப் போல் செயல்படுவார்கள்.ஒரு தத்துவப் பேராசிரியரின் வீட்டில் ஒருவன் திருடி விட்டு ஓடினான். பேராசிரியர் வேறு திசையாக ஓடி இறுதியில் கல்லறைத் தோட்ட வாயிலில் போய் உட்கார்ந்தார். அவரிடம் கேட்டதற்கு சொன்ன மறுமொழி:“என்றைக்காவது ஒரு நாள் அவன் இங்கு வந்துதானே ஆக வேண்டும்?” தத்துவப் பேராசிரியரின் இந்தக் கருத்தை யாராலும் மறுக்க முடியுமா?


தெரிந்ததும் தெரியாததும் :

இரண்டு தத்துவ ஞானிகள் ஓர் ஆற்றின் ஓரமாக நடந்து போய்க் கொண்டிருந்தனர். ஆற்று நீரில் மீன்கள் துள்ளிக் குதித்து நீந்திக் கொண்டிருந்த காட்சியைக் கண்ட ஒரு தத்துவ ஞானி அடுத்தவரிடம், “ஆற்றில் மீன்கள் எவ்வளவு மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதிக்கின்றன பார்” என்றார். உடனே இரண்டாவது ஞானி, “மீன்கள் மகிழ்ச்சியாகத்தான் துள்ளிக் குதிக்கின்றன என்று உனக்கு எப்படித் தெரியும். நீ மீனா?” என்றார். அப்போது முதல் தத்துவ ஞானி திருப்பிக் கேட்டார் “எனக்கு தெரியும், தெரியாது என்று உனக்கு எப்படித் தெரியும்? நீ, நானா?” உண்மையில் எவ்வளவு தர்க்க முறைப்படியான விவாதங்கள் பாருங்கள்! இனிமேல் யாரும், 'அறிந்தது, அறியாதது, தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது அனைத்தும் எமக்கு அத்துப்படி!' என்று தற்பெருமை பாராட்ட முடியாது போல் இருக்கிறது அல்லவா?


கருத்தோட்டங்கள் :

ஒரு பொன்மாலைப் பொழுதில் இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா ஒன்றில் நான்கு தத்துவ ஞானிகள் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மெல்லிய பூங்காற்று வீசவே கொடி ஒன்று அசைந்து ஆடியது. அதைக் கண்டு ரசித்த ஒரு ஞானி, “ இந்தப் பூங்கொடி அசைவது எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்றார். உடனே அடுத்தவர், “பூங்கொடியா அசைகிறது? காற்றல்லவா அசைகிறது?” என்றார். அதற்கு மூன்றாமவர், “அதுவும் இல்லை, மனம்தான் அசைகிறது” என்றார். நான்காவது ஞானியோ நிதானமாகச் சொன்னார். “எதுவுமே அசையவில்லை!”
தத்துவ ஞானிகளுக்கு இடையே நடைபெறும் இந்தச் சின்னஞ்சிறு உரையாடல் காட்சி தத்துவக் கருத்தோட்டங்களை புலப்படுத்தி நிற்கிறது.
'ஒவ்வொரு கணமும் இனிமை!'
ஜென் குரு ஒருவர் எப்போதும் அமைதியாகவும் நிறைவாகவும் வாழ்ந்து கொண்டிருந்தவர். சீடர்கள் சிலர் அவரைக் கேட்டார்கள், “உங்களுடைய நிம்மதியான வாழ்க்கையின் ரகசியம் என்ன?”
குருநாதர் சிரித்துக் கொண்டே சொன்னார் “பெரிதாக ஒன்றுமில்லை.
மிக எளிமையான விஷயங்கள் தான்”
1.காலை எழுந்தவுடன் முதல் வேலையாக, நறுமணம் உள்ள ஓர் இடத்தில் அமர்ந்து தியானம் செய்யுங்கள்.
2.வயிறு முட்டச் சாப்பிடாதீர்கள். வயிற்றில் கொஞ்சம் இடம் காலியாக இருக்கட்டும்.
3. கண்ட நேரத்தில் துாங்க வேண்டாம்.தினமும் ஒரே நேரத்துக்கு தூங்கச் செல்லுங்கள்.
4.பெரும் கூட்டத்திலும் தனிமையைப் பழகுங்கள். தனிமையில் கூட்டத்துக்கு நடுவே இருக்கிற உணர்வை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
5.நன்றாக, தெளிவாகப் பேசுங்கள். அதன்படி நடந்தும் காட்டுங்கள். வார்த்தை ஒன்று, வாழ்க்கை வேறு என இருக்காதீர்கள்.
6.ஒவ்வொரு வாய்ப்பையும், ஒரு முறைக்குப் பலமுறை நன்கு சிந்தித்த பிறகே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
7.முடிந்து போன விஷயங்களை எண்ணி வருந்தாதீர்கள்.
8.போர் வீரர்களைப் போல் தைரியம் பழகுங்கள். அதே சமயம், சிறு குழந்தைகளைப் போல் வாழ்க்கையை நேசியுங்கள்.


ஜென் கதை :

ஜென் கதைகள் நம்மை அறிய நமக்கொரு திறவுகோலாகப் பயன்படுவன. சிந்தனையைத் துாண்டும் ஜென் கதை ஒன்று .அந்த ஜென் குரு எளிமையாக மலையடிவாரத்தில் குடிசை அமைத்து இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் திருடன் அவரது குடிசைக்குள் அங்குமிங்கும் தேடிப் பார்த்தான். ஒன்றுமே கிடைக்கவில்லை. அவன் வெறுங்கையோடு வெளியேறும் வேளையில் குரு உள்ளே வந்துவிட்டார். அவனை இறுகப் பிடித்துக் கொண்டார். திருடன் 'திருதிரு'வென்று விழித்தான்.
'பாவம்! நீ எவ்வளவு துாரத்திலிருந்து இங்கே வந்திருக்கிறாய். வெறுங்-கையோடு போகலாமா?' என்று கூறிச் சரசரவென்று தம் ஆடைகளைக் கழற்ற ஆரம்பித்தார்.
திருடனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். அவர் தம் ஆடைகளைக் கழற்றிச் சுருட்டி அவன் கையில் கொடுத்து, 'போய் வா. என்னிடம் இருப்பது இவ்வளவு தான்' என்று அனுப்பி வைத்தார்.
திருடன் போன பிறகு நிர்வாணமாக அமர்ந்தபடி சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தார். ஒளிமயமான வட்ட நிலா வானத்தில் காய்ந்து கொண்டிருந்தது. 'பாவம்! நல்லதாகக் கொடுக்க நம்மிடம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. இந்த நிலவையாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம்' என்று சொல்லிக் கொண்டார் அந்த ஞானி.
உண்மையில் இதுதான் ஒரு தத்துவஞானியின் உள்ளம்! நாமும் இந்த உள்ளத்தைப் பெற்று விட்டால் போதும், அப்புறம் கவிஞர் கண்ணதாசன் ஒரு திரை இசைப் பாடலில் பாடியிருப்பது போல், உலகம் முழுவதும் ஒரு சிட்டுக் குருவியைப் போல் பறந்து பறந்து திரியலாம்; ஊர்வலமாக வந்து விளையாடி மகிழலாம்.


வெற்றி கொள்வது எப்படி :

மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் வேதனைகளை வெற்றி கொள்வது எப்படி? வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்வது எப்படி? வாடி நின்றால் அவை ஓடிவிடுமா? 'வேதனையே விலகி விடு, துன்பமே போய்விடு!' என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டால் அவை பின்வாங்கிச் சென்று விடுமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் கவிஞர் கண்ணதாசன் கூறும் ஒரே பதில், 'எதையம் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!' என்பது தான்!நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதை விட நமக்கும் கீழே இருப்பவர்களைப் பார்த்து நிம்மதி அடைவது நல்லது.

''ஏழை மனதை மாளிகை யாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”
விரக்தியின் -விளிம்பிற்கு சென்று விட்ட நெஞ்சம் கூட, இப்பாடலை ஒரு முறை பொருளுணர்ந்து படித்தால் போதும் நம்பிக்கையையும் நிம்மதியினையும் அடையும். 'சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் தத்துவம், தத்துவமாக நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்' என்னும் கூற்று கண்ணதாசனைப் பொறுத்த வரை
நுாற்றுக்கு நுாறு பொருந்துகிறது.
- முனைவர் இரா.மோகன்
எழுத்தாளர், பேச்சாளர்
94434 58286.வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
01-டிச-201415:39:33 IST Report Abuse
P. SIV GOWRI முனைவர் இரா.மோகன் ஜி அருமை .நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடுஉண்மை.இது தான் நிஜம் நம் வாழ்வில் .நாளை என்ன நடக்கும் யார் அறிவார். நன்றி
Rate this:
Share this comment
Cancel
Yuvi - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
01-டிச-201414:16:28 IST Report Abuse
Yuvi அருமையான தொகுப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X