'தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் கூட்டணி அமையுமா?' என்ற கேள்விக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
ஸ்டாலின், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டி:வரும், 2016 சட்டசபை தேர்தலில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பா.ஜ., உடன் கூட்டணி அமைப்போமா என்பது பற்றி, இப்போதே எதுவும் தெரிவிக்க முடியாது. அதற்கு சரியான நேரம் இது அல்ல.சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 16 மாதங்களே உள்ளதால், நான், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து, கட்சியை பலப்படுத்தி வருகிறேன். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் விலகியவர்கள் வருத்தம் தெரிவித்து, கட்சிக்கு மீண்டும் திரும்பினால், அவர்களை ஏற்றுக் கொள்ள, தி.மு.க., எப்போதும் தயாராக இருக்கிறது.
தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., கொண்டுள்ள பார்முலா, தமிழகத்தில் பலிக்காது. மத்திய அரசு, பணக்கார பொருளாதார கொள்கைகளை கொண்டதாக உள்ளது. குறிப்பிட்ட சில தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடையும் வகையில், பொருளாதார கொள்கைகளை கொண்டுள்ளனர். இதனால், பல தொழிலதிபர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதோடு, ஏழைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.
கருணாநிதியை சந்தித்தஅழகிரி கோஷ்டியினர்:
நீண்ட நாட்களுக்கு பின், கருணாநிதியை அழகிரி ஆதரவாளர்கள் சந்தித்து பேசியது, அக்கட்சியில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளன.கடந்த வாரம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மதுரை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, மாநகராட்சியின், 100 வார்டுகளுக்கும் செயலர் உட்பட அனைத்து பதவிகளுக்கும் நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. இதில், அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.இந்நிலையில், மதுரை நகர் தி.மு.க.,வில் ஒன்பது பகுதிகளுக்கும் நிர்வாகிகள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நவ., 29ல் தேர்தல் நடக்க இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அழகிரி ஆதரவாளர்கள் சிவக்குமார் தலைமையில், 300 பேர் சென்னையில் நேற்று கருணாநிதியை சந்தித்து முறையிட்டனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:மதுரையில் நிர்வாகிகள் பட்டியல் வெளியானதில் நடந்த கோல்மால்கள் குறித்து, தலைவர் கருணாநிதியை சந்தித்து, ஆதாரத்துடன் முறையிட்டோம்.பட்டியல் செல்லாது என, பின்னர் அறிவித்தார். இது தொடர்பாக, கட்சியின் பொதுச்செயலர் அன்பழகனையும் சந்தித்து முறையிட்டோம். அவரும் அதையே சொன்னார். இதுதொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -