மும்பை: மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை அருகே உள்ள கல்யாண் என்ற நகரைச் சேர்ந்த, ஆரிப் மஜித், பாகத் ஷேக், அமான் தான்டெல் மற்றும் சாஹீம் டாங்கி ஆகியோர், கடந்த மே மாதம், ஈராக் சென்று, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன்இணைந்தனர். அவர்களில், மஜித் ஆரிப் கடந்த வெள்ளியன்று, கல்யாண் திரும்பினார்; கைது செய்யப்பட்டுள்ள அவரிடம்,மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. மீதமுள்ள, மூன்று பேரும் விரைவில் நாடு திரும்ப உள்ளனர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம், ஆரிப் மஜித் அளித்துள்ள வாக்குமூலம்:முஸ்லிம் இளைஞனான நான், இன்ஜினியரிங் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தேன். தினமும் தவறாமல் மசூதி சென்று தொழுகை நடத்தும் நான், மதத்தை காக்கவும்; மதத்திற்காக வாழ வேண்டும் எனவும் ஆசைப்பட்டேன். அதற்காக, நானும் என் நண்பர்கள், ஆறு பேரும் அடிக்கடி ஆலோசனையில் இறங்குவோம்.அப்போது தான், ஐ.எஸ்.ஐ.எஸ்., பற்றி அறிந்தோம். அவர்கள், இஸ்லாமிய பிரதேசத்தை ஏற்படுத்த முற்படுவதையும், அதற்காகவே அவர்கள் புனிதப் போரில் ஈடுபட்டுள்ளதாகவும் தவறாக புரிந்து கொண்டேன்;ஐ.எஸ்.ஐ.எஸ்., பற்றி அறிந்து கொள்ள, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை, இணையதளங்களை பார்த்து, அந்த பயங்கரவாதிகளில் ஒருவன் போன் எண்ணை கண்டுபிடித்து, நானும், என் நண்பர்கள் மூவரும் தொடர்பு கொண்டோம்.
அவன் கேட்டுக் கொண்ட படி, ஈராக்கில் உள்ள கர்பாலா நகருக்கு புனித பயணம் செய்ய விரும்புவதாக கூறி, தலா, 60 ஆயிரம் ரூபாயை, பிவாண்டியில் உள்ள, ரஹத் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்திடம் கொடுத்தோம். சில நாட்களில், தெற்கு மும்பையின் டோங்ரி என்ற இடத்தில் உள்ள ஆஜ்மிர் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தில் சென்று, விசாவை பெற்றுக் கொண்டோம். மே 25ல், நாங்கள் நான்கு பேரும், எங்கள் வீடுகளில் இருந்து தனித்தனியாக புறப்பட்டு, மும்ரா என்ற இடத்தில் கூடினோம். அங்கு எங்களை சந்தித்த, போனில் முதலில் தொடர்பு கொண்ட நபர், கூடுதல் பணத்தை எங்களுக்கு கொடுத்தார். மே மாதம், 26ல், எடிஹாத் விமானத்தில் ஏறினோம்; 27ல் கர்பாலா சென்றோம். மத கடமையாற்ற சென்ற குழுவுடன் இணைந்திருந்த நாங்கள், அந்த கூட்டத்திலிருந்து, மே 31ல், நைசாக விலகினோம். அன்றே எங்கள் பெற்றோருடன், பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்ட தகவலை கூறினோம். ஏற்கனவே நாங்கள் தொடர்பு கொண்டிருந்த, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி, எங்களை, ஈராக்கின் தலைநகர் பாக்தாத் அழைத்துச் சென்றான்.
அதன் பின், மொசூல் நகரம் அருகே உள்ள பல்லுஜா என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான். பயங்கரவாதிகள் எங்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சிக்குப் பிறகு, அமான் டாங்கி என்ற என் நண்பனுக்கு மட்டும் ஆயுதங்கள் வழங்கி, ஈராக் நிர்வாகம் மற்றும் அமெரிக்க படைகளுக்கு எதிராக போரில் ஈடுபடுத்த அழைத்துச் சென்றனர். எங்களை, சமையல் செய்யவும், சமூக தொடர்பு வலைதளங்களை மேற்பார்வையிடும் வேலையும் அளித்தனர். தண்ணீர் எடுத்து வரவும், சமையல் வேலை செய்யவும் தான் உத்தரவிட்டனர்.அந்த நேரத்தில் தான், அந்த பயங்கரவாதிகள் வெறும் கொடூரர்கள்; அவர்களுக்கு மத நம்பிக்கை கிடையாது; குர்ரான் ஓதுவதில்லை; இறைவனுக்கு அஞ்சுவதில்லை என்பதை அறிந்தோம்.அவர்களுக்கு தெரிந்தது எல்லாம், கொள்ளை, கற்பழிப்பு, படுகொலைகள் தான். அதனால், அவர்களுடன் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை.
இந்நிலையில், ஈராக் படைகள் தாக்குதலில், எனக்கு தோளிலும், பின்புறத்திலும் குண்டு காயம்பட்டது. சிகிச்சைக்கு அங்கே வசதியில்லை; இனியும், இங்கிருப்பது சரியாக இருக்காது என கருதி, அங்கிருந்து துருக்கி சென்றடைந்தேன். அங்கிருந்து, மும்பையில் உள்ள என் பெற்றோரை தொடர்பு கொண்டேன். துருக்கியில் உள்ள இந்திய துாதரகம் உதவியுடன், கடந்த வெள்ளியன்று மும்பை திரும்பினேன். விரைவில், என் நண்பர்கள் மூவரும் இந்தியா திரும்ப உள்ளனர்.இவ்வாறு, ஆரிப் மஜித் வாக்குமூலம் அளித்து உள்ளான்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE