யூரியாவுக்கு நிகரானது வேப்பம் புண்ணாக்கு; விளைநிலங்களில் பயன்படுத்த வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யூரியாவுக்கு நிகரானது வேப்பம் புண்ணாக்கு; விளைநிலங்களில் பயன்படுத்த வலியுறுத்தல்

Added : டிச 01, 2014

திண்டுக்கல் : யூரியா தட்டுப்பாடை தவிர்க்க விளைநிலங்களில் வேப்பம் புண்ணாக்கை பயன்படுத்துமாறு வேளாண்மை துறையினர் விவசாயிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 81 ஆயிரத்தி 881 எக்டேர் பரப்பளவில் நெல், மக்காச்சோளம், பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. யூரியாவில் 46.2 சதவீதம் தழைச்சத்து உள்ளது. பயிர் வளர்ச்சிக்கும், செழுமைக்கும் தழைச்சத்து தேவை என்பதால் யூரியா அதிகஅளவில் விவசாயிகளால் வாங்கப்படுகிறது. மழை காலத்தில் விளைநிலங்களில் இடப்படும் யூரியா விரைவாக மண்ணில் கரைந்துவிடும். தேவைப்படும் போது பயிர் வளர்ச்சிக்கு தேவையான சக்தி இதனால் தடுக்கப்படுகிறது.விலை அதிகம் என்பதோடு கடைகளில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள யூரியாவை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை எளிதாக பெறலாம். யூரியாவுடன் வேப்பம்புண்ணாக்கை நன்கு கலந்து கிளறிவிட்டு பயன்படுத்தினால் பயிர்களின் வேர்பிடிப்பு பகுதிகளில் தாக்கும் பூச்சிகளை இந்த கலவை முற்றிலுமாக அழித்து விடும். பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும்.வேளாண்துறை இணை இயக்குனர் சம்பத் குமார் கூறுகையில், ""தேவைக்கேற்ப யூரியாவை பயன்படுத்த விவசாயிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதிக அளவில் யூரியாவை விளைநிலங்களில் பயன்படுத்துவதால் எதிர்பார்க்கும் தழைச்சத்து முழுமையாக கிடைப்பதற்கு பதிலாக பயிரின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதை தவிர்க்க இயற்கை வழிமுறைகளை அவ்வப்போது கையாள வேண்டும். வேப்பம் புண்ணாக்குடன் யூரியாவை கலந்து இடுவதன் மூலம் எதிர்பார்க்கும் மகசூலை பெறலாம்,''என்றார்.வேளாண் தரக்கட்டுபாட்டு உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், ""நெல் சாகுபடி மேல் உரத்திற்கு யூரியா பயன்படுத்துபவர்கள் ஏக்கருக்கு 22 கிலோவும், 20 நாட்களுக்கு பின்பு அதே அளவில் இருமுறையும் இடவேண்டும். மக்காச்சோளத்திற்கு மேல்உரமாக ஏக்கருக்கு 60 கிலோவும், 15 நாட்களுக்கு பின்பு ஏக்கருக்கு 30 கிலோவும் பயன்படுத்த வேண்டும். பருத்திக்கு 35 கிலோ பயன்படுத்த வேண்டும். மழை காலம் என்பதால் யூரியா கரையாமல் இருக்க வேப்பம்புண்ணாக்கை கலந்து பயன்படுத்த வேண்டும்,''என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X