தூள் பறக்குது சூதாட்டம்... மாமூல் போலீசுக்கு கொண்டாட்டம்! | Dinamalar

தூள் பறக்குது சூதாட்டம்... 'மாமூல்' போலீசுக்கு கொண்டாட்டம்!

Added : டிச 02, 2014
Share
''மித்து! நீ வர்றியா? இல்லேன்னா, நான் டிக்கெட்டை யாருக்காவது கொடுத்துட்டு, வீட்டுக்குக் கிளம்பவா?,'' நூறடி ரோட்டிலுள்ள தியேட்டர் காம்ப்ளக்ஸ் வாசலில், 'காவியத்தலைவன்' படத்துக்கான டிக்கெட்களுடன் காத்திருந்த சித்ரா, அலைபேசியில் மித்ராவை வறுத்துக் கொண்டிருந்தாள். ''அக்கா! வண்டியை 'பார்க்கிங்' பண்ணிட்டு இருக்கேன்; இதோ...ஒரு நிமிஷம்!'' என்று பேச்சைத் துண்டித்த
தூள் பறக்குது சூதாட்டம்...  'மாமூல்' போலீசுக்கு கொண்டாட்டம்!

''மித்து! நீ வர்றியா? இல்லேன்னா, நான் டிக்கெட்டை யாருக்காவது கொடுத்துட்டு, வீட்டுக்குக் கிளம்பவா?,''


நூறடி ரோட்டிலுள்ள தியேட்டர் காம்ப்ளக்ஸ் வாசலில், 'காவியத்தலைவன்' படத்துக்கான டிக்கெட்களுடன் காத்திருந்த சித்ரா, அலைபேசியில் மித்ராவை வறுத்துக் கொண்டிருந்தாள்.


''அக்கா! வண்டியை 'பார்க்கிங்' பண்ணிட்டு இருக்கேன்; இதோ...ஒரு நிமிஷம்!'' என்று பேச்சைத் துண்டித்த மித்ரா, அடுத்த 3 நிமிடங்களில் நேரில் ஆஜரானாள்.


''படம் போட இன்னும் நேரம் இருக்குல்ல...ஏன் பறக்குற?,'' என்று பதிலுக்குக் கடித்தாள் மித்ரா.


''உனக்கென்னடி....நல்லா ஒரு பிடி பிடிச்சுட்டு வந்திருப்ப...நான் பசியில இருக்கேன். வா...'காபி பார்' போய் ஏதாவது சாப்பிட்டு உள்ள போகலாம்!,'' என்று மித்ராவை இழுத்தாள் சித்ரா.


''அக்கா! நீ 'பார்'ன்னு சொன்னதும் நம்ம 'டாஸ்மாக் பார்' மேட்டர் ஞாபகத்துக்கு வந்துருச்சு. சவுத் டாஸ்மாக் மாவட்டத்துல 140 'பார்'க்கு போன வாரம் ஏலம் நடத்துனாங்க தெரியுமா? போன மாவட்டத்துக்கிட்ட இந்த பொறுப்பைப் பார்த்துக்கிட்ட அதே கருப்பு கவுன்சிலர் தான், இப்பவும் பொறுப்பா இதை நடத்தியிருக்காரு. வெளியாள்க்கு அப்ளிகேஷனே கிடையாது. கட்சி ஆபீஸ்ல தான் எல்லாம் முடிவு பண்ணிருக்காங்க!,'' என்றாள் மித்ரா.


''இது பரவாயில்லையே...சவுத், நார்த் ரெண்டு மாவட்டத்துலயும் நல்லா ஓடுற 'பார்'களை எல்லாம் 'லாஸ்'ன்னு மூடிட்டதா கணக்கு காமிச்சிட்டு, அதே இடங்கள்ல 'இல்லீகல் பார்' நடத்துறாங்க. எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் மட்டுமில்லாம, ஆளும்கட்சி டாஸ்மாக் தொழிற்சங்கத்துல முக்கியப் பொறுப்புல இருக்கிறவங்களும், மாசத்துக்கு நாலஞ்சு லட்சம் பாக்குறாங்களாம்!,'' என்றாள் சித்ரா.


''ஆமாக்கா! விடுதலைப்புலிகளை நெடுங்காலமா ஆதரிக்கிற ஒரு தலைவரோட பேரைக் கொண்டவர் தான், இதுல 'டாப்' சம்பாத்தியத்துல இருக்காராம்!,'' என்றாள் மித்ரா.


''இந்த விஷயத்துலயும், ரெண்டு மாவட்டமும் ஒரே மாவட்டம் 'கன்ட்ரோல்'ல தான் இருக்குன்னு பேசிக்கிறாங்க!,'' என்றாள் சித்ரா.


''அதென்னவோ உண்மையாத்தான் தெரியுது. டாஸ்மாக் மட்டுமா....கார்ப்பரேஷன், கலெக்ட்ரேட் எல்லா டிபார்ட்மென்ட்டும் ஒரே ஒரு அதிகாரமையத்தோட 'கன்ட்ரோல்'லதான் இருக்கு!,'' என்றாள் மித்ரா.


''அதுலயும் கார்ப்பரேஷன்ல நடக்குற கூத்து காணச் சகிக்கலைங்கிறாங்க. சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட்ல நடக்குற பல ஊழல்களை புது மேயரு கண்டு பிடிச்சு, ரெண்டு கோடி ரூபா 'பில்'லையும் நிறுத்தி வச்சாராம். ஆனா, திடீர்ன்னு அந்த 'பில்'லை 'செட்டில்' பண்ணிட்டாங்க. விசாரிச்சா, 'ஒண்டிப்புதூர்-வடவள்ளி பஸ் ரூட் அளவுக்கு 'அமவுன்ட்' விளையாடிருச்சாம். ஆனா, கண்டு பிடிச்சவருக்கு இதுல சம்மந்தம் இல்லேங்கிறாங்க!,'' என்றாள் சித்ரா.


''அதென்னக்கா பஸ் ரூட்....?,'' என்ற மித்ரா, சில வினாடிகளில் புரிந்து கொண்டு பெரிதாகச் சிரித்த பின், தொடர்ந்தாள்.


''கார்ப்பரேஷன்ல குப்பை அள்ளுற லாரி ஓட்டுறதுக்கே, மூன்றரை லட்ச ரூபா கொடுத்து 'போஸ்ட்டிங்' வாங்குறாங்கன்னா, அதுல எவ்ளோ கொள்ளை நடக்கும்?. தளபதி மம்முட்டி கேரக்டர் பேரைக் கொண்ட ஒரு டிரைவரு, இதுல அடிக்கிற காசை, கார்ப்பரேஷன் ஏ.சி., டி.சி.,ன்னு எல்லா பெரிய ஆபீசர்களுக்குமே வட்டிக்கு விடுறாராம்!, '' என்றாள் சித்ரா.


''அவரைப் பத்தி தான் நாம ஏற்கனவே பேசிருக்கோமே...அவரோட 'ரெகமண்டேஷன்'ல, அவரோட சொந்தக்காரங்க ரெண்டு பேரும் இப்போ குப்பை லாரி டிரைவராயிட்டாங்க. அந்த போஸ்ட்டிங் கொடுக்கிறதுக்கு, ஏ.சி.,ஒருத்தரு, ஆளுக்கு மூன்றரை லட்சம் வாங்கிருக்காரு!,'' என்றாள் மித்ரா.


''மித்து! இந்த குப்பை லாரிங்க அடிக்கிறது 3 டிரிப் தான். எழுதுறது 6 டிரிப்ன்னு...வாரத்துக்கு 40 லிட்டர் டீசலுக்கு 'டோக்கன்' கொடுப்பாங்க. முன்னெல்லாம் 25 லிட்டரை லாரிக்கு அடிச்சிட்டு, 15 லிட்டர் காசை இவுங்க அடிச்சிருவாங்க. இப்போ அடிக்கிறதே 15 லிட்டர் டீசலு தான். அப்புறம் எப்பிடி, ஊர்ல இருக்கிற குப்பை எல்லாம் காலியாகும்?,'' என்று கொதித்தாள் சித்ரா.


''நம்ம ஊரு எந்தக் காலத்துலயும் உருப்படாது போ...சரி! போன வாரம், ராத்திரி நேரத்துல கணபதி ஏரியாவுல பாதாள சாக்கடை தோண்டுறப்ப ஒருத்தரு, மண்ணுக்குள்ள மாட்டிக்கிட்டாரு தெரியுமா?,''


''ஆமா! அவரத்தான் காப்பாத் திட்டாங்களே...அதுல என்ன பிரச்னை?,''


''ஆனா, காப்பாத்துனது எப்பிடின்னு தெரியுமா? மூக்குக்கு மேல மண்ணு மூடி, மூச்சுத் திணறிட்டு இருந்தவரை தூக்கிட்டாங்க. அப்போ, ஆம்புலன்ஸ் ஒண்ணும் உடனே வரலையாம். மேயரு தான், தன்னோட வண்டியிலயே அந்த தொழிலாளியை அள்ளிப்போட்டு, 'சைரன்' போட்டுக்கிட்டு, அவரே கூப்பிட்டுப் போய், ஆஸ்பத்திரியில 'ஸ்பீடா' சேத்துக் காப்பாத்தியிருக்காரு,'' என்றாள் மித்ரா.


''பரவாயில்லையே...யாருக்கோ கிடைச்ச அனுபவத்துல, இவரு பாடம் கத்துக்கிட்டாரு போல!,'' என்று சிரித்தாள் சித்ரா.


இருவரும் இனிப்பு 'கார்ன்' வாங்கிக்கொண்டு, தியேட்டருக்குள் சென்று நம்பரைப் பார்த்து, இருக்கையில் அமர்ந்தார்கள்.


''அக்கா! இந்த நம்பரைப் பார்த்ததும் தான், ஒரு விஷயம் ஞாபகம் வந்துச்சு. துடியலூரு, கவுண்டம்பாளையம், காந்திபுரம் கவிதா தியேட்டர் ஏரியானு பல ஏரியாக்கள்ல ஒரு நம்பர் லாட்டரி சூதாட்டம், தூள் பறக்குதாம். மூணு இடத்துலயும் ஒரே 'டீம்'தான் இதை நடத்துது. ஒரு நாளுக்கு சும்மா 'அசால்ட்டா' 3 கோடி ரூபாய்க்கெல்லாம் சூது நடக்குதுங்கிறாங்க!,''


''என்ன மித்து...சொல்ற? மூணு கோடியா...தலை சுத்துது. போலீசுக்கு இது தெரியாதா?,''


''தெரியாமலா நடக்கும்...? கார்ப்பரேஷன்ல 'டெண்டர்' எடுக்கிற பெரிய தலைங்க தான், இந்த சூது விளையாட்டுல ரொம்ப தீவிரமா இருக்காங்களாம். டூவீலர் பார்க்கிங், டாய்லெட்னு இவுங்க விளையாடுற இடமே, யாரும் சந்தேகப்படாத இடமாத்தான் இருக்கும்கிறாங்க!,'' என்றாள் மித்ரா.


''காசுக்காக இந்த போலீஸ்காரங்க, என்ன வேணும்னாலும் செய்வாங்க போலிருக்கு. புலியகுளம் ஸ்டேஷன்ல இருக்கிற ஒரு எஸ்.எஸ்.ஐ., என்ன பண்றாரு தெரியுமா?,'' என்று சித்ரா கேள்வியை நிறுத்தினாள்.


''அவரென்ன ரகுபதி ராகவ ராஜாராமா பாடப்போறாரு. எங்கேயாவது வசூலைப் போடுவாரு. நீ மேட்டரைச் சொல்லு!,'' என்றாள் மித்ரா.


''அந்த எஸ்.ஐ.,யோட தம்பி ஒருத்தரு, கொலைக்கேசுல மாட்டிக்கிட்டு, உள்ளே போயிட்டு வந்தவராம். அதே கேசுல ஆயுள் தண்டனை வாங்குன கைதியும் வெளிய வந்துட்டாராம். இந்த ரெண்டு பேரையும் வச்சு, லாலி ரோடு, ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட், சாய்பாபா காலனி மார்க்கெட்ன்னு பல இடங்கள்ல அநியாய வட்டிக்கு விட்டு, அராஜகமா காசு பறிக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.


''அதே சாய்பாபா காலனியில இருக்கிற ஒரு எஸ்.எஸ்.ஐ., பண்ற வசூலைப் பத்தித் தெரியுமா? அந்த 'லிமிட்'ல தள்ளு வண்டிக் கடையில எல்லாம் 'ஆனந்தமா' வசூல் பண்றாராம். கேட்டா, தனக்கு மேல இருக்கிற ஒரு 'சக்தி'யோட பேரைச் சொல்றாராம்!,'' என்றாள் மித்ரா.


''ஆமா மித்து! நீ போலீஸ்ன்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வந்துச்சு...பழைய டெபுடி மேயர் கார்த்திக் மேல, கொலை மிரட்டல் உட்பட 7 செக்ஷன்ல கேசு போட்ருக்காங்க பார்த்தியா?,'' என்றாள் சித்ரா.


''நானும் கேள்விப்பட்டேன்க்கா....இவுங்க கேசு போட்ருக்கிற தேதியில, அவரு அங்கயே இல்லைங்கிறாங்க. ஆளும்கட்சிக்காரங்க தூண்டுதல்ல கேசு போட்டது, நம்ம ஆளும்கட்சிக்கு விசுவாசமான அந்த ஆபீசர் தான்!,'' என்று மொட்டையாய் நிறுத்தினாள் மித்ரா.


''நீ பேரைச் சொல்லாம, வெறும் 'டேஷ்' போட்டப்பவே எனக்குத் தெரியும். ஆனா, அந்த ஏரியா இன்ஸ்பெக்டர், ரொம்ப நல்லவராச்சே!,'' என்றாள் சித்ரா.


''டிஎம்கேகாரங்க மேல இனிமே நிறையா கேசு பாயும்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.


''அதுக்கு இடையில, இவுங்களே உட்கட்சித் தேர்தல்ல அடிச்சு நாறி, ஸ்டேஷனுக்குப் போயிருவாங்க போலிருக்கு. கோவை வடக்கு மாவட்டத்துல 6 பகுதிக் கழகத்துக்கு நடந்த தேர்தல்ல, பொங்கலூரு கோஷ்டிக்கு மூணு, வீரகோபால் கோஷ்டிக்கு மூணுன்னு கிடைச்சிருக்காம். அதனால, மாவட்டச் செயலாளரா யாரு ஜெயிப்பாங்கன்னு தெரியலை!,'' என்றாள் சித்ரா.


''அக்கா! கோயம்புத்தூர்ல ஆளும்கட்சியில ஒரு முக்கியமான மாற்றம் நடக்கப்போகுதுன்னு ஒரு பேச்சு பரபரப்பா ஓடிட்டு இருக்கு...அதுக்கான ஆதாரத்தையெல்லாம், ஒரு 'டீம்' கலெக்ட் பண்ணி அனுப்பிருக்காம்!,'' என்று மித்ரா சொல்லும்போதே, திரையில் விளம்பரம் ஆரம்பிக்க, இருவரும் பேச்சுக்கு இடைவேளை விட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X