ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், காபி பார் ஒன்றில் ஒதுங்கினர்.
காளான் பப்ஸ், லெமன் டீ ஆர்டர் கொடுத்த சித்ரா, ""கோவில் திருவிழா இவ்ளோ அமர்க்களமா இருக்கும்னு எதிர்பார்க்கலை,'' என, ஆச்சரியம் காட்டினாள்.
""அக்கா, இதுக்கு முன்னாடி, 1999ல் கும்பாபிஷேகம் நடந்துருக்கு. 15 வருஷம் கழிச்சு விழா நடத்துறதால, பிரமாண்டமா ஏற்பாடு செஞ்சு அசத்தியிருக்காங்க. விஷேசத்தை சிறப்பா நடத்துறதுக்காக, தொழில் துறையை சேர்ந்தவங்க, கணக்கு பார்க்காம லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்திருக்காங்க; செலவும் செஞ்சிருக்காங்க. கோவில் காரியமாச்சே... இதுல... கணக்கு பார்க்கக்கூடாதுன்னு, ஒவ்வொருத்தரும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செஞ்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
டேபிளுக்கு பப்ஸ், டீ வந்தது. பப்ஸ்சை எடுத்து சாப்பிட்ட படி, ""தாசில்தார் ஆபீஸில் வசூல் ஜோரா நடக்குதாமே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""ஆமாக்கா... முன்னாள் படை வீரர் நலத்துறைக்காக, கொடி நாள் வசூலிக்க, ஒவ்வொரு துறைக்கும் இலக்கு நிர்ணயிச்சு இருக்காங்க. வழக்கமா, பத்திரப்பதிவு துறையிலயும், வட்டார போக்குவரத்து துறையிலயும் வசூலை அள்ளுவாங்க. இப்ப, வடக்கு, தெற்கு தாலுகா அலுவலகங்கள்ல வசூல் ஜோரா நடக்குது. புது ரேஷன் கார்டு வாங்க வர்றவங்களிடம், தலா 100 ரூபாய் வசூலிக்கிறாங்க. கார்டு கெடைக்குமா, கெடைக்காதான்னு வெறுத்துப் போயிருந்த மக்கள், புதுக்கார்டை பார்த்ததும் சந்தோஷமாயிடுறாங்க. கார்டு கெடைச்ச சந்தோஷத்துல, பணம் கொடுத்துட்டு போயிடுறாங்க,'' என்றாள் மித்ரா.
""தெற்கு தாலுகா குடிமை பொருள் அலுவலகத்துல ஒரே பிரச்னையா இருக்காமே?'' என்றாள் சித்ரா.
""நீங்க... கேள்விப்பட்டது உண்மைதான். சர்வே செக்ஷன்ல இருந்த ஒருத்தரை ஆர்.ஐ.,யா போட்டிருக்காங்க. தெற்கு தொகுதி எலக்ஷன் தாசில்தார், ரேஷன் தாசில்தாராகவும் இருக்காரு. இதனால, ரேஷன் கார்டு வேலை சரியா நடக்கிறதில்லை. "கப்பம்' கட்டினா மட்டுமே வேலை நடக்குது. இல்லைன்னா, 10 நாட்களுக்கு பிறகு வாங்கன்னு அந்த ஆர்.ஐ., திருப்பி அனுப்பிடுறார். அதேநேரத்துல, ஆளுங்கட்சி பிரமுகர்கள் பரிந்துரைக்கும் புரோக்கர்களிடம் மட்டும் நெருக்கமா இருக்கார்,'' என்றபடி, பப்ஸ் முழுவதையும் சாப்பிட்டு முடித்து, லெமன் டீயை உறிஞ்ச ஆரம்பித்தாள் மித்ரா.
அந்த வழியாக, நீல நிற சைரனுடன் ஒரு கார் வந்தது.
""அடடே... அரசாங்க உத்தரவு வந்ததும், நீல நிறத்துக்கு மாறிட்டாங்களே... என ஆச்சரியப்பட்டாள் சித்ரா.
""எல்லா வாகனமும் மாறலை. சென்னைக்கு போயிருந்த மாவட்ட ஊராட்சி தலைவர், தெருத்தெருவா அலைஞ்சு, சொந்தக்காசுல, நீல நிற சைரன் விளக்கு வாங்கிட்டு வந்து, தன்னோட கார்களில் மட்டும் மாட்டியிருக்காரு. அதைப்பார்த்த கலெக்டர், அரசாங்க கார்களுக்கு பொருத்த 10 சைரனுக்கு ஆர்டர் கொடுத்திருக்கார். மாநகராட்சி கார்களில் இன்னமும் சிவப்பு கலர்தான் இருக்கு,'' என்ற மித்ரா, ""கலெக்டர் ஆபிசுல லட்சக்கணக்குல செலவு செஞ்சும் பயனில்லாம இருக்கு,'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள்.
""எந்த திட்டமா இருந்தாலும், லட்சக்கணக்குல தானே தயாரிப்பாங்க. அதுல எந்த திட்டம் வீணாப் போச்சுன்னு விளக்கமா சொல்லு,'' என சித்ரா கேட்டாள்.
""திட்டம் இல்லை. குடிநீர் வடிகால் வாரியம் மூலமா, மழைநீர் சேகரிப்பு திட்ட விழிப்புணர்வுக்காக, கலெக்டர் ஆபீசுக்கு வர்றவங்க பார்த்து தெரிஞ்சுக்கட்டும்னு, நுழைவாயில் கிட்ட "டிஸ்பிளே' ஏற்பாடு
செஞ்சாங்க. இரண்டு மாசமா, இயங்குறதே இல்லை. தினமும்
கலெக்டர் அந்த வழியாத்தான் போயிட்டு வர்றாரு. ஏனோ தெரியலை...
கண்டும் காணாதது போல போயிடுறார்,''என்றாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE