மழைக்கால நோய்கள்

Added : டிச 03, 2014
Advertisement
மழைக்கால நோய்கள்

கோடைகாலம், குளிர் காலம் என ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு விதமான நோய்கள் மனிதனை தாக்கும். மழைக்கால நோய்கள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் நாம் அறிந்து கொண்டால் நோய்கள் வரும் முன் தடுக்கலாம். நோய் வந்த பின் உரிய சிகிச்சையுடன் பாதுகாப்பாகவும் இருக்கலாம்.


புளூ காய்ச்சல்:

இது ஒரு வகையான வைரஸ் நோய். இருமல், சளி மற்றும் சுவாச கோளாறுகள் ஏற்படும். அதைத் தொடர்ந்து அதிக காய்ச்சல்,தொண்டை வலி, தலைவலி, வாந்தி ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.தடுக்கும் முறைகள்:குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்த வேண்டும். பழைய உணவுகள், குளர்ச்சியான உணவு வகைகள் சேர்க்கக்கூடாது. ஈரமான உடைகளை உடனடியாக மாற்ற வேண்டும். குளிர்ந்த நிலையில் வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படும். சளியால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போது கைக்குட்டையால் வாயை மூடி இரும வேண்டும். மழையில் நனைந்தால் தலைக்கு குளித்து விட வேண்டும். உப்பு கலந்த வெந்நீரில் கொப்பளித்தால் நிவாரணம் கிடைக்கும்.


ஆஸ்துமா:

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் சுவாசக் குழாய் சுருங்கி இருக்கும். இதற்கு பல காரணங்கள் உண்டு. மழை மற்றும் குளிர் காலங்களில் இந்நோய் உள்ளவர்களுக்கு அதிக மூச்சுத் திணறல், இருமல், சளி ஏற்படும்.தடுக்கும் முறைகள்: குளிர்ந்த நேரங்களில் (அதிகாலை, மாலை) வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்கமுடியாத நிலையில் செல்ல நேரிட்டால் காதுகளில் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்ள வேண்டும். குளிர்பானம், ஐஸ்கிரீம், பழைய உணவு வகைகளை தவிர்க்கவும். குடிநீர் மற்றும் உணவு வகைகளை மிதமான சூட்டில் உட்கொள்ள வேண்டும்.தூசி உள்ள இடங்களில் செல்வதை தவிர்ப்பது உத்தமம். பழங்கள், பழச்சாறுகள், காய்கறி சூப்கள் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


கொசுக்களால் ஏற்படும் நோய்கள் :

மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகும். இதனால் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்கள் வரும்.


டெங்கு காய்ச்சல்:

104 டிகிரி வரை அதிகப்படியான காய்ச்சல். தலைவலி, உடம்புவலி, வாந்தி ஏற்படும். நோய் முற்றினால் உடலில் உள்ள ரத்தம் உறையும் தன்மை பாதிக்கப்படும்.மலேரியா: குளிர்காய்ச்சல், வயிறு வலி, தலைவலி, வாந்தி ஏற்படும்.


சிக்குன்குனியா:

காய்ச்சல், மூட்டுகளில் வலி, தலைவலி, குமட்டல், தோலில் மாற்றங்கள் ஏற்படும்.தடுக்கும் முறைகள்: நம் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் சேகரித்து வைக்கும் தொட்டிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை அடிக்கடி சுத்தம்செய்ய வேண்டும். அவை மூடிய நிலையில் இருக்க வேண்டும். கொசுவர்த்தி சுருள், கொசு வலைகள் பயன்படுத்தலாம். குப்பையை தேங்காமல் அப்புறபடுத்த வேண்டும்.


நீரால் பரவும் நோய்

மழைக்காலங்களில் குடிநீருடன் சேர்ந்து மாசுபட்ட நீர் கலப்பதால் சளி,வயிற்றுப்போக்கு, டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்படும்.


டைபாய்டு:

நீண்ட நாள் காய்ச்சல், வயிற்றுவலி, வாந்தி, உடல் தளர்ச்சி.மஞ்சாள் காமாலை: காய்ச்சல், வாந்தி, உடல் தளர்ச்சி, தலைவலி, மூட்டு வலி, சிறுநீர் மஞ்சளாக கழித்தல்.தவிர்க்கும் முறைகள்: வீட்டை விட்டு வெளியிடங்களில் உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கழிவறைக்கு சென்று வந்த பின் சோப் போட்டு கை கழுவ வேண்டும். சமைக்கும் முன், சாப்பிடும் முன் கைகளை நன்றாக கழுவ வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரைகளை நன்கு கழுவிய பின் உபயோகப்படுத்த வேண்டும். டைபாய்டு, மஞ்சள்காமாலை நோய்களுக்கு தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை அணுகி ரத்தப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.


கண் நோய்கள்

மழைக்காலங்களில் கண்களில் தொற்று நோய் ஏற்படும். இதுவே மெட்ராஸ் ஐ.அறிகுறிகள்: கண்கள் சிவந்து, அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். பீளை கட்டும், நீர் கசியும், பார்வை பாதிக்காது. பொதுவாக ஒரு வாரத்தில் குணமாகிவிடும்.தவிர்க்கும் முறைகள்: கண்நோய் வராமல் இருப்பதற்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. அடிக்கடி கண்,முகம், மற்றும் கைகளை கழுவ வேண்டும்.கண்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், சோப் முதலியவற்றை பிறர் பயன்படுத்தக்கூடாது. கண்நோய் வந்தவர்களை பார்ப்பதால் இந்நோய் பரவாது. கருப்பு கண்ணாடி அணிவதால் கூச்சம் மற்றும் தூசி படுவதை தவிர்க்கலாம்.


தோல் வியாதிகள்:

மழைக்காலங்களில் தோல் வியாதிகள் அதிகரிக்கும். பூஞ்சை நோய்கள் மற்றும் காலில் சேற்றுப்புண் உண்டாகும்.தோலில் வறட்சி உண்டாகும்.தடுக்கும் முறைகள்: தினமும் சுத்தமான துணிகளை அணியவும். துவைத்த பின் உள்ளாடைகளை வெந்நீரில் அலசி வெயிலில் காய வைக்க வேண்டும். இருமுறை தினமும் குளிக்க வேண்டும். வெளியே சென்று விட்டு மாலை வீடு திரும்புவோர் முகம், கை, கால், பாதம் மற்றும் கால் விரல் இடுக்குகளை நன்றாக தேய்த்து கழுவவேண்டும். உலர்ந்த உள்ளாடைகளை அணியவும். சருமம் வறண்டு போகாமல் இருக்க தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும்.


மூட்டு வியாதிகள்:

மழைக்காலங்களில் மூட்டு வலி மற்றும் வாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபாதைகள் அதிகமாகும். மூட்டுகளில் ஒரு வகையான இறுக்கம் காணப்படும்.தடுக்கும் முறைகள்: குளிர்ந்த தரையில் நடக்கும் போது உகந்த செருப்பு அணிய வேண்டும். மிதமான மூட்டு பயிற்சிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்ய வேண்டும்.வலி அதிகம் ஏற்பட்டால் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.மழைக்காலங்களில் தண்ணீர் அதிகம் அருந்தாவிட்டால் நீர்கடுப்பு ஏற்படும்.


காது, மூக்கு, தொண்டை வியாதிகள்:

மழைக்காலங்களில் டான்சில் மற்றும் சைனஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும்.தடுக்கும் முறைகள்: தினமும் உப்பு கலந்த வெந்நீரால் தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும். குளிர்ந்த காற்று முகத்தில் படாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.சுத்தம், சுகாதாரம் ஆரோக்கியத்தின் திறவுகோல். நம் உடல் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து, நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்தினால் நோய்கள் நம்மை அண்டாது.


மழை கால உணவு

சரி:கொதித்து ஆற வைத்த நீர், நன்கு கழுவிய பழங்கள் மற்றும் பழச்சாறுகள், காய்கறி சூப்புகள், சூடான உணவு வகைகள். வைட்டமின் 'சி' நிறைந்த சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை ஜூஸ்.
தவறு:குளிர்ந்த பானங்கள், பழைய சாதம் மற்றும் பழைய உணவுகள். ஐஸ்கிரீம் வகைகள். குழாய் நீர் மற்றும் நீர் நிலைகளில் இருந்து நேரடியாக எடுத்த நீர்.- டாக்டர் ஜி.விஜயகுமார்தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம், தேனி.9842140879.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X