நதியைக் காணவில்லை| Dinamalar

நதியைக் காணவில்லை

Added : டிச 04, 2014
Advertisement
நதியைக் காணவில்லை

வேத உலகின் எல்லை குறித்து ரிக் வேதம் வெளிப்படையாக எதையும் வரையறுக்கவில்லை. பிந்தைய வேத இலக்கியங்களோ விநாசன பகுதியை அதன் மேற்கெல்லையாகக் குறிப்பிட்டுள்ளன. பொ.யு.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடையே வாழ்ந்த போதாயனர், வசிஷ்டர் (இவர் ரிக் வேத காலத்தவரல்ல) பதஞ்சலி ஆகிய ரிஷிகள் 'ஆரியவர்த்தம்' (அதாவது ஆரியர்கள் வசித்து வந்த இடம்) என்ற இடம் 'அதர்சன'த்துக்குக் கிழக்காவும் காலக வனா (ஹரித்வார் அருகே) என்ற காடுகளுக்கு மேற்காகவும், இமயமலைக்குத் தெற்காகவும், விந்திய மலைத் தொடரின் ஒரு பகுதியான பரியாத்ரா மலைகளுக்கு வடக்காகவும் உள்ளதாக வர்ணித்தனர். இதைப் போலவே, இமாலயத்துக்குத் தெற்கே, விந்திய மலைகளுக்கு வடக்கே, பிரயாகைக்கு (அலகாபாத்) மேற்கே, விநாசனத்துக்குத் தெற்கே உள்ள நிலப்பரப்பு மத்யதேசம் என்று சொல்லப்பட்டது. மூன்றாவது குறுகிய நிலப்பரப்பு சரஸ்வதிக்கும் த்ருஷத்வதிக்குமிடையே உள்ளது: 'புனித நதிகளான சரஸ்வதிக்கும் த்ருஷத்வதிக்கும் இடையில் இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட அந்த நிலம் இருக்கிறது. அவர்கள் (முனிவர்கள்) அதை 'பிரம்மவர்த்தம்' என அழைக்கின்றனர் என்கிறது மனுஸ்மிருதி. இந்த வர்ணனைகளிலெல்லாம் சரஸ்வதி நதியும் அதன் மேற்கெல்லையும் முக்கிய அடிப்படை இடமாக இருப்பதுதான் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.இன்று இந்து மதம் என்ற பெயரில் நாம் அறியும் ஒன்றில் பிரதான பங்கு வகிக்கும் தகவல் களஞ்சியப் படைப்புகளான புராணங்களும் சரஸ்வதியைப் பற்றிப் பேசுகின்றன. சில நேரங்களில் எதிர்மறையாகக்கூட அணுகியிருக்கின்றன: விஷ்ணுபுராணத்தில் நதிகளின் பட்டியலில் சரஸ்வதியின் பெயர் இல்லவே இல்லை. அன்று அது மிகச் சிறிய, அதிகம் முக்கியத்துவமில்லாத நதியாக மாறியிருக்க வேண்டும். ஆனால், மார்க்கண்டேய புராணம் இமய மலையிலிருந்து உற்பத்தியாகிப் பாயும் நதிகளை கங்கை, சரஸ்வதி, சிந்து எனப் பட்டியலிடுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ரிக் வேதத்தில் சொல்லியிருப்பதுபோல், கிழக்கில் இருந்து மேற்காக அந்த வரிசை சொல்லப்பட்டிருக்கிறது. ஷிவாலிக் மலைத் தொடர் முதல் இன்றைய குஜராத் வரை சரஸ்வதி நதிக்கரையில் யாத்ரீகர்கள் கட்டாயம் விஜயம் செய்ய வேண்டிய புனித்தலங்களின் பெயர்கள் மற்ற புராணங்களில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.பத்மபுராணம் சுவாரசியமான சம்பவமொன்றைப் பற்றிப் பேசுகிறது: ஒட்டு மொத்த உலகையும் சூழ்ந்து 'அனைத்தையும் அழித்துவிடக்கூடிய' ஒரு பயங்கரமான தீயை மேற்கே உள்ள கடலுக்குக் கொண்டு சென்றுவிடுமாறு பிரம்மா தன் மகள் சரஸ்வதியைக் கேட்டுக்கொண்டார். முதலில் தயங்கிய சரஸ்வதியும் அந்தத் தீயைச் சுமந்து கொண்டு போகும் வழயில் புஷ்கர் (ராஜஸ்தானில் அஜ்மீருக்கு அருகில்) என்ற இடத்தில் சிறிது நேரம் தங்குகிறாள். பின்னர் கடலையடைந்து தீயைப் பாதுகாப்பாகக் கடலில் இட்டு அணைக்கிறாள். இதில் சொல்லப்பட்ட 'அனைத்தையும் அழித்துவிடக்கூடிய' தீ அந்த நேரத்தில் அந்தப் பகுதியை வாட்டியெடுத்த கொடிய பஞ்சமாக இருந்திருக்குமோ?சரஸ்வதி காணாமல்போன சம்பவம் பிற்கால இலக்கியங்களில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 'மேகதூதம்' என்ற காவியத்தில் தெய்விகக் கவி காளிதாசன் (பொ.யு.மு. முதல் நூற்றாண்டாக இருக்கக்கூடும்) மேகத்தை முதலில் பாரதத்தின் வடக்கிலுள்ள பல இடங்களுக்கும் இமயமலைக்கும் செல்லச் சொல்கிறார். அதன் பின்னர் குருக்ஷேத்திரத்துக்கும் விஜயம் செய்து, அதன் பிறகு சரஸ்வதி நதிக்கு வந்து அதன் புனிதமான நீரைப் பருகச் சொல்கிறார். அதே காளிதாஸன் பின்னர் எழுதிய 'அபிஞான சாகுந்தலம்' (சாகுந்தலம் நாடகம்; உல்ஃப்காங் கதேயை மிகவும் நெகிழச் செய்த நாடகம்) நாடகத்தில், மனதொடிந்து வருத்தத்திலிருக்கும் அரசன் வெறுமையாகிப்போன தனது வாழ்வை 'மணலில் புதைந்து மறைந்து போன சரஸ்வதி நதி'யுடன் ஒப்பிடுகிறார்.இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு 'ப்ருஹத்ஸம்ஹித' என்ற மாபெரும் அறிவுக்களஞ்சியத்தை எழுதிய ஆறாம் நூற்றாண்டு அறிஞர் வராஹமிஹிரர் அன்றைய இந்தியாவின் பூமி அமைப்பைப் பற்றி சுருக்கமாகச் சொல்கிறார். அதில் யமுனை, சரஸ்வதி நதிக்கரையோரங்களில் இருக்கும் நாடுகளைப் பற்றிப் பேசுகிறார். இதிலிருந்து பொ.யு.ஆறாம் நூற்றாண்டுவரையிலுமாவது சரஸ்வதியின் உற்பத்தி ஸ்தானத்துக்கு அருகில் சிறிதளவாவது நதி பாய்ந்துகொண்டிருந்தது என்பதை யூகிக்கலாம்.ஏழாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வட இந்தியாவை ஆண்டு வந்த ஹர்ஷ சக்ரவர்த்தியின் கதையை வர்ணிக்கும் 'ஹர்ஷ சரிதம்' என்ற படைப்பை எழுதிய பாணரிடமிருந்து மேற்கூறப்பட்ட செய்திக்கான நிரூபணம் நமக்கு எதிர்பாராதவகையில் கிடைக்கிறது. ஸ்தான்விஷ்வரா* நாட்டை ஆண்டுவந்த ஹர்ஷரின் தந்தை காலமானபோது, 'மக்கள் அவருடைய உடலை சரஸ்வதி நதிக்குக்கொண்டு சென்று எரியூட்டினார்கள். ராஜ அலங்காரத்துடன் இருந்த அந்தச் சிதை அவருடைய புகழைத் தவிர அனைத்தையும் எரித்தது.' துல்லிய சடங்காசாரத்துடன் ஹர்ஷ சக்ரவர்த்தி 'சரஸ்வதி நதிக்கரைக்குச் சென்று, ஸ்நானம் செய்தபின் தனது தந்தைக்கு அர்க்யம் கொடுத்து தர்ப்பணம் செய்ததாகவும் அந்தக் காவியம் விவரிக்கிறது. பொதுவாக, அலங்கார நடையில் எழுதும் பாணர் இந்த இடத்தில் மிகவும் இயல்பான நடையில் விவரித்திருக்கிறார்.இந்த வர்ணனை வராஹமிஹிரர், முந்தைய நூற்றாண்டு பூகோளம் தொடர்பாக எழுதியதுடன் ஒத்துப்போகிறது.பழங்காலக் கல்வெட்டுகளும் இது தொடர்பாகச் சில விஷயங்களைத் தெரிவிக்கின்றன. தானேசர் குருக்ஷேத்ரத்துக்கு முப்பது கிலோமீட்டர் மேற்கில் பெஹோவா என்னும் சிற்றூர் உள்ளது. அதனருகில்தான் நாம் முன்பு பார்த்ததுபோல், மார்க்கண்டா நதி சர்சுதியுடன் கலக்கிறது. 'ப்ருதுடாகா' (ப்ருது அரசன் நினைவாக வைக்கப்பட்ட பெயர்) என்ற பெயர் மருவி 'பெஹோவா' ஆனது. இதனருகில் சரஸ்வதி நதி அருணா நதியுடன் கலக்குமிடத்துக்கு அருகில் ஒரு மிகப் புனிதமான தீர்த்தம் இருப்பதாக மகாபாரதம் கூறுகிறது. அருணா நதி பழைய மார்க்கண்டா நதியாகவோ அதன் கிளையாகவோ இருக்கக்கூடும்.இந்த பெஹோவாவில் குர்ஜரப்ரதிஹார வம்சத்தைச் சேர்ந்த மிஹிர போஜன் என்ற அரசனின் கல்வெட்டு கிடைத்துள்ளது. அதில் ப்ருதுடாகா நகரம் ப்ராச்சி சரஸ்வதி அல்லது கிழக்கு சரஸ்வதிக்கு அருகில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பொ.யு.ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டு சரஸ்வதி என்ற பெயரிலான ஒரு நதி பெஹோவா வரையாவது ஓடிக்கொண்டிருந்தது என்பதை நிரூபிக்கும் அதி முக்கியமான சாட்சியம். நாம் இதுவரை பார்த்த இலக்கியங்களில் சொல்லப்பட்டதை இது நன்கு உறுதிசெய்கிறது. அதேநேரம் கிழக்கு சரஸ்வதி என்று சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது மேற்கு சரஸ்வதியும் இருந்திருக்க வேண்டுமென்பது தெரிகிறது. அதுதான் விநாசனத்துக்கு அப்பாலுள்ள வறண்ட பூமியைக் குறிக்கும் என்று நினைக்கிறேன்.பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த 'தாரிக்ஏமுபாரக் ஷாஹி' என்ற இஸ்லாமிய வரலாற்றுப் புத்தகமும் அந்தப் பகுதியில் சரஸ்வதி என்ற பெயரில் ஒரு நதி இருந்ததாகச் சொல்கிறது: 'ஒரு நதி சட்லெதார் நதியுடன் (சட்லெஜ் நதியுடன்) கலந்தது. அதன் பெயர் சர்சுதி'என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அந்த நதி மலைக்குன்றுகளிலிருந்து உற்பத்தியானதென்று குறிப்பிட்டிருக்கிறது. அது நமக்கு ஏற்கெனவே தெரியவந்த தகவல்களுடன் ஒத்துப்போகிறது. அது சட்லெஜின் கிளை நதியென்றால் பிந்தையது கக்கர் நதியுடன் இணைக்கும் கிளை நதியாகத்தான் இருந்திருக்கும் (சட்லெஜின் சிக்கலான வரலாறு பற்றி பின்னர் பார்ப்போம்).பழைய இலக்கியங்களினூடான நம்முடைய சுருக்கமான ஆய்வின் மூலம் என்ன தெரியவருகிறதென்றால், ரிக் வேத காலம் முதல் சரஸ்வதி நதி பாய்ந்தோடிய இடத்தைப் பற்றியும், அது குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு மறைந்து போனதைப் பற்றியும் அவை ஒரே சீரான தொனியில் பேசுகின்றன. ஒரு காலகட்டத்தில் 'பிரமாண்ட ஆறாக' இருந்தது பற்றியும் அதனால் நீர்ப்பாசனம் பெற்ற பகுதிகள் படிப்படியாக வறட்சிக்குள் வீழ்ந்தது பற்றியும் தொடர்ந்து வந்த படைப்புகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.0மேலே சொல்லப்பட்ட விஷயங்களெல்லாம் பொதுப்புத்தியிலும் ஆழமாகப் பதிந்திருந்தன: கக்கர்ஹக்ரா நதி வறண்டதாலேயே அந்தப் பிரதேசம் பாழடைந்தது என்பது தொடர்பாக அங்கு பாடப்பட்டு வந்த நாடோடிப் பாடல்களையும் செவிவழிக் கதைகளையும் ஜேம்ஸ் டாடும் ஸி.எஃப்.ஒல்தாமும் குறிப்பிட்டதை முன்பே பார்த்திருந்தோம். இது தொடர்பான இன்னொரு ஆதாரமானது கிழக்கிந்திய கம்பெனியில் அதிகாரியாக இருந்த அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாமிடமிருந்து கிடைக்கிறது. அவர், 1843லேயே இந்தியாவில் ஓர் அகழ்வாராய்ச்சித் துறையை நிறுவவேண்டுமென்று சிபாரிசு செய்தார். ஆனால், இந்திய கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கிழக்கிந்திய கம்பெனியின் முன்னுரிமையாக இருந்திருக்கவில்லை. எனவே, சுமார் 30 ஆண்டுகள் கழித்து 1871ல்தான் ஸ்தாபிக்கப்பட்டது. கன்னிங்ஹாம் அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். வேறு சாதனைகளுக்காகவும் நினைவுகூரப்படும் இவர், இந்தியாவின் எண்ணற்ற பாரம்பரியச் சின்னங்கள், நினைவிடங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் முதல் பட்டியலை மிகவும் கடுமையான முயற்சியின் மூலம் உருவாக்கியதற்காகவும் நினைவுகூரப்படுகிறார். அவற்றில் சில நல்ல பராமரிப்பு பெற்றன (எஞ்சியவை ஓரளவுக்கு அழிவைச் சந்திக்க நேர்ந்தன). மேலும் இந்தத் துணைக்கண்டத்தில் முதன் முதலாக அகழ்வாராய்ச்சிக்கான திட்டத்தை வடிவமைத்ததற்காகவும் புகழப்படுகிறார். =========சரஸ்வதி : ஒரு நதியின் மறைவுமிஷல் தனினோதமிழில் : வை. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 416 விலை ரூ.300இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-635-3.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X