குண்டானவர்களை விரும்பும் கொசுக்கள்| Dinamalar

குண்டானவர்களை விரும்பும் கொசுக்கள்

Added : டிச 06, 2014 | கருத்துகள் (4)
குண்டானவர்களை விரும்பும் கொசுக்கள்

நவீன உலகம் பல துறைகளில் அசாத்திய முன்னேற்றங்களை கண்டு வருகிறது. அதற்கு நாம் கொடுக்கும் விலையோ என்னவோ புதுப்புது நோய்கள் அறிமுகமாவது மட்டுமின்றி இருக்கும் நோய்களும் புதுவகைகளில் விஸ்வரூபம் எடுக்கின்றன. ஆண்டுதோறும் உலகளவில் ஐந்து முதல் 10கோடி பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். 1960ல் இருந்ததை விட 2010ல் டெங்குவின் தாக்கம் 30 மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கு நகர்மயமாதல் உட்பட பல்வேறு காரணங்கள். புவி வெப்பமயமாதல் ஒரு காரணம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். வருமுன் காப்பதே நலம் என்பது கொசு பரப்பும் காய்ச்சலுக்கான மருத்துவத்திற்கும் பொருந்தும்.

உலகளவில் நோய்களை விட கொசுவினால் பரவும் நோய்களால் தான் அதிகம் பேர் இறக்கின்றனர். சிக்குன்குனியா, டெங்கு, மலேரியா, மஞ்சள் காய்ச்சல் கொசுவின் மூலமே பரவுகிறது. கொசுவானது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுநோயை பரப்பும் ஊடகமாக செயல்படுகிறது. மனிதர்களுக்கு மட்டுமின்றி பூனை, நாய்களுக்கும் நோயை பரப்புகிறது. இதில் முக்கியமானது ஏடிஸ் மற்றும் அனாபிலஸ் கொசு இனங்கள் தான். கொசு ஏறத்தாழ 2700 சிற்றினங்களைக் கொண்டது. அதன் எடை இரண்டரை மில்லி கிராம். மணிக்கு ஒன்று முதல் ஒன்றரை மைல் வேகத்தில் பறக்கும். உணவுக்காக 40 மைல் தொலைவு கூட செல்லும். தன்னுடைய பறக்கும் சக்திக்காக தேன், பழத் திரவம் மற்றும் அழுகும் பொருட்களை உண்கிறது.


பெண் கொசு:

பெண் கொசு சராசரியாக மூன்று முதல் 100 நாட்களும் ஆண் கொசு 10 முதல் 20 நாட்கள் உயிர்வாழும். ஒரு பெண் கொசு 30 முதல் 100 முட்டைகளும் தன் வாழ்நாளில் 1000 முதல் 3000 சந்ததிகளை உருவாக்கும். தேங்கிய நீரில் முட்டை இடும். முட்டை, லார்வா, பியூப்பா மற்றும் முதிர் கொசு என நான்கு பருவங்களைக் கொண்டது. ஒரு மைல் சுற்றளவிற்குள் முட்டையிட்டு உயிர்வாழும். மனித உடலின் நறுமணம், வெப்பமான உடலிலிருந்து வரும் அகஊதா கதிர்வீச்சு, சுவாசிக்கும் போது வெளிவரும் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் மற்றும் பிற வேதிப் பொருட்களை 25 முதல் 30 மீட்டர் தொலைவில் இருந்தே கொசுக்கள் கண்டுபிடிக்கின்றன. கொசுவின் வாய்ப்பகுதியில் உள்ள 'மேக்சிலரி பால்ப்' தான் மனிதனை அடையாளம் காட்டுகிறது என்பதை கலிபோர்னியா பல்கலைகழகம் கண்டுபிடித்து 'செல்' என்ற ஆராய்ச்சி நூலில் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. கொசுவின் 'மேக்சிலரி பால்ப்' மனித மணத்தை உணர்வதை தடுத்துவிட்டால் கொசுக்கடியிலிருந்தும் அதுபரப்பும் நோயிலிருந்தும் தப்பிக்கலாம்.


இருட்டில் காண்பது எப்படி:

மனித உடலின் வெப்பம் மற்றும் நாம் வெளியிடும் கரியமில வாயுவின் மூலம் இருட்டிலும் கொசுக்கள் நம்மை அடையாளம் கண்டு கடிக்கின்றன என பூச்சியியலாளர் ஹாரி சேவாஜ் தெரிவிக்கிறார். நமது தோலில் இருந்து வெளிவரும் நறுமணத்தில் 350 வகையான வேதிப்பொருட்கள் உள்ளன என்கிறது அமெரிக்க கொசு கழகம். இதில் பெரும்பாலானவை கொசுக்களை கவர்ந்திழுக்கக்கூடியது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. நாம் மூச்சை இழுக்கும் போது வெளியேற்றும் வாயு தான் கொசுக்களுக்கு அதிகம் பிடித்த வாசனை. 50 அடி தூரத்திலும் இந்த வாயுவை அடையாளம் கண்டுவிடும். அதை முகர்ந்தவாறு வளைந்து நெளிந்து பறந்து வந்து ரத்தம் குடிக்கும். மனிதனுக்கு மனிதன் மணம் வேறுபடுவது கொசுக்களுக்கும் தெரியும். வியர்வையால் வெளிப்படும் அதிகளவு துர்நாற்றத்திற்கு நுண்ணுயிரிகளே காரணம். நாம் சுத்தமாக இல்லாததால் நுண்ணுயிரிகள் வியர்வையை கொசுவிற்கு இனிப்பாக மாற்றுகிறது. குறிப்பாக மலேரியாவை பரப்பும் அனாபிலஸ் கொசுக்கள் வியர்வை நாற்றத்தை, அதிகம் வியர்வை சுரப்பவர்களை, அழுக்காக இருப்பவர்களை, பாதங்கள் சுத்தமாக இல்லாதவர்களை மிகவும் விரும்பி கடிக்கின்றன. அழுக்கான சாக்ஸ் அணிந்துள்ளவர்களை கடித்து நோயை பரப்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன. குண்டானவர்கள், ஓய்வில்லாமல் உழைப்பவர்களை கொசுக்கள் கடிக்கின்றன. இவர்களிடமிருந்து அதிகளவில் கரியமில வாயுவும், தோலின் மூலம் லாக்டிக் அமிலமும் வெளியேறுவதே காரணம். எனவே உடலை சுத்தமாக கழுவி உலர்வாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்தபின் உடலைக் கழுவ வேண்டும்.


கருப்பு ஆடை அணிந்தால்:

மெல்லிய வண்ணம் கொண்ட, தளர்வான ஆடைகள் அணிந்தால் கொசுக்கள் அருகில் வராது. 'ஓ பாசிட்டிவ்' ரத்தவகை உள்ளவர்களை அதிகம் கடிக்கும். கர்ப்பிணிகள், கருப்பு நிற ஆடை, இறுக்கி பிடிக்கும் ஆடைகள் கொசுக்களை மிகவும் கவரும். ஆல்கஹால் அருந்துபவர்களின் உடல் வெப்பம் அதிகரிப்பதால் அந்த மிதவெப்பமான ரத்தம் கொசுக்களை மிகவும் கவரும். எந்த ஒரு பூச்சிகொல்லியையும் கொசு சமாளித்து ஒவ்வொரு முறையும் பலமடங்கு சக்தி கொண்டு உயிர்வாழ்கிறது. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பது தான் கொசுவை கட்டுப்படுத்த வழி . தன்னுடைய வாழ்க்கைக்காக எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறும் கொசுக்களின் வாழ்க்கை நமக்கொரு படிப்பினை. பிரச்னைகளைத் தாங்கித் தாங்கி கொசுவுக்கு பிறக்கக்கூடிய வலிமை மனிதனுக்கு இருக்கக்கூடாதா?

- எம்.ராஜேஷ்,
விலங்கியல் துறை உதவி பேராசிரியர்,
அமெரிக்கன் கல்லூரி,
மதுரை.
9443394233

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X