சாத்தான்கள் வேதம் ஓதலாம்... எப்போது? | Dinamalar

சாத்தான்கள் வேதம் ஓதலாம்... எப்போது?

Added : டிச 06, 2014 | கருத்துகள் (13)
Share
சாத்தான்கள் வேதம் ஓதலாம்... எப்போது?

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் நம் சமூக சீர்திருத்தவாதிகள், நம் பண்டை நாகரிகத்திற்கு கேடு விளைவிக்கும் விதத்தில், ஒரு அநாகரிகச் செயலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அண்மையில், சென்னையில் தொழிற்கல்வி பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள்ளேயே ஆண்களும், பெண்களும் வெட்ட வெளியில், பொது மக்கள் வெறுக்கும் விதத்திலும், கோபப்படும் விதத்திலும், ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தத் திருவிழா நடத்தியுள்ளனர்.'இச்செயல் நம் நாகரிகத்திற்கும், கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரானது; இத்தகைய அநாகரிகச் செயலை அரசு அனுமதிக்கக் கூடாது' என, ஒரு தரப்பினரும், 'இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது? இது ஆணும், பெண்ணும் தங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் இயற்கையான ஒரு சாதாரணமான செயல் தானே...?' என, அதை ஊக்குவிக்கும் மற்றொரு தரப்பினரும் வாதிடுகின்றனர். எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தம்மைச் சுற்றி எது நடந்தாலும், 'யார் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன... நமக்கு வேண்டியதெல்லாம் வேளா வேளைக்குச் சோறு, வசதியாக வாழ பணமும் தானே...' என்ற கொள்கையுடைய ஊரையும், உலகத்தையும் பற்றிக் கவலைப்படாத இன்னொரு கூட்டமும், இச்செயலைக் கண்டு கொள்ளாமல் இருந்ததையும் பார்த்தோம்.

மக்கள் பார்வை இவ்விஷயத்தில் ஒரே தன்மையுடையதாக இருக்காது; இருக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க, மனித இன வரலாற்றில் காலம் தோறும் நிகழ்ந்து வரும் மாற்றங்கள், அவற்றின் தன்மைகளை பொறுத்து, ஒரு சமுதாயம் மேன்மையுறவும், வீழ்ச்சியடையவும் வழிவகுத்திருக்கின்றன. மனித நாகரிக வளர்ச்சி என்பது, மனிதன் இயற்கையை எதிர்த்து வெற்றிக் கொண்ட வரலாறு தான். பிற உயிரினங்கள் இயற்கையோடு ஒன்றியே வாழ வேண்டிய நிலையில் இருக்கும் போது, மனிதன் மட்டும் இயற்கையின் சவால்களை எதிர்த்து நிற்கத் துணிந்தான். அந்தப் போரில் சாதனைகள் பல படைத்தான். மற்ற உயிரினங்களை அடிமைப்படுத்தியும், இயற்கையை தன் வயப்படுத்தியும் மனிதன் சாதனை புரிந்ததற்கு அவனது அறிவுத்திறன் தான் காரணம். ஒரு நாட்டின் நாகரிக வளர்ச்சியை, அந்நாட்டினர் தொன்று தொட்டு கடைபிடித்து வரும் கலாசாரம், பண்பாட்டு இயல்புகளை கருத்தில் கொண்டு தீர்மானிப்பர்

தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்பும், வட மாநிலத்தில் ரிக் வேத காலத்திற்கு முன்பும், ஒரு ஆண் மகன் பல பெண்களை மனைவியராக கொண்டிருந்ததும், ஒரு பெண் பல ஆண்களுக்கு மனைவியாக இருந்த சமுதாய சூழலும் நிலவியது. அதன்பின், மனிதர்கள் தறி கெட்டு, நெறி கெட்டு வாழ்ந்த நிலை மாறி, திருமண முறை நடைமுறைக்கு வந்தது. பெரியோர் மற்றும் மறையோர் முன்னிலையில், தெய்வங்கள் சாட்சியாக ஆணும், பெண்ணும் குடும்ப வாழ்வில் ஈடுபடும் நாகரிக வாழ்க்கையில், இந்திய சமுதாயம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது.இச்சடங்குகள், பெண்ணை அடிமைப்படுத்தும் செயல் என்று கூறி, இப்போது நம் சீர்திருத்தவாதிகள் சீர்திருத்த திருமணங்களை, கட்சித் தலைவர்கள் தாலி எடுத்துக் கொடுத்து, மணமகன், மணமகளின் கழுத்தில் தாலி கட்டி வருகின்றனர்.

ஆனால், இந்த சீர்திருத்தவாதிகளின் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்ற மதத்தினரிடம் செல்லுபடியாகாது.அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பை ஜாதிகள் அடிப்படையில் ஒதுக்கீடுகள் செய்த பின், மேலும் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் லட்சோப லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க தொழில்கள் துவங்கவும், உற்பத்தியை பெருக்கவும், வாழ்வாதாரத்தோடு தனி மனித வருமானம் அதிகரிக்கவும், ஆட்சிப் பொறுப்பில் இருந்த திராவிட கட்சிகள் உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காமராஜர் ஆட்சிக்கு பின், தமிழகத்தில் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்படவில்லை. புதிய ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்கள் தோண்டப்படவில்லை. அவற்றில் அவ்வப்போது துார் வாரும் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. பெருமழையால் வீணாக கடலில் சென்று கலக்கும் நீரை தடுத்து சேமித்து வைக்க, தடுப்பு அணைகள் கட்டப்படவில்லை.இதன் காரணமாக, கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது கேரளத்துடனும், கர்நாடகத்துடனும் மல்லுக் கட்டுவதையே நம் மாநில அரசு, ஒரு கடமையாக கொண்டிருக்கிறது.

நம் உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதில் நமக்கு உரிமை இருப்பது போல், நமக்கு பயன்படும் திட்டங்களை நமக்கு நாமே செய்து கொள்வது தானே நியாயம்? கட்சிகள் ஆடம்பர விழாக்கள் எடுக்கவும், கட்சித் தலைவர்களின் பிறந்த நாள், இறந்த நாள் கொண்டாடவும், மொழி, இன மாநாடுகள் நடத்தவும் கோடிகள் நம் அரசியல்வாதிகளால் செலவழிக்க முடிகிற போது, தமிழர்களின் வாழ்க்கை தரத்தையும், தமிழகத்தையும் முன்னேற்ற இவர்கள் ஏன் முன்வரவில்லை?தமிழர்களை கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களாக வைத்திருப்பது தான், நம் செந்தமிழ் செல்வந்தர்களின் கொள்கை போலும்!

கள்ளுக்கும், ஊனுக்கும், இலவசங்களுக்கும் அடிமைகளாகி, குடிகாரர்களாக தங்கள் இறுதி நாள் வரை ஏழைகளாகவே, வாழ்ந்து மடிகின்றனர் இன்றைய தமிழர்கள். அத்தகைய ஒருநிலையில் தான், இன்றைய தமிழகத்தையும், தமிழர்களையும் நம் தமிழினத் தலைவர்கள் வைத்திருக்கின்றனர் என்பதை, தெருக்களில் குடி போதையில் விழுந்து கிடக்கும் நம் தமிழ் 'குடி'மகன்களை பார்த்துக் தெரிந்து கொள்ளலாம்.
குடியிருக்க வீடுகளின்றி லட்சக்கணக்கான ஏழைகள் சாலையோரங்களில் குடியிருந்து கொண்டு மழைக்கும், வெயிலுக்கும், நோய்களுக்கும் இரையாகி வருகின்றனர். இவற்றை எல்லாம் கண்டும், காணாத குருடர்களாக இருக்கின்றனர் நம் அரசியல்வாதிகள்.

ஆகவே, கலாசார, பண்பாட்டு சீர்திருத்தங்களில் ஈடுபட்டிருக்கும் நம் முற்போக்குவாதிகளும், புரட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் முதலில் தங்களிடம் உள்ள குற்றம், குறைகளை போக்கிக் கொள்ள வேண்டும். வெறும் வாய்ச்சவடால் அடித்து, கேடுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால், தமிழ் சமுதாயம் தன் பெருமையை இழந்து, சிறுமைப்பட்டு நிற்கும் நிலை உண்டாகும்.எனவே, வேதம் ஓதும் இச்சாத்தான்கள் இனிமேலாவது தமிழரையும், தமிழகத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, உருப்படியான பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனமும், அக்கறையும் செலுத்தினால், நிச்சயம் அவர்கள் சாத்தான்கள் நிலையிலிருந்து தெய்வத்தின் நிலைக்கு உயர்வர் என்பதும், ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண முடிவதும் சாத்தியமே!
இ-மெயில் - krishna-_samy2010@yahoo.com

ஜி.கிருஷ்ணசாமி
கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், (பணிநிறைவு)
எழுத்தாளர்,
சிந்தனையாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X