புதுடில்லி ; 'அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில், பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகள், அங்குள்ள தொழில் அதிபர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியாவில், வெளிநாட்டு முதலீடு குவிய வாய்ப்புள்ளது' என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது, அங்குள்ள தொழில் அதிபர்களிடையே பேசிய அவர், 'இந்தியாவில் முதலீடு செய்தால், அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்' என, உறுதி அளித்தார்.
இந்நிலையில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான அசோசெம், வெளிநாடுகளில் உள்ள தங்கள் அலுவலகம் மூலம், இது தொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியது.
அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில் அதிபர்களிடம், இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது, 71 சதவீதம் பேர், பிரதமர் மோடியின் வாக்குறுதி நம்பிக்கை அளித்துள்ளதாகவும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 53 சதவீதம் பேர், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில், சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிடும் என கூறியுள்ளனர். 89 சதவீதம் பேர், இந்தியாவில் புதிதாக அமைந்துள்ள அரசின் தலைமைப் பண்பும், செயல்பாடும், கொள்கைகளும், உள்நாட்டு வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என, தெரிவித்துள்ளனர்.இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE