அநியாயங்களை ஆணி வேரோடு சாய்ப்போம்: இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்| Dinamalar

அநியாயங்களை ஆணி வேரோடு சாய்ப்போம்: இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

Added : டிச 09, 2014 | கருத்துகள் (55)
அநியாயங்களை ஆணி வேரோடு சாய்ப்போம்: இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்

செய்யாறு அருகே மாத்தூர் எனது சொந்த ஊர். 1948 ல் எனக்கு 14 வயது. பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான வயலில் விளைந்த நெல்லை அறுவடை செய்தோம். நெல் மூடைகளை லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு, 10 கிலோ அரிசியுடன் பஸ்சில் சென்னையில் உள்ள வீடு நோக்கிச் சென்றேன். சோதனைச் சாவடியில் பஸ்சில் அதிகாரிகள் சோதனையிட்டனர். ஒரு அதிகாரி,'அரிசியை கொண்டு செல்ல அனுமதி வாங்கியுள்ளாயா?' என்றார். இந்திய உணவுக் கழக அனுமதி உத்தரவை பெற்றதற்கான சான்றை காண்பித்தும், அரிசியை தாசில்தார் பறிமுதல் செய்தார். எவ்வளவோ எடுத்துக்கூறியும் அரிசிப் பையை தரவில்லை. நான் நியாயம் பேசியதால் கோபமடைந்த தாசில்தார்,' என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். மேலும் பேசினால் போலீசுக்கு தகவல் தெரிவிப்பேன்,' என மிரட்டினார். எங்கள் குடும்பத்தில் 11 பிள்ளைகள். நான் கொண்டு சென்ற அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. வெறுங்கையுடன் வீட்டிற்குச் சென்று அழுதேன். என் தந்தை,' அதிகாரிகள் ஏதோ தவறான அரிசி என நினைத்து பிடிச்சிருப்பாங்க. விட்டுத் தள்ளு. கடைக்குப் போய் அரிசி வாங்கி வருகிறேன்,' என ஆறுதல் கூறினார்.அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய தாசில்தாரை சும்மா விடக்கூடாது என இரவு முழுவதும் சிந்தித்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்போதைய வட ஆற்காடு கலெக்டருக்கு தபால் கார்டில் எழுதினேன். தாசில்தாரை கலெக்டர் சஸ்பெண்ட் செய்தார். என்னிடம் வருத்தம் தெரிவித்த தாசில்தார் அரிசி பையை ஒப்படைத்தார். அதற்குரிய ஒப்புதல் சான்றை அவரிடம் அளித்தேன். அதை கலெக்டரிடம் அளித்த தாசில்தார் 'வரும் காலங்களில் இதுபோல் நடந்துகொள்ள மாட்டேன்' என எழுதிக்கொடுத்தார். சஸ்பெண்ட் உத்தரவை கலெக்டர் திரும்பப் பெற்றார். தாசில்தார் நன்றி தெரிவித்தார். அது எனது முதல் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அதுதான் எனது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான பாதையை காட்டிய சம்பவம்.


ராஜாஜி உதவியாளர்:

தமிழக முதல்வராக இருந்த ராஜாஜியிடம் 1952-54 வரை உதவியாளராக இருந்தேன். அவர்,' நீ..., பெரிய ஆளாக வந்தால் மட்டும் போதாது. நேர்மையாக இருக்க வேண்டும். தவறுகளை தட்டிக்கேட்க வேண்டும்,' என்றார். துணிச்சலை அவரிடம் கற்றேன். எனது தந்தை வேலை செய்த பெரம்பூர் மில்லில் 1954 ல் வீவிங் மாஸ்டராக சேர்ந்தேன். ஜவுளி தொடர்பான ஏ.ஐ.எம்.இ.,படிப்பை அஞ்சல் வழியில் படித்து தேர்ச்சி பெற்றேன். 1971 ல் விருப்ப ஓய்வு பெற்றேன்.


சமூக சேவை நோக்கில் சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, போலீசாருக்கு உதவி செய்ய 1992 ல் காவல்துறையில் அனுமதி பெற்றேன். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும்போது கையை காட்டி நிறுத்தினால் அமைச்சர், உயரதிகாரிகளின் கார்கள் நிற்கும். இதனால் எனது பெயரோடு 'டிராபிக்' அடைமொழி ஒட்டிக்கொண்டது. சென்னை ஐகோர்ட்டைச் சுற்றி உள்ள ரோட்டை, 1998 ல் ஒருவழிப்பாதையாக போலீசார் மாற்றினர். அரசு மேம்பாலம் கட்ட உத்தரவிட்டது. ஒருவழிப்பாதையாக மாற்றியதால் விபத்துகளில் 20 பேர் பலியாகினர். ஒருவழிப்பாதையாக மாற்றவும், மேம்பாலம் கட்டவும் நிரந்தரத் தடை கோரி ஐகோர்ட்டில் முதன்முதலாக பொதுநல வழக்கு தொடர்ந்தேன். ஒருவழிப்பாதைக்கும், மேம்பாலம் கட்டவும் நீதிபதி நிரந்தரத் தடை விதித்தார். வழக்கு நிலுவையில் இருந்தபோது என்னிடம் பலர்,'வழக்கை வாபஸ் பெறுங்கள். உயரதிகாரிகளை பகைத்துக்கொண்டால் சிக்கல்தான்,' என்றனர். எதையும் நான் சட்டை செய்யவில்லை.


மீன்பாடி வண்டிகள்:

சென்னையில் பல மனித உயிர்களை குடித்த மீன்பாடி வண்டிகளை தடை செய்யக்கோரி ஐகோர்ட்டில் 1997 ல் மனு தாக்கல் செய்தேன். ஐகோர்ட் தடை விதித்தது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் மிரட்டினர். 2002 இரவு 8 மணிக்கு பாரிமுனை குறளகம் அருகே சிக்னலில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினேன். கூட்ட நெரிசலில் இருந்து வந்த ஒருவர் கத்தியால் எனது கண்ணில் குத்திவிட்டு ஓடினார். ரத்தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்தேன். கூட்டத்தை விலக்கியபடி வந்த ஒரு போலீஸ்காரர்,'சீக்கிரம் மருத்துவமனைக்கு போங்க சார்...,' என்றவாறே வேலையில் தீவிரமானார். கூட்டத்தை கலைத்தவாறே அவர்,' எப்பப் பார்த்தாலும் யார் மேலயாவது கேஸ் (வழக்கு) போட்டா.., இப்படித்தான். அவன் அதப் பண்றான், இவன் இதைப் பண்றான்னு யாருக்காச்சும் தொல்லை குடுத்துக்கிட்டு இருந்தா கத்தியால குத்தாம, கழுத்துக்கு மாலையா போடுவானுக,' என்றார் எகத்தாளமாக. ரத்தம் ஒழுக ஐகோர்ட் போலீசில் புகார் செய்தேன். காயம்பட்ட கண்ணின் பார்வையை காப்பாற்ற முடியாது என டாக்டர்கள் கைவிரித்தனர். ஒரு கண் பார்வை பறிபோனது. ஐகோர்ட் தீர்ப்பை ஏற்க முடியாதோரின் எதிர்வினையே கத்திக்குத்து. இதனால் அப்போதைய சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.


போலீஸ் வாங்கிய லஞ்சம்:

சென்னையில் ரோட்டோர கடைக்காரர்களிடம் போலீசார் எப்படியெல்லாம் லஞ்சம் வாங்கினர் என்பதை ரகசியமாக போட்டோ எடுத்தேன். அவை ஒரு வார இதழில் வெளியாகின. இதற்கு பழிவாங்கும் நோக்கில் போலீசார் என்னை பொய் வழக்கில் கைது செய்தனர். ஸ்டேஷனில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்தனர். ' போலீசார் என்னை துன்புறுத்தியதால், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்,' என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். சம்பந்தப்பட்ட போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து, எனக்கு எதிரான பொய் வழக்கையும் 1992 ல் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தீர்ப்பைக் கேட்டு கோர்ட் படிகளில் இறங்கிய அந்த இன்ஸ்பெக்டர் (தீர்ப்பின்போது உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றிருந்தார்) மயங்கி விழுந்து இறந்தார். அவருக்குப் பின் அந்த குடும்பமே நலிவடைந்தது. அவரின் இறப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


ஆக்கிரமிப்பு அகற்றம்:

வணிக வளாகங்கள் மிகுந்த தி.நகர் ரங்கநாதன் தெருவை ஒழுங்குபடுத்தி, சீர் செய்ய உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் மனு செய்தேன். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. நீதிபதி மோகன் தலைமையிலான குழு ரங்கநாதன் தெரு உட்பட பல்வேறு இடங்களை ஆய்வு செய்து 2007 ல் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. கனிமவளக் கொள்ளை தொடர்பாக ஐ.ஏ.எஸ்.,அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிடக்கோரி அண்மையில் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளின் முறைகேடுகளை ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். 'எல்லோரும் சும்மா இருக்கும் போது டிராபிக் ராமசாமிக்கு மட்டும் இந்த வேண்டாத வேலை ஏன்?' என்கிறனர். 'நான் செய்யும் இந்த காரியத்தைச் செய்ய இங்கே யாரும் இல்லை; அதனால் நான் செய்கிறேன்,' என்றார் ஈ.வெ.ரா.,பெரியார். அதைத்தான் பதிலாக கூறுகிறேன்.

சமூகத்தில் நடக்கும் கேடுகள், லஞ்ச, ஊழல் கொடுமைகளுக்கு எதிராக போராடுகிறேன் 82 வயதில்! நான் ஒரு கருவி மட்டுமே. ஒரு காரியத்தை துவங்கி வைக்கும் ஆரம்பப் புள்ளி. உரிமையை நிலைநாட்ட, தீமையை தீயிட்டுக் கொளுத்த, அநியாயங்களை ஆணிவேரோடு சாய்க்க மக்கள்தான் போராட வேண்டும். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்க வேண்டும். உங்கள் காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக தவறு என தெரிந்தும் அதற்கு உடன்படாதீர்கள். ஊழல், லஞ்சத்தை அனுமதிக்கமாட்டோம் என நிமிர்ந்து நில்லுங்கள். போராடத் துணிந்தால் அநியாயம் நடக்காது. மறுமலர்ச்சியை ஏற்படுத்த பெருங்கூட்டம் தேவையில்லை. தனிநபர் போதும். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு போராளி போதும். பயத்தை தூக்கி எறிந்து பாயத் துவங்கினால் தலைகீழ் மாற்றம் நிச்சயம்.

- 'டிராபிக்' ராமசாமி, சமூக ஆர்வலர். 98403 16565.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X