அவளை வரவேற்று, லெமன் டீ கொடுத்து உபசரித்த சித்ரா, ""கலெக்டர் ஆபீசுக்கு போயிருந்தீயே... ஏதாச்சும் விசேஷம் இருக்கா?,'' என, அன்றைய விவாதத்தை துவக்கினாள்.
""ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்களிடம் குறைகேட்பாங்க. மரத்தடியில் டேபிள் போட்டு, நாலு உதவியாளர்கள் மனுவை பதிவு செய்றது வழக்கம். அதை கலெக்டர் பார்த்ததும் கோபமாகிட்டார். அரசு ஊழியர் மரத்தடியில் ஒக்காரக்கூடாது; நமக்குனு மரியாதை இருக்கு. ஏதாவது ஒரு அறையில் அமர்ந்து, மனுவை பதிவு செய்யுங்கனு சத்தம் போட்டார். உடனே, பக்கத்தில் இருந்த "டிவி' அறைக்கு மாத்துனாங்க. ஆனா, பொதுமக்கள் வெட்ட வெயிலில் காத்திருந்து மனு கொடுக்க வேண்டியிருந்துச்சு; ஒரு பெரியவர் மயங்கி விழுந்துட்டார். அதனால, இப்ப, மேற்கூரை அமைச்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""மனு வாங்குறதுக்கு இவ்ளோ ஏற்பாடு செய்றதை போல, மனுக்களில் குறிப்பிட்டிருக்கும் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படுத்துனாங்கன்னா... பரவாயில்லை,'' என, அலுத்துக் கொண்டார் சித்ரா.
""மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், ஆளுங்கட்சிக்காரங்க போராட்டம் செஞ்சாங்களே... என்னாச்சு... பிரச்னை அமுங்கிடுச்சா...,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""அதுவா... "ரிசர்வ் சைட்'டை மாநகராட்சி பெயருக்கு எழுதி வாங்காம, மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் கொடுக்கிறதுக்கு அவசர தீர்மானம் கொண்டு வந்தாங்க. இவ்விவகாரத்தில், பல லட்சம் பேரம் பேசியிருக்கிறதா தகவல் பரவியிருக்கு. மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் எல்லோரும் ஒன்னா சேர்ந்து, எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இருந்தாலும், தீர்மானம் நிறைவேறிடுச்சுன்னு சொல்லிட்டாங்க. ஆளுங்கட்சியை சேர்ந்த 34 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, கமிஷனரிடம் மனு கொடுத்திருக்காங்க. ஆளுங்கட்சியில் மொத்தம் 50 கவுன்சிலர்கள் இருக்காங்க. 16 பேர் ஏன் கையெழுத்து போடலைன்னு ஒரு தரப்பு கேள்வி கேட்டு துளைக்குது. கையெழுத்து போட்டவங்களுக்கு ஒரு தரப்பு போன் போட்டு வாட்டி எடுக்குது. கவுன்சிலர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""கட்சி தலைமைக்கும் புகார் போச்சாமே...,'' என மித்ரா கேள்வியை முடிப்பதற்குள், ""வழக்கமாக மன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரங்க பிரச்னை எழுப்புவாங்க... இந்த தடவை ஆளுங்கட்சிக்காரங்களே போராட்டம் செய்ததால், கட்சி தலைமையில் இருந்து கூப்பிட்டு பேசியிருக்காங்க. எல்லோரையும் அனுசரிச்சு போங்க; வீணா, பிரச்னை பண்ணாதீங்கன்னு, "அட்வைஸ்' பண்ணி அனுப்பியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
லெமன் டீயை குடித்து முடித்த மித்ரா, ""திருப்பூரில் இருந்து கோவை செல்வதற்காக, இளைஞர் காவல் படையை சேர்ந்த நான்கு பேர் தனியார் பஸ்சில் ஏறியிருக்காங்க. அவங்க, போலீஸ் இல்லைங்கறதால, ஓனர்கிட்டே கேட்டுட்டு டிக்கெட் இல்லாமல், ஏத்திட்டு போறாத கண்டக்டர் சொல்லியிருக்கார். ஓனர் என்ன சொன்னாருன்னு தெரியலை. அவங்களை பஸ்சில் ஏத்த மாட்டேன்னு கண்டக்டர் சொல்லிட்டார்,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""அப்புறம்... என்னாச்சு,'' என படபடத்தாள் சித்ரா.
""இவ்விஷயத்தை கேள்விப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருத்தர், போக்குவரத்து போலீசுக்கு "பிரஷர்' கொடுத்திருக்கார். அவுங்க மூலமா, சம்பந்தப்பட்ட தனியார் பஸ்களை பிடிச்சு, பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செஞ்சு, தீட்டிட்டாங்க,'' என்றவாறு, படுக்கை அறைக்கு சென்றாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE