பொது செய்தி

இந்தியா

'உபெர்' கால் டாக்சிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு: மும்பையில் தாக்குதல்; ஐதராபாத்தில் தடை

Updated : டிச 10, 2014 | Added : டிச 10, 2014 | கருத்துகள் (12)
Advertisement
Anger, Uber, call taxi,India, 'உபெர்' கால் டாக்சி, நாடு,  எதிர்ப்பு, மும்பை, தாக்குதல், ஐதராபாத், தடை

மும்பை: டில்லியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த, 'உபெர்' கால் டாக்சி நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மும்பையில் அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் தாக்குதலுக்கு ஆளானார். ஐதராபாத்தில், அந்த நிறுவனத்தின் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து, 'உபெர்' கால் டாக்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், இந்த நிறுவனத்தின் கால் டாக்சி சேவை உள்ளது. சமீபத்தில், தலைநகர் டில்லி யில், இந்த நிறுவனத்தின் கால் டாக்சியில் சென்ற இளம்பெண், அதன் டிரைவர் ஷிவ்குமார் யாதவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பல வழக்குகள்:

விசாரணையில், 'உபெர்' நிறுவனம், டில்லி போலீசாரின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்காதது தெரியவந்தது. 'கால் டாக்சியில் டிரைவராக பணியாற்றுவோரை பற்றிய பின்னணி குறித்து டில்லி போலீசாருக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்' என்ற விதிமுறை உள்ளது. டில்லி போலீசாரிடம் நடத்தைச் சான்றிதழ் பெற்ற டிரைவர்கள் மட்டுமே, கால் டாக்சிகளில் டிரைவர்களாக பணியாற்ற வேண்டும். ஆனால், ஷிவ்குமார் மீது, டில்லியிலும், உ.பி., மாநிலத்திலும், ஏற்கனவே பல வழக்குகள் உள்ள நிலையில், பொய்யான தகவல்களை அளித்து, அவருக்கு நடத்தை சான்றிதழ் வாங்கியதாக, உபெர் நிறுவனம் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் நிர்வாகியிடம், டில்லி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் உபெர் நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மும்பையில், நேற்று, போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்துக்கு சென்ற, உபெர் நிறுவனத்தின் பொது மேலாளர் சைலேஷ் சவானி மீது, மர்ம நபர் ஒருவர், சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடினார். இதனால், நிலைகுலைந்து போன சவானி, இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.
சட்டவிரோத சேவை:

இந்த சம்பவம் காரணமாக, உபெர் நிறுவன கால் டாக்சி டிரைவர்கள் பீதி அடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலும், உபெர் நிறுவனம் கால் டாக்சிக்களை இயக்கி வந்தது. டில்லி சம்பவத்துக்கு பின், அந்த நிறுவனத்தின் சேவையை தடை செய்வதாக, தெலுங்கானா போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக, மாநில போக்குவரத்து துறை இணை கமிஷனர் ஜெகதீஷ்வர ரெட்டி கூறியதாவது: கால் டாக்சிகளை இயக்குவதற்கு உபெர் நிறுவனத்துக்கு எந்த அனுமதியும் அளிக்கவில்லை. சட்டவிரோதமாக அவர்கள் டாக்சி சேவையில் ஈடுபடுகின்றனர். அந்த நிறுவனத்தின் டாக்சி சேவையை பயன்படுத்த வேண்டாம் என, பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி, டாக்சி சேவையில் ஈடுபட்டால், அந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பிடி இறுகும்:

இதற்கிடையே, உபெர் நிறுவனத்தின் ஆசிய - பசிபிக் சேவைப் பிரிவின் தலைவர் அலெக்சாண்டர் நேற்று டில்லி வந்தார். அவரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பாதுகாப்பற்றதாக கருதப்படுவதால், இணையதளம் மூலம் செயல்படும் கால் டாக்சி சேவை நாடு முழுவதும் ரத்து செய்யப்படுவதாக, நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இதையடுத்து, இணையதளம் அல்லாத வழியில் செயல்படும் மற்ற கால் டாக்சி நிறுவனங்களின் மீதான அரசின் பிடியும் இறுகும் என, தெரிகிறது.
முறைப்படுத்தப்படுமா?

தமிழகத்திலும், ஏராளமான தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக, சென்னையில், புற்றீசல் போல் கால் டாக்சி சேவைகள் அதிகரித்துள்ளன. இந்த சேவை, சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாக நடக்கிறதா, டிரைவர்களின் பின்னணி குறித்த தகவல்கள் போலீசாரிடம் உள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த கால் டாக்சி சேவையை முறைப்படுத்த, தமிழக அரசும், போக்குவரத்து துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

'உபெர்' எங்கே, எப்போது?


1 'உபெர்' கால் டாக்சி நிறுவனம், கடந்தாண்டு தான், இந்தியாவில் தன் சேவையை துவக்கியது.


2 கடந்தாண்டு செப்டம்பரில், பெங்களூருவில் சோதனை முயற்சியாக அந்த நிறுவனம் சேவையை துவக்கியது.


3 அடுத்தடுத்து, நாட்டின் முக்கிய நகரங்களில் அந்த நிறுவனம், தன் சேவையை விரிவு படுத்தியது.


4 தற்போது, டில்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, மும்பை, புனே, ஆமதாபாத், சண்டிகர், ஜெய்ப்பூர், கோல்கட்டா ஆகிய நகரங்களில் இந்த நிறுவனம் கால் டாக்சிகளை இயக்கி வருகிறது.


5 டில்லி, ஐதராபாத்தில் இதன் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மற்ற நகரங்களிலும் இந்த நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


6 தடை விதிக்கப்பட்டாலும், டில்லியில் உபெர் நிறுவனத்தின் கால் டாக்சிக்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.


7 தடையை அமல்படுத்துவது தொடர்பாக, டில்லி மாநில அரசின் போக்குவரத்து துறைக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதே இதற்கு காரணம்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gogulaa - Thiruthuraipoondi,இந்தியா
11-டிச-201408:09:40 IST Report Abuse
Gogulaa மனித மனது ஒரு குரங்கு போன்றது, அது எப்போது எவ்வாறு மாறும் என்பதை எவரும் கணிக்க இயலாது, வீட்டில் எவ்வளவோ அலும்பு செய்யும் பலரும் வெளியே கண்ணியத்துடன் நடந்துகொள்வதும், வெளியே ரௌடியிசம் செய்யும் பலர் வீட்டில் எலி மாதிரி பதுங்கி வாழ்வதும் இவ்வுலகம் கண்ட உண்மை, இது போன்ற பொது சேவையில் உள்ள பலரும் செய்யும் குற்ற செயல்கள் உடனடியாக அவரின் லைசென்ஸ் அடையாள அட்டை போன்றவற்றில் உடனடியாக இடம்செய்யும் செயலை செய்தால்தான் ஒருவரின் குற்ற பின்னணி வெளி தெரியவரும். இப்போது இருக்கும் நடைமுறைப்படி ஒரு ஊரில் பயங்கர குற்றம் செய்துவிட்டு மற்றொரு ஊரில் அப்பாவிபோல் வாழ முடியும் இந்நிலையை அரசாங்கம்தான் மாற்றவேண்டும், நிறுவனங்கள் ஊழியரின் பின்னால் அலைந்து கொண்டிருக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Nava Mayam - New Delhi,இந்தியா
11-டிச-201407:22:48 IST Report Abuse
Nava Mayam இது ஒரு தனிநபரின் செயல் ... எந்த நிறுவனம் ஒரு போலிஸ் சர்டிபிகேட்டை வைத்து வேலை கொடுத்துல்லாது.. இந்தியாவில் ஒரு சர்டிபிகேட்டை சரிபார்க்க என்ன வசதி உள்ளது... பலர் போலி சர்டிபிகேட்டில் பல வேளைகளில் உள்ளனர்...என் அரசியல் தலைவர்களே பல போலி ஆவணனகளின் மூலம் பதவியில் உள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது...முன்பு டெல்லி பஸ்ஸில் கற்பழிப்பு நடந்துள்ளதர்க்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று சொல்லியவர்கள் இன்று அரசின் கடமையை மூடி மறைத்து இந்த நிறுவனத்தின் மீது பழி போட்டு தப்பிக்கொள்ள பார்க்கிறது..அப்போ இந்த கம்பெனி முறையான அனுமதி பெற்றிருந்தால் இந்த கற்பழிப்பு சரியானதாகி விடுமா... தலையைவிட்டு வாலை பிடிக்கிற கதைதான் இது...
Rate this:
Share this comment
Cancel
Nava Mayam - New Delhi,இந்தியா
11-டிச-201407:17:15 IST Report Abuse
Nava Mayam ஒரு வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி அடுத்த வீட்டு அம்மாவை அடித்து விட்டால் அந்த வேலைக்காரிக்கு தண்டனை கொடுக்க வேண்டும்...ஆனால் போலிஸ் வந்து அந்த வேலைகாரியோட எஜமானி அம்மாவை கைது செய்து தண்டனை கொடுக்கிறது என்ன நியாயம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X