16 டன் பாக்கெட்டுக்கு முளைச்சது காலு ஆவியாயிருச்சா ஆவின் பாலு?| Dinamalar

16 டன் பாக்கெட்டுக்கு முளைச்சது காலு ஆவியாயிருச்சா ஆவின் பாலு?

Added : டிச 16, 2014
Share
''மித்து! பஸ் கிளம்புறதுக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கு. குளிருக்கு சூடா ஏதாவது குடிச்சா நல்லாருக்கும் போலிருக்கு!,'' ஆம்னி பஸ் ஸ்டாண்ட்டில், தன்னை பஸ் ஏற்றி விட வந்த மித்ராவிடம் கேட்டாள் சித்ரா. ''ஓட்டலே இல்லாட்டாலும், ஏதாவது ஆவின் பாலகம் இருக்குமே. போய்ப் பார்க்கலாம்!,'' என்று நடக்க ஆரம்பித்தாள் மித்ரா. ''ஆவின் பார்லர் ஆக்கிரமிப்பைப் பத்திதான் எல்லாரும்
16 டன் பாக்கெட்டுக்கு முளைச்சது காலு   ஆவியாயிருச்சா ஆவின் பாலு?

''மித்து! பஸ் கிளம்புறதுக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கு. குளிருக்கு சூடா ஏதாவது குடிச்சா நல்லாருக்கும் போலிருக்கு!,''


ஆம்னி பஸ் ஸ்டாண்ட்டில், தன்னை பஸ் ஏற்றி விட வந்த மித்ராவிடம் கேட்டாள் சித்ரா.


''ஓட்டலே இல்லாட்டாலும், ஏதாவது ஆவின் பாலகம் இருக்குமே. போய்ப் பார்க்கலாம்!,'' என்று நடக்க ஆரம்பித்தாள் மித்ரா.


''ஆவின் பார்லர் ஆக்கிரமிப்பைப் பத்திதான் எல்லாரும் பெருசா பேசுறாங்க. அங்க நடக்குற ஊழலைக் கேட்டா, தலை சுத்தி கீழ விழுந்துருவ...!,'' என்றபடி, கூடவே நடந்தாள் சித்ரா.


''என்னக்கா சொல்ற...சென்னையில நடந்தது மாதிரி, இங்கேயும் நடந்திருக்கா?,'' என்றாள் மித்ரா.

''அது தெரியலை...ஆனா, அங்க அம்பது அறுபது கோடி ரூபா பட்ஜெட்ல தயாராகுற புது பிளான்ட்டுக்கு 'மெஷின் பர்ச்சேஸ்' பண்ணுனதுலயிருந்து, எல்லாத்துலயும் ஏகப்பட்ட ஊழல் நடந்திருக்காம். இங்க பல வருஷமா, ஜி.எம்.,மா இருந்து, ரிட்டயர்டு ஆன ஆபீசர் ஒருத்தர் தான், இதுக்கெல்லாம் காரணம்கிறாங்க,'' என்றாள் சித்ரா.


''அதெப்பிடிக்கா....ரிட்டயர்டு ஆனவரு, இதுல எப்பிடி தலையிட முடியும்?,'' என்றாள் மித்ரா.


''அங்கதான்டி இருக்கு...விஷயமே. அவருதான், இந்த புது 'பிளான்ட்' வேலைய ஆரம்பிச்சவரு. அப்பயிருந்தே எல்லாத்துலயும் நல்லா காசு பாத்திருக்காரு. இடையில வந்த ஜி.எம்., இதுக்கெல்லாம் ஒத்து வரலைன்னதும் அவரைத் தூக்கி விட்டுட்டு, தனக்கு வேண்டிய ஒருத்தரை, அந்த போஸ்ட்டிங்குக்கு கொண்டு வந்துட்டாரு. வெளியூர்க்காரரான அவரு, இதுக்காகவே வடவள்ளியில வீடு வாங்கி, 'செட்டில்' ஆயிட்டாரு. ரிட்டயர்டு ஆன பிறகும், ஆவின்ல அவரோட சுயராஜ்யம் தான் நடக்குது!,'' என்றாள் சித்ரா.


''அதே ஆவின்ல 16 டன் பாலித்தீன் பிலிம் தொலைஞ்சு போச்சுன்னு ஒருத்தரை 'சஸ்பெண்ட்' பண்ணுனாங்க தெரியுமா?,''


''ஆமாமா! நல்லா ஞாபகமிருக்கு...!''


''வெளிய போனது வெறும் பிலிம் மட்டுமில்லையாம்...கூடவே பாலும் போயிருக்காம். அதுக்கு யாரை 'சஸ்பெண்ட்' பண்றதுன்னு 'ஸ்டாஃப்ஸ்' கேக்குறாங்க?,''


என்றாள் மித்ரா.


''பிலிம்ல எப்பிடிடி பால் போகும்?,'' என்றாள் சித்ரா.


''அக்கா! பிலிம்னா, அந்த பால் பாக்கெட் தயாரிக்கிற பாலித்தீன் தான். ஒரு கிலோ பிலிம்ல, 400 அரை லிட்டர் பாக்கெட் போடலாம். 16 ஆயிரம் கிலோ பிலிமைக் காணோம்னா, எத்தனை ஆயிரம் லிட்டர் பால், கணக்குல இல்லாம வெளிய போயிருக்கும்...கணக்கு பண்ணிக்கோ!'' என்றாள் மித்ரா.


''அய்யோ...எனக்கு தலை சுத்துதுடி...உடனே ஒரு பால் ஆர்டர் பண்ணு!,'' என்றாள் சித்ரா.


அருகிலிருந்த பேக்கரியில், பாதாம்பாலுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு, இருவரும் வெளியே நின்றனர். எப்.எம்., ரேடியோவில் 'பாண்டியனா கொக்கா கொக்கா' என்று சத்தமாய்ப் பாடிக்கொண்டிருந்தது.


''ஆம்னி பஸ் ஸ்டாண்ட்ல இந்த பாட்டு...கரெக்ட் சிச்சுவேஷ


னாத்தான் இருக்குடி!,'' என்று நிறுத்தினாள் சித்ரா.


''பஸ் ஸ்டாண்டுக்கு பாட்டு சிச்சுவேஷனா?'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் மித்ரா.


''நம்மூர்ல 'ஃபிளையிங் ஸ்குவாடு' ஆர்.டி.ஓ., பாண்டியன்னு ஒருத்தரு, பட்டையக் கெளப்பிட்டு இருக்கார்ல... அவரைப் பார்த்து, ஆம்னி பஸ்காரங்க ஆடிப்போயிருக்காங்க!,'' என்றாள் சித்ரா.

''ஏன்க்கா! பெரிய ஆளுங்க வண்டியை கை வச்சுட்டாரா?,''


''ஆமா மித்து! மூனெழுத்துள்ள ரெண்டு கம்பெனிகளோட ஆம்னி பஸ்களை, எந்த ஆர்.டி.ஓ.,வும் இதுவரைக்கும் தொட்டதே கிடையாது. இவரு... அந்த பஸ்களையும் பிடிச்சு, கேசைப்போட்டு, பல நாள் ஓடாம நிறுத்தி வச்சிட்டாரு. அதே மாதிரி, மீட்டர் இல்லாத 24 ஆட்டோக்களையும் பிடிச்சு, சங்கிலியப் போட்டு, 3 'வீல்'லயும் காத்தைப்பிடுங்கி விட்டுட்டாரு. அதனால அவரை தூக்குறதுக்கு துடியா துடிக்கிறாங்க!,''


''நல்லவுங்களைக் காப்பாத்த யாருமில்லை...ஊழல் பண்றவுங்களைக் காப்பாத்த, ஊர்ல இருக்கிற வி.ஐ.பி.,யெல்லாம் ஒண்ணு கூடிர்றாங்க...!'' என்று நிறுத்தினாள் மித்ரா.


''இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்டி...நீ சொல்றது யாரைப்பத்தி?'' என்றாள் சித்ரா.


''நீலம்பூர் ஊராட்சியில 2 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துச்சுன்னு, அந்த பிரசிடென்ட்ட 'டிஸ்மிஸ்' பண்ணிட்டாங்களே...அதுல, நம்ம மேடம் ஏன் 'ஆக்ஷன்' எடுத்தாங்க தெரியுமா?,''


''அதான் 'ஆடிட் ரிப்போர்ட்'லயே தெளிவாச் சொல்லிட்டாங்களே...அப்புறம் எப்பிடி 'ஆக்ஷன்' எடுக்காம இருக்க முடியும்?,''


''அதுக்கெல்லாம் அசைஞ்சு கொடுக்கிற ஆளா...நம்ம மேடம்? அந்த பிரசிடென்ட், ஏடிஎம்கேயில சேர்ந்துட்டதால, அவரு மேல எந்த நடவடிக்கையும் எடுக்க வேணாம்னு, ஆளும்கட்சி வி.ஐ.பி., சொல்லிருக்காரு. அதனால, இந்தம்மாவும் இழுத்தடிச்சிருக்காங்க. கடுப்பாகி, அந்த ஊர்க்காரங்க 'ஆடிட் ரிப்போர்ட்'டை வச்சு, கோர்ட்டுக்குப் போக ரெடியாயிட்டாங்க. இது தெரிஞ்சு தான், 'டிஸ்மிஸ்' பண்ணிருக்காங்க!,'' என்றாள் மித்ரா.


''ஏற்கனவே, கோர்ட்ல பல முறை குட்டு வாங்குன அனுபவம் இருக்குல்ல...!'' என்று சிரித்தாள் சித்ரா.

''கரெக்ட்...! இவுங்ககிட்ட தென்கரை, சமத்தூரு, கருமத்தம்பட்டி, மோப்பிரிபாளையம் பொது மக்கள், கவுன்சிலரெல்லாம் பெட்டிஷன் கொடுத்தாங்க. என்னாச்சு...? தென்கரை பேரூராட்சியில நடந்த ஊழலைப் பத்தி, 54 பெட்டிஷன் கொடுத்தாங்க. ஒண்ணும் நடக்கலை...அவுங்களும் கோர்ட்டுக்குப் போக முடிவு பண்ணிருக்காங்க. இதைத்தெரிஞ்சிட்டு, அவுங்களைக் கூப்பிட்டு, இந்த மேடம் பேச்சுவார்த்தை நடத்துறாங்க!,'' என்றாள் மித்ரா.


''பெட்டிஷன்னு பேசுனாலே, எனக்கு ஆளும்கட்சி ஞாபகம் வந்துரும். அந்த உரசல் என்னாச்சு? என்றாள் சித்ரா.


''இப்போ சுமூகமாயிருச்சாம். மேயரும், கமிஷனரும் சேர்ந்து, சிட்டிக்குள்ள சில வேலைகளையாவது 'ஸ்பீடா' முடிக்கிறதுன்னு களம் இறங்கிட்டாங்க!,'' என்றாள் மித்ரா.


''ஓ....ஊருக்கு ஏதாவது நல்லது நடந்தா சரி!,'' என்ற சித்ரா, ஏதோ நினைவுக்கு வந்தவளாக, ''மித்து! காந்தி பார்க்கிட்ட ஒரு ஓட்டலுக்காக, கோவில் மண்டபத்தை மாத்திக் கட்டுனதுக்காக இ.ஓ., ஒருத்தரு 'சஸ்பெண்ட்' ஆனாரே...ஞாபமிருக்கா? புது இ.ஓ.,விசாரிச்சதுல, அந்த ஓட்டல் கட்டியிருக்கிற இடமே, கோவில் இடம்னு தெரியவந்திருக்காம். அநேகமா, சீக்கிரமே ஓட்டலை இடிச்சாலும் இடிச்சிருவாங்க!'' என்றாள்.


''இடிக்கிறதைப் பத்திப்பேசவும், கட்டுறது ஞாபகத்துக்கு வந்திருச்சு. ஜி.எச்.ல மார்ச்சுவரிய வேற இடத்துல கட்டுறதுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சு, பக்கத்துல இருக்கிற கேர்ள்ஸ் ஸ்கூல்களோட பி.டி.ஏ.,காரங்க, மேயரைப் பாத்து பெட்டிஷன் கொடுத்திருக்காங்க. அவரும் பாக்குறேன்னு சொல்லிருக்காராம்!,'' என்றாள் மித்ரா.


''நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் மித்து! புதுசா மார்ச்சுவரி கட்டுற இடம், ஈசான மூலையாம். அந்த இடத்துல, மார்ச்சுவரி இருந்தா, ஊருக்கே நல்லதில்லையாம். இது எப்பிடி இருக்கு?,'' என்றாள் சித்ரா.


''எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கையில்லை. ஆனா, மார்ச்சுவரியை எங்கெங்க கட்டக்கூடாதுன்னு சட்டத்துல இருக்கோ, அப்பிடிப்பட்ட இடத்துல தான் அதைக் கட்றாங்கன்னு வக்கீலுங்க சொல்றாங்க!,'' என்றாள் மித்ரா.


''ஊருக்கு என்ன ஆனா, இந்த அரசியல்வாதிகளுக்கு என்ன கவலை? எதையெடுத்தாலும் காசு பாக்குறதே, இவுங்களுக்கு வேலையாப்போச்சு!,'' என்றாள் சித்ரா.


அடுத்த மேட்டரை ஆரம்பிப்பதற்குள், ஆம்னி பஸ் கிளம்புவதற்கான அறிவிப்பு வர,


'பை பை' கூறி, வண்டியைக் கிளப்பினாள் மித்ரா.Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X