திருக்குறள் காட்டும் திருப்பாதை

Updated : டிச 19, 2014 | Added : டிச 19, 2014 | கருத்துகள் (12)
Advertisement
திருக்குறள் காட்டும் திருப்பாதை

இங்கிலாந்து விக்டோரியா மகாராணியாரின் முதல் வேலை காலையில் எழுந்ததும் திருக்குறள் படிப்பது தானாம். காந்தியிடம் நிருபர்கள், உங்களுக்கு அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசை? என கேட்ட போது, தமிழராக பிறந்து திருக்குறளை படிக்க வேண்டும் என்றாராம். தமிழ்த்தென்றல் என அழைக்கப்பட்டவர் திரு.வி.க., திருமணம் முடித்து ஆறு ஆண்டுகளில் தன் மனைவி கமலாம்பிகை இறந்துவிடவும், ஏன் தனிமையில் இருக்கிறீர்கள். வேறொரு திருமணம் செய்ய வேண்டியது தானே? என பலரும் கேட்க, நான் தனிமையில் இருப்பதாக யார் சொன்னது. தமிழோடும், தமிழ் தந்த குறளோடும் இணைந்தே இருக்கிறேன் என்று கூறி அவர்களின் வாயை அடைத்தார்.


எளிய நூல்களின் தொகுப்பு:

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் எளிமையான தொகுப்பே திருக்குறள். நம்மில் பலர் எழுதிய நூல்கள் தாள் தாளாக இருக்கும் போது, இந்நூலைப் பாராட்டி எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பே திருவள்ளுவர் மாலை. இதில் இடைக்காடர், அவ்வையார், நக்கீரனார், அரிசில் கிழார், நத்தத்தனார், மாங்குடி மருதனார் மற்றும் சிறுகருந்தும்பியார் போன்ற புகழ்பெற்ற புலவர்கள் பலர் பாடியுள்ளனர். மதுரையில் தான் இந்நூல் அரங்கேறியதாகவும் செய்திகள் உண்டு. இதைவிட முக்கியமான செய்தி என்னவென்றால் திருக்குறளில் 'தமிழ்' என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. 'தமிழ்', 'தமிழ்' என்று கூறிக்கொண்டே தமிழை அழிக்கின்ற இக்காலத்தில், தமிழ் என்ற வார்த்தையே இல்லாமல் தமிழின் புகழையும், தமிழரின் புகழையும் இமயத்தில் நிறுத்துகிறது இந்நூல். அறம், பொருள், இன்பம் எனப் பரிணமிக்கப்பட்ட திருக்குறள் தொடாத துறைகளே இல்லை.


வாழ்வியல் அகராதி:

மாணவன் எப்படி இருக்க வேண்டும், மக்கள் எப்படி இருக்க வேண்டும், வணிகர் எப்படி இருக்க வேண்டும் அரசர் எப்படி நாடாள வேண்டும், குடிகள் எப்படி இருக்க வேண்டும், இல்வாழ்க்கையின் மகத்துவம் என்ன? விவசாயி எப்படி நிலத்தை பக்குவப்படுத்த வேண்டும் என்ற அனைத்து கருத்துக்களும் இதில் உள்ளன. அறச் செய்திகள், அன்பு செய்திகள், ஊர் செய்திகள் மற்றும் போர் செய்திகள் கலந்த கருத்துக் கருவூலமாக இந்நூல் திகழ்கிறது.


இல்லாதது எதுவும் இல்லை:

''1330 திருக்குறளையும் நீ கற்றுவிட்டால் நீ தான் தமிழ்ப்புலவர். உன்னுடைய பேச்சைக் கேட்க பலர் விரும்பி வருவர்,'' என்கிறார் நத்தத்தனார். எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை, என்கிறார் பழமையான மதுரையை சேர்ந்த தமிழ்நாகனார்.
* மாணவர்கள் கல்வி (அதிகார எண் 40) என்ற அதிகாரத்தை கட்டாயம் படிக்க வேண்டும்.


* பழி வாங்க துடிப்போர் இன்னா செய்யாமை (32) என்ற அதிகாரத்தை படிக்க வேண்டும்.


* துறவு செய்ய நினைப்போர் துறவு (35) என்ற அதிகாரத்தை படிக்க வேண்டும்.


* தந்தை, தாயை மதிக்காமல் முதியோர் இல்லங்களில் சேர்ப்பவர்கள் பெரியோரைத் துணைக்கோடல் (45) என்ற அதிகாரத்தை படிக்க வேண்டும்.


* வாழ்க்கையில் விரக்தி அடைந்தோர் ஊக்கம் உடைமை (60) என்ற அதிகாரத்தை படிக்க வேண்டும்.


* நாட்டை ஆள்பவர்கள் இறைமாட்சியையும் (39), அமைச்சர்கள் அமைச்சு (64), மன்னரின் அருகிலிருப்பவர்கள் மன்னரைச் சேர்ந்த ஒழுகல் (70), நண்பர்கள் நட்பு (79), தீ நட்பு (82) என்ற அதிகாரங்களையும், மருத்துவர்கள் மருந்து (95) என்ற அதிகாரத்தையும், நாட்டையே அழித்துக் கொண்டிருக்கும் கள் பழக்கத்திற்கு அடிமையானோர் கள் உண்ணாமை (93) என்னும் அதிகாரத்தையும் கட்டாயம் படிக்க வேண்டும்.

''துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்


நஞ்சு உண்பார் கள்உண் பவர்''

கள் உண்பவர்கள் நஞ்சு உண்பவர்களே! அவர்கள் குடிப்பது மதுவல்ல நஞ்சு என்று கடுமையாக சாடுகிறார் திருவள்ளுவர். அன்புடைமை, இனியவை கூறல், பண்புடைமை, ஒழுக்கமுடைமை, அறிவுடைமை போன்ற அதிகாரங்களை அனைவரும் கற்க வேண்டும். அன்புடைமை என்ற எட்டாவது அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களிலும் அன்பு என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும்.


கட்டமைப்பு:

திருக்குறள் என்னும் நூலின் கட்டமைப்பை அதாவது அதிகார அமைப்பை ஆராய்ந்தால் ஆச்சர்யமாக இருக்கும். மூன்றாவது அதிகாரத்தில் இருந்து பார்த்தால் அதிகாரங்களுக்குள்ளேயே ஒரு தொடர்பு இருக்கும். அறன் வலியுறுத்தல் (அதிகாரம்4), இல்வாழ்க்கை (5), வாழ்க்கை துணை நலம் (6), மக்கட்பேறு (7), அன்புடைமை (8), விருந்தோம்பல் (9), இனியவை கூறல் (10) இவைகளெல்லாம் வரிசையாக அமைந்த அதிகாரங்கள். பொருட்பாலில் உள்ள அதிகாரங்களை பார்த்தோமேயானால் கண்ணோட்டம், ஒற்றாடல், விளக்கம் உடைமை, மடி இன்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை, அமைச்சு, சொல்வன்மை, வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினை செயல்வகை, தூது, குறிப்பறிதல், அவை அறிதல், அவைஅஞ்சாமை, நாடு என்று அதிகாரங்கள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக செல்லும்.


திருக்குறள் படிக்க வைக்கலாம்:

சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு தண்டனையாக தண்டத்தொகை வசூலிப்பதை விட திருக்குறளை படிக்கச்செய்யலாம். சிறைக் கைதிகளுக்கு திருக்குறள் வகுப்புகள் நடத்தலாம். பள்ளி, கல்லூரிகளில் பிரச்னை தரும் மாணவர்களுக்கு திருக்குறளின் மேன்மையை கற்பிக்கும் போது அவர்கள் மென்மையானவர்களாக மாறும் வாய்ப்புண்டு.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை


ஆரிருள் உய்த்து விடும் - என்று குறளை படிக்கும் போது, தீவிரவாதி மிதவாதியாக ஆவதற்கு வாய்ப்பில்லாமல் போனாலும், மிதவாதியாக இருக்கும் ஒருவன் தீவிரவாதியாக மாறாமல் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. திருக்குறள் கற்றதால் வாழ்வியல் மாறிய சம்பவங்கள் நிறைய உண்டு. மேடையிலே பேசும்போது, திருக்குறளை சொன்னால் அப்பேச்சு அர்த்தம் செறிந்ததாக கூறப்படுவதுண்டு. ஒரு ஊருக்குச் செல்ல பல பாதைகள் உண்டு. நாம் நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்தால் பயணம் சிறப்பாயிருக்கும். மனிதர்கள் உய்ய எத்தனையோ வழிகளுண்டு. ஆனால் சரியான வழி என்னவென்றால் அது திருக்குறள் வழியேயாகும். திருக்குறள் காட்டும் பாதையே நாம் வணங்கக்கூடிய திருப்பாதை.

- கடமலை சீனிவாசன், திருவள்ளுவர் வாசகர் வட்ட தலைவர், கடமலைக்குண்டு 94424 34413.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஈரோடுசிவா - erode ,இந்தியா
19-டிச-201422:37:46 IST Report Abuse
 ஈரோடுசிவா உலகம் முழுவதும் உள்ள மதம் மற்றும் வேத நூற்களை விட பன்மடங்கு உயர்வானது வள்ளுவனாரின் திருக்குறள் .....
Rate this:
Share this comment
Cancel
GUNA - chennai,இந்தியா
19-டிச-201420:32:42 IST Report Abuse
GUNA "ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை " என்ற இந்தக் குறளைப் படிக்கும் பொழுதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி எழும். "ஈன்றாள் - சான்றோர்" என்பதை விட "ஈன்றோர் - சான்றோர்" என்பதில் சொற்களின் அமைப்பு சிறப்பாக இருக்கிறது.அப்படி அமைக்க வாய்ப்பிருந்தும் தந்தையை ஒதுக்கி விட்டு ஈன்றாள் என்று தாயை மட்டும் வள்ளுவர் கூறியதற்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கக் கூடுமா? ஒரு சிலரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன் .அவர்கள் கூறிய விளக்கம் பொருத்தமாக இல்லை. யாரேனும் விளக்கம் கூறினால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Guru Tamil - Chennai,இந்தியா
19-டிச-201416:36:10 IST Report Abuse
Guru Tamil ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் எளிமையான தொகுப்பே திருக்குறள் என்பது முற்றிலும் பொய்யான தகவல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X