சொத்து குவிப்பு வழக்கின், 'அப்பீல்' மனுக்கள் மீதான விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்கும்படி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல், ஜன., 2ம் தேதி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதை தொடர்ந்து, நீதிபதி நியமனம், விசாரணை என, 'அப்பீல்' வழக்கு விசாரணை சூடுபிடிக்க துவங்கும்.
அப்பீல் மனு:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, பெங்களூரு தனி நீதிமன்றம், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஜெ.,வுக்கு, 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, நால்வரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த செப்டம்பரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின், நால்வருக்கும், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெ., உள்ளிட்ட நால்வர் சார்பில், 'அப்பீல்' மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டு உள்ளன. வழக்கு தொடர்பான ஆவணங்கள், நகல்கள் எடுக்கப்பட்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டன.கடந்த வாரம், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமின் மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கிறிஸ்துமஸ் விடுமுறை:
அப்போது, ஜாமினை, நான்கு மாதங்களுக்கு நீட்டித்தும், அப்பீல் வழக்கை, மூன்று மாதங்களில் முடிக்கவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவின் நகலை, ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றத்தில் பெற்ற பின், சென்னை திரும்பினர்.அடுத்ததாக, இந்த வழக்கை விசாரிக்க போகும், நீதிபதி யார் என்பதை, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும்.அதற்கு முன், உச்ச நீதிமன்ற உத்தரவை, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்கு அனுப்ப வேண்டும். தற்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு, கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டுள்ளது.
விசாரணை:
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை, கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம், ஜன., 2ம் தேதி, ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் அளிக்க உள்ளனர்.அதன்பின், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி யார் என்பதை, தலைமை நீதிபதி அறிவிப்பார். தொடர்ந்து, அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை துவங்கும்.அப்பீல் மனு விசாரணையின் போது, ஜெயலலிதா மற்றும் சசிகலா சார்பில், டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, நாப்டே, அமித் தேசாய் உள்ளிட்டோர் ஆஜராவதற்கான வாய்ப்பு உள்ளது. ஜனவரியில் இருந்து, சொத்து குவிப்பு வழக்கின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை விரைவு பெறும்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE