மும்பை: பங்குச் சந்தையில், பல நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணத்தை புழக்கத்தில் விட்டு, வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) மேலும் பல நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
முறைகேடு:
குறிப்பாக, கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பங்குத் தரகர்கள் உள்ளிட்டோரின் முறைகேடான பரிவர்த்தனைகளை 'செபி' ஆராயத் துவங்கியுள்ளது.இதையடுத்து, 500 கோடி ரூபாய் அளவிற்கு நடைபெற்ற, முறைகேடான பரிவர்த்தனைகளுக்காக, பர்ஸ்ட் பைனான்சியல் சர்வீசஸ், ராட்போர்ட் குளோபல் என்ற இரண்டு நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்திற்கு 'செபி' கடந்த வாரம் தடை விதித்தது.இவற்றுடன் தொடர்புள்ள, 260 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் பங்கு வர்த்தகத்திற்கும், சென்ற, 19ம் தேதி தடை விதிக்கப்பட்டது.அவற்றில், பர்ஸ்ட் பைனான்சியல் சர்வீசஸ், அதன் ஏழு நிறுவனர்கள், இயக்குனர்கள், 80 முன்னுரிமை பங்குதாரர்கள், குழுமம் சார்ந்த, 57 நிறுவனங்கள் உட்பட, மொத்தம், 152 பேர், பங்கு வர்த்தனையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
தடை விதிப்பு:
அது போன்று, ராட்போர்ட் குளோபல் நிறுவனர்கள், இயக்குனர்கள், முன்னுரிமை பங்குதாரர்கள் உட்பட, 80 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட நிறுவனங்கள், 46 பேருக்கு முன்னுரிமை பங்குகளை ஒதுக்கி, சந்தையில் அவற்றின் விலையை செயற்கையாக உயர்த்திய பின்னர், அவற்றை விற்று, கொள்ளை லாபம் கண்டு உள்ளன. இத்துடன், மூலதன ஆதாய வரி ஏய்ப்பும் நடைபெற்றுள்ளதற்கான ஆதாரங்கள், செபியிடம் சிக்கியுள்ளன. இதை தொடர்ந்து, இந்நிறுவனங்கள் மீது, அமலாக்கத் துறை, வருமான வரி துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தீவிரம்:
இது தவிர, பங்குச் சந்தை பட்டியலில் பெயரளவில் மட்டுமே உள்ள 25 நிறுவனங்கள் குறித்தும், காணாமல் போன அவற்றின் முகவரி மற்றும் நிறுவனர்கள் குறித்த ஆய்வையும், 'செபி' முடுக்கி விட்டுஉள்ளது.வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை மீட்பதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக, உள்நாட்டில் உள்ள கறுப்பு பணத்தையும் கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், தற்போது 'செபி' பங்குச் சந்தை ஊழல் நிறுவனங்களை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பர்ஸ்ட் பைனான்சியல்சர்வீசஸ் :
80 பேருக்கு முன்னுரிமை பங்குகளை ஒதுக்கியுள்ளது. இதில், 14.50 கோடி ரூபாய் முதலீடு செய்து, 20 மாதங்களில், 1,087 சதவீதம், அதாவது, 172.21 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
ராட்போர்ட்குளோபல் :
46 பேருக்கு 12.99 கோடி ரூபாய் முதலீட்டில், முன்னுரிமை பங்குகளை ஒதுக்கி, 18 மாதங்களில், 2,309 சதவீதம், அதாவது, 313 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து உள்ளது.
- நமது நிருபர் -