வல்சாட் : குஜராத்தில், விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட, மீள் மதமாற்ற நிகழ்ச்சியில், 225 கிறிஸ்தவர்கள், இந்து மதம் திரும்பினர். தாய் மதம் திரும்பிய அனைவருக்கும், இந்துக்களின் புனித நுாலான பகவத் கீதை வழங்கப்பட்டது.
குஜராத் மாநிலம், வல்சாட் மாவட்டதில் உள்ள அர்னாய் கிராமத்தில், ஏராளமான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தை தழுவிய சிலரும் வசிக்கின்றனர்.இந்நிலையில், இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறியவர்களை, மீண்டும் தாய் மதத்திற்கு அழைத்து வரும் பணியை, விஷ்வ இந்து பரிஷத் மேற்கொண்டு உள்ளது. அவ்வகையில், வல்சாட் மாவட்டத்தில், இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்களை, மீண்டும் தாய் மதத்தில் இணைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டது.
நேற்று, அர்னாய் கிராமத்தில் நடத்த மீள் மதமாற்ற நிகழ்ச்சியில், 225 கிறிஸ்தவர்கள், மீண்டும் தாய் மதம் திரும்பினர். இவர்கள் அனைவரும், மீண்டும் இந்து மதத்தை தழுவ சம்மதம் தெரிவித்து, அதற்கான வேள்வியில் கலந்து கொண்டனர். வி.எச்.பி., சார்பில், சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தப்பட்டது. பின், 225 பேரும் தாய் மதத்திற்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும், இந்துக்களின் புனித நுாலான, பகவத் கீதை வழங்கப்பட்டது.இந்து மதத்திலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்கள், மீண்டும் தாய் மதத்தை அடைந்திருப்பதாகவும், இது, அவர்களின் முழு விருப்பத்தின் அடிப்படையில் நடப்பதாகவும், வி.எச்.பி., தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
புகார் கொடுக்கவில்லை!
இந்த விவகாரம் குறித்து. யாரும் புகார் கொடுக்கவில்லை என்றும், பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு, தடை விதிக்க முடியாது என்றும், மாநில அரசு தெரிவித்துள்ளது.'எவரும், எந்த மதத்தையும் கடைபிடிக்கும் சுதந்திரம் இருக்கையில், சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நடக்கும், மீள் மத மாற்றத்தில் எந்த தவறும் இல்லை' என, மாநில அரசு உயரதிகாரி தெரிவித்து உள்ளார்.
மீண்டும் கொந்தளிப்பு!
சமீபத்தில், உ.பி., மாநிலம், ஆக்ராவில் பஜ்ரங் தள் சார்பில் நடத்தப்பட்ட மீள் மதமாற்ற நிகழ்ச்சியில், சில முஸ்லிம்கள் மீண்டும் இந்து மதத்தை தழுவினர். இந்நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராஜ்யசபாவில், இப்பிரச்னையை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து, பிரதமர் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில், குஜராத்தில் வி.எச்.பி., அமைப்பினரின் செயல்பாடு, வேற்று மதத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE