60 லட்சம் பேர் தமிழக பா.ஜ.,வில் சேர்ந்தால் ஆட்சி அமைவது உறுதி: அமித் ஷா| Amit shah order to join 60 lakh workers | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

60 லட்சம் பேர் தமிழக பா.ஜ.,வில் சேர்ந்தால் ஆட்சி அமைவது உறுதி: அமித் ஷா

Updated : டிச 22, 2014 | Added : டிச 22, 2014 | கருத்துகள் (68)
Share
கடந்த இரு நாட்களாக, சென்னையில் முகாமிட்டிருந்த, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, நேற்று காலை,தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடனும், மாலையில் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், 'முதலில், 60 லட்சம் பேரை கட்சியில் சேருங்கள்; ஆட்சி அமைப்பது என் பொறுப்பு' என்றார்.தமிழக பா.ஜ., அலுவலகமான, கமலாலயத்தில், நேற்று காலையில், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஒரு மணி நேரம்
 60 லட்சம் பேர் தமிழக பா.ஜ.,வில் சேர்ந்தால் ஆட்சி அமைவது உறுதி: அமித் ஷா

கடந்த இரு நாட்களாக, சென்னையில் முகாமிட்டிருந்த, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, நேற்று காலை,தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடனும், மாலையில் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், 'முதலில், 60 லட்சம் பேரை கட்சியில் சேருங்கள்; ஆட்சி அமைப்பது என் பொறுப்பு' என்றார்.

தமிழக பா.ஜ., அலுவலகமான, கமலாலயத்தில், நேற்று காலையில், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொறுப்பாளர் முரளீதர் ராவ், தேசிய செயலர் எச்.ராஜா, மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், வானதி சீனிவாசன் மற்றும் கோவை செல்வக்குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், 13 கோட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், தமிழகத் தில் ஆட்சி அமைப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள வியூகம் குறித்து, அமித் ஷா விரிவாக விவரித்தார். தமிழகத்தில் கட்சிக்கு வலுவூட்ட தேவையான ஆலோசனைகளையும், அதற்கான உத்திகளையும் அவர் கூறினார்.அதை தொடர்ந்து, குரோம்பேட்டையில் நடந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட மையக் குழு பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, சில அதிரடி கட்டளைகளை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின், அமித் ஷா சந்தித்து வரும் மாநில தேர்தல்களில் எல்லாம், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக, அவரது அதிரடி அரசியல் வியூகத்திற்கு, பா.ஜ.,வில் மிகப்பெரியவரவேற்பு கிடைத்துள்ளது.தமிழகத்திலும் அதை செயல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு, கட்சியினர் மத்தியில் ஆழமாக பதிந்திருப்பதால், நேற்றைய கூட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அதை பூர்த்தி செய்யும் விதத்தில், மாநில நிர்வாகிகள் கூட்டத்திலும், அதை தொடர்ந்து நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்திலும் அமித் ஷா, முக்கியமான சில ஆலோசனைகளை கூறினார்.

அதில் முக்கியமானது, தமிழகத்தில் உள்ள, 60 ஆயிரம் பூத்துகளிலும், தலா 100 பேர் வீதம், 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது தான். '60 லட்சம் பேரை சேர்த்த பின், என்னிடம் வாருங்கள்; நான் இங்கே ஆட்சி அமைத்து காட்டுகிறன்; அது என் பொறுப்பு' என, திட்டவட்டமாக தெரிவித்தார்.'ஒரு பூத் பொறுப்பாளருக்கு, இரண்டு உறுப்பினர் சேர்க்கை புத்தகம் வழங்க வேண்டும். போலி உறுப்பினர்கள் என, ஒருவரும் இருக்க கூடாது. மூன்று மாதங்களில், 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்; இதுவே, நமது இலக்கு. மகாராஷ்டிரா மாநிலத்தில் செய்ததை போல, இந்தியாவின் முழு சக்தியையும் தமிழகத்தில் இறக்கி, பா.ஜ., ஆட்சியை தமிழகத்தில் மலர செய்வேன்' என்றும் உறுதி அளித்தார்.இத்துடன், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, தமிழக சட்டசபை தேர்தலை, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, முதல்வர் வேட்பாளர் யார் என அறிவித்த பிறகே, எதிர்கொள்ளும் என்றும், அமித் ஷா கூறினார்.இவ்வாறு, மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உறுப்பினர் சேர்க்கை எப்படி?


1 தமிழகம் முழுவதும், குக்கிராமம் முதல், மாநகரங்கள் வரை, மூலை முடுக்கு, சந்து பொந்து எல்லா இடங்களிலும், ஒரே நாளில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
2 பேருந்து நிலையம், சினிமா திரையரங்கம், ஷாப்பிங் மால் என, எல்லா இடங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை,
நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்.
3 உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, ஜனவரியில் ஒரு ஆய்வு கூட்டம், பிப்ரவரியில் ஆய்வு கூட்டம் என, மாதந்தோறும் நடத்த வேண்டும். ஒவ்வொரு பூத்திலும், பா.ஜ.,வுக்கு கமிட்டி இருக்க வேண்டும்.
4 உள்ளூர் பிரச்னைகளை கையில் எடுக்க வேண்டும். அந்தந்த ஊர்களில் உள்ள நிர்வாகிகள், அங்குள்ள பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அவற்றை தீர்க்க பாடு பட வேண்டும்.
5 அரசியல் பிரச்னைகளை கையில் எடுக்க வேண்டும். இதை நோக்கியே, தமிழக பா.ஜ.,வின் பயணம் அமைய வேண்டும்.


கேள்வியால் திணறிய நிர்வாகிகள்:

தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில், கோட்ட பொறுப்பாளர்கள், 13 பேரும் கலந்து கொண்டனர். அவர்களிடம், அந்த கோட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக செய்துள்ள பணிகள் குறித்து அமித் ஷா விசாரித்தார்.அப்போது திடீரென்று, தமிழகத்தில் எவ்வளவு பூத்துகள் (ஓட்டுச் சாவடிகள்) உள்ளன என, கேட்டுள்ளார். அதற்கு சரியான பதிலை உடனடியாக சொல்ல முடியாமல், ஆளுக்கொரு கணக்கை கூறியுள்ளார்.அவர்கள் திணறியதை பார்த்த அமித் ஷா சிரித்துள்ளார். பின் விசாரித்து, சரியான எண்ணிக்கையை அவரிடம் கூறியுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X