அபரிமிதமான அன்பு: ஆதரவா, ஆபத்தா...| Dinamalar

அபரிமிதமான அன்பு: ஆதரவா, ஆபத்தா...

Added : டிச 23, 2014 | கருத்துகள் (18)
அபரிமிதமான அன்பு: ஆதரவா, ஆபத்தா...

விஞ்ஞான வளர்ச்சி பல துறைகளில் சமுதாயம் முன்னேற வழி வகுத்துள்ளது. ஒரு தனி மனிதனின் வளர்ச்சி என்பது, 50 ஆண்டுக்கு முன்பெல்லாம் சுலபமான காரியமில்லை.

பிறப்பிலேயே வசதி படைத்தவராக, பணம் படைத்தவராக, அதிகாரம் மிக்கவராக அல்லது அரசியல் பின்புலம் உள்ளவராக இருந்தால் மட்டுமே, ஒருவன் அவன் தொழிலில், சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும். ஆனால், இன்று விஞ்ஞான வளர்ச்சி இவைகளை தகர்த்தெறிந்து விட்டது. திறமைக்கு வரவேற்பு உள்ள காலம் இது. ஆண், பெண், ஏழை, எளியவர் என்ற பாகுபாடு எதுவும் இன்றி, திறமைக்கு தீனி போட காத்து கொண்டு இருக்கின்றன, பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள். ஜாதி கட்டுப்பாடு, இன கட்டுப்பாடு, பெண் அடிமைத்தனம் என பல முட்டுக்கட்டைகள் தகர்த்தெறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாம் அடைந்துள்ள சமுதாய வளர்ச்சி, இன்றைய இளைய சமுதாயத்தை சீரான பாதையில் கொண்டு செல்கிறதா?

உலகிலேயே அதிக எண்ணிக்கை கொண்ட இளைய சமுதாயம் என்ற பெருமையை, நாம் நம் நாட்டின்
வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டுமேயானால், அதற்கான பொறுப்புகளும், கடமைகளும் நம் அனைவருக்கும் உண்டு. இதில் பெரும்பாலான பங்கு பெற்றோர், ஆசிரியர்களுக்கும் உண்டு.

பெற்றோரின் பங்கு: இன்றைய இளைஞர்களின் அத்தியாவசிய தேவையே, வாழ்க்கையை வாழ கற்று கொள்வது தான். கற்றுத் தர வேண்டிய பொறுப்பு கண்டிப்பாக பெற்றோர்களுக்கு உள்ளது. பெற்றோர்களை பார்த்தே பிள்ளைகள் வளர்கிறார்கள். தற்போதைய காலத்து பெற்றோர்கள், 'நான் கஷ்டப்பட்ட மாதிரி என் பிள்ளை கஷ்டப்படக்கூடாது' என்று, அன்பின் மிகுதியால், கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியக்கூடாது என்று எண்ணி, அவர்கள் கேட்டதையெல்லாம், சக்திக்கு மீறி வாங்கி கொடுக்கிறார்கள். ஆனால், பொருள் தேவை தானா, அவசியமானதா, ஆடம்பரமானதா? என்பதை எல்லாம் ஆராய்வதும் இல்லை. அதை பிள்ளைகளுக்கு எடுத்துரைப்பதும் இல்லை. 'நாலு பேருக்கு முன்னால் என் புள்ள ராஜா மாதிரி இருக்கணும்' என்று கேட்ட பொருட்கள், ஆடம்பர ஆடைகள், மொபைல் போன், பைக் என்று வாங்கி கொடுத்து மகிழ்கின்றனர். சிக்கனம் என்பது காணாமல் போய்விட்டது. இதன் விளைவு மறைமுகமாக இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது. அவர்கள் தாங்கள் எதை நினைத்தாலும், உடனே அதை அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அன்பும் இதற்கு விதி விலக்கல்ல. காதல் திருமணங்கள் அதிகரித்து வரும் அதே நிலையில் திருமண முறிவுகளும் அதிகரித்து வருகின்றன. காரணம் அதிக எதிர்பார்ப்பு, பொறுமையின்மை. எதையும் நினைத்த நேரத்தில் அடைவதில் உள்ள அவசரம். அவர்களை வாழ்க்கையில் முடிவு எடுப்பதிலும் விட்டு வைக்கவில்லை.

வாழ்வியல்: குழந்தைக்கு ஆரோக்கியம், கல்வியறிவு மற்றும் ஏனைய செல்வங்களை நல்ல முறையில் அளிக்க வேண்டும் என்று எண்ணும் அதே சமயம், வாழ்வியலையும் கற்றுத்தர வேண்டும். பிள்ளைகளுக்கு குடும்ப வருவாய், குடும்ப சூழல் தெரிய வேண்டும். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருள் எது என்பதை தீர்மானிக்க தெரிய வேண்டும். ஒரு பொருள் தங்களுடைய தேவையை பூர்த்தி செய்தால் போதும். மற்றபடி அடுத்தவர்களுடைய கவனத்தை ஈர்க்கவோ, பகட்டின் வெளிப்பாடாகவோ இருக்கத் தேவையில்லை என்பதை உணர வைக்க வேண்டும். எளிமையான வாழ்வும் இனிமையானதே என்பதையும் உணர்த்த வேண்டும்.

ஆசிரியர்களின் பங்கு: பெற்றோர்களுக்கு அடுத்து ஆசிரியர்களின் பொறுப்பே பெரும் பங்கு வகிக்கிறது. கீழ்தட்டு, மேல்தட்டு என அனைத்து தரப்பிலிருந்தும் வரும் மாணவர்களை, ஒரு சேர இணைக்கும் இடம் கல்விக்கூடம். அங்கே ஆசிரியர், மாணவர்களுக்கு பாடப்படிப்பு மட்டுமன்றி வாழ்க்கையின் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வைக்க வேண்டும். அது இயற்கை என்பதை புரிய வைக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம், முயற்சி வேண்டும். ஆனால், அதுவே பேராசையாக மாறி, மன அழுத்தத்தை ஏற்படுத்தி வாழ்க்கையை திசை திருப்பி விடக்கூடாது.
ஆசிரியர்கள் இன்றைய இளைஞர்களுக்கு முற்போக்கு சிந்தனையை ஊட்ட வேண்டும். அவர்கள் இன்றைய புதிய நாகரிக வாழ்க்கையின் மேல் மோகம் கொண்டு ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும். இன்றைய சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் இளைய சமுதாயத்தை
சீர் திருத்துவதில் பெற்றோர், ஆசிரியர் மட்டுமன்றி, அனைவருக்கும் பல கடமைகள் இருக்கிறது.

பழங்காலம்: பசுமையான கிராமங்கள், வற்றாத நீர்நிலைகள், அமைதியான கோயில்கள், அன்பு பாராட்டும் சொந்தங்கள் என மன மகிழ்ச்சியோடு ஒரு மனிதன் வாழ்ந்த காலம் 'பழங்காலம்' ஆகி விட்டது. இன்று வசதிகள் பெருகி விட்டது. உலகம் சுருங்கி விட்டது. அனைத்திலும் வேகம், அஞ்சல்கள், மின் அஞ்சல்கள் ஆகி விட்டன. தொலைபேசிகள் அலைபேசிகளாக மாறிவிட்டன. தனி மனித சுதந்திரம் தழைத்து ஓங்கி உள்ளது. இன்றைய இளைஞர்கள் திறமையானவர்கள். சுறுசுறுப்பானவர்கள். உழைக்க சளைக்காதவர்கள். இவ்வளவு நற்பண்பு இருந்தாலும், களை எடுக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. 'ஆடம்பரமான வாழ்க்கை, அவசரமான வாழ்க்கை, உள் அன்பில்லாத பொய்யான வாழ்க்கை' என பல சிக்கல்கள் அவர்களை சூழ்ந்து வருகிறது. இதனால் அவர்கள் சந்திக்கும் இழப்புகள் பல. எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை அளிக்கும் பட்சத்தில், மன அழுத்தத்திற்கு ஆளாகி, தம் வாழ்க்கையை துறக்கும் அளவுக்கு விலை மதிப்பற்ற உயிரை விடவும் துணிகின்றனர்.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா”. நம்முடைய செயலின் பிரதிபலிப்பே நம்மை ஆட்டுவிக்கும் வினையாகும் என்பதை அவர்கள் உணரவில்லை. வாழ்க்கையின் குறிக்கோள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இவை நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது அல்ல.

- எல்.விசாலாட்சி,
பேராசிரியர்,
உமையாள் ராமனாதன் மகளிர் கல்லூரி,
காரைக்குடி.
94427 57770.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X