""வௌரமா சொல்லுக்கா, என்ன விஷயம்... எங்க தேர்தல் நடந்துச்சு?' என்றபடி, தட்டில் இருந்த முந்திரி பக்கோடாவை சுவைக்க ஆரம்பித்தாள் மித்ரா.
""மாநகர தி.மு.க., நிர்வாகிகள் தேர்தல் நடந்துச்சு இல்லே. அதுல, "மாஜி' மேயர் ஆதரவு நாகராஜ் கோஷ்டியும், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரத்தினசாமி கோஷ்டியும் போட்டி போட்டுச்சு. தேர்தல் விதிமுறையை மீறிட்டதா சொல்லி, ரத்தினசாமி கோஷ்டி, தேர்தலை புறக்கணிச்சுட்டு வெளிநடப்பு செஞ்சுட்டாங்க. தேர்தல் நடந்ததுக்கு அப்புறம் பார்த்தா, மொத்த ஓட்டு 145ல், நாகராஜ் கோஷ்டி 119 ஓட்டு வாங்கி ஜெயிச்சிடுச்சு. ரத்தினசாமி அணி ரொம்ப கம்மியான ஓட்டுதான் வாங்கியிருக்க வாய்ப்பிருக்கு. இதை முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு, தேர்தலை புறக்கணிக்கிறதா சொல்லிட்டு, "கவுரவமா' வெளியேறிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""தோல்வி உறுதின்னு முன்னமே தெரிஞ்சுட்டா, தேர்தலையே புறக்கணிக்கறது அவங்க பாணிதானே? அதைத்தானே கட்சிக்காரங்களும் "பாலோ' பண்ணுவாங்க?,'' என சிரித்தபடி, பக்கோடாவை காலி செய்தாள் மித்ரா.
""அனுமதியில்லாத கட்டடத்துக்கு "சீல்' வைக்கிற அளவுக்கு, நம்மூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு துணிச்சல் வந்திருக்கு; ஆச்சரியமா இருக்கு,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""அதுவாக்கா... ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்தியாகணுமே! இல்லைன்னா, கோர்ட் படியேறி, பதில் சொல்ல வேண்டியிருக்குமே. "சீல்' வைக்கிற அன்னைக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு, சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன்ல கோர்ட் உத்தரவு நகலை கொடுத்திருக்காங்க. குறிப்பிட்ட நேரத்துல போலீஸ் வரலை. உத்தரவு நகல் கொடுத்த அதிகாரியே மீண்டும் ஸ்டேஷனுக்கு போயி கூப்பிட்டிருக்கார். உத்தரவு நகலை வாங்கிய போலீஸ்காரர், தன்னோட டேபிளில் வைச்சு பூட்டிட்டு வெளியே போயிருக்கார். கையில் உத்தரவு இல்லாமல் வர முடியாதுன்னு மத்த போலீஸ்காரங்க சொல்லி அனுப்பிட்டாங்க. இருந்தாலும், போலீஸ் பாதுகாப்பு இல்லாமலேயே அதிகாரிங்க, "சீல்' வச்சுட்டு வந்தாங்க. நீங்க சொன்ன மாதிரி, "சீல்' வச்ச துணிச்சலுக்காக பாராட்டலாம்,'' என்றாள் மித்ரா.
""தண்ணீர் லாரிக்காக எவ்வளவு செலவு செய்றாங்கன்னே தெரியலைனு, கவுன்சிலருங்க புலம்புறாங்க,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""தண்ணீர் லாரின்னா... நம்ம கார்ப்பரேஷன் அலுவலகத்தில் தானே?'' என்று கேட்டாள் மித்ரா.
""ஆமாம்... பள்ளிகள், அங்கன்வாடிகள் மற்றும் குடிசைப்பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காம இருக்காங்க. அதனால, தனியார் லாரிகள் மூலமாக குடிநீர் கொடுக்குறாங்க. முன்னாடி, மாசம் 12 லட்சம் ரூபாய் செலவாகுதுனு, கார்ப்பரேஷன் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வருவாங்க. இப்ப, குடிநீர் செலவுனு மொட்டையா முடிச்சுக்குறாங்க. கவுன்சிலர்களும் கேள்வி கேக்கிறதே இல்லை. எவ்வளவு செலவு செய்றாங்கன்னே தெரியலைனு, எதிர்க்கட்சி கவுன்சிலருங்க புலம்பிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""விலைவாசி ஏறுன மாதிரி, கமிஷனையும் உயர்த்திட்டதா சொல்றாங்க,'' என்ற மித்ரா, பதிலை எதிர்பாராமல், ""மாநகராட்சியில் 15 சதவீதமா இருந்த கமிஷன், 20 சதவீதம் வரைக்கும் உயர்ந்திடுச்சாம். இஷ்டம் இருந்தா செய்யுங்க; இல்லாட்டி,
வேற ஆளை பார்க்கிறோம்னு கறாரா சொல்றாங்க. 20 சதவீதம் வெட்டுறோம்னு சொல்லி,
வேலையை எடுக்கிறாங்க. அப்படீன்னா... மாநகராட்சி பணிகளோட தரம் எப்படியிருக்கும்,'' என நொந்து கொண்டாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE